முதல்ல யாரு பேசுறது? ராஜ்யசபாவில் அதிமுக- திமுக இடையே கடும் மோதல்!
டெல்லி: பார்லிமென்ட் ராஜ்யசபாவில் முதலில் யார் பேசுவது என்பது தொடர்பாக திமுக மற்றும் அதிமுக எம்.பி.க்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. .
ராஜ்யசபாவில் நிதி மற்றும் ரயில்வே மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. முதலில் பாஜகவின் அருண்ஜேட்லி பேசிவிட்டு வெளிநடப்பு செய்தார். பின்னர் ராஜ்யசபா துணைத் தலைவர் பி.ஜே. குரியனிடம் சென்ற அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் அதிமுகவுக்கு முதலில் பேச வாய்ப்பளிக்க வேண்டும் என்றார். இதன்படி மைத்ரையன் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
ஆனால், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த திமுக உறுப்பினர் திருச்சி சிவா, சபை விதிகளின்படி அதிக எண்ணிக்கை உள்ள கட்சிகளின் உறுப்பினர்கள் பேச முதலில் வாய்ப்பளிக்க வேண்டும். இல்லையென்றால் இந்த சபையை நடத்த விடமாட்டேன் என்றார். அவருக்கு திமுக உறுப்பினர்கள் கனிமொழி, கே.பி. ராமலிங்கம் ஆகியோர் ஆதரவு தெரிவித்துக் குரல் கொடுத்தனர். ஆனால் அதிமுக உறுப்பினர்கள் டாக்டர் வா. மைத்ரேயன், ஆ. இளவரசன், பி. மனோஜ் பாண்டியன், என். பாலகங்கா ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அப்போது பேசிய மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், சபையை சுமுகமாக நடத்த துணைத் தலைவரின் உத்தரவை ஏன் வாபஸ் பெற கூடாது என்றார். ஆனால், அவ்வாறு செய்ய அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். திருச்சி சிவா, தொடர்ந்து பிடிவாதத்துடன் நின்றதால், அவரது இருக்கைக்கு சென்று மத்திய அமைச்சர்கள் பவன்குமார் பன்சல், ஜெய்ராம் ரமேஷ், ராஜீவ் சுக்லா, ஞானதேசிகன் ஆகியோர் சமாதானப்படுத்தினர். ஆனால், அதை ஏற்க சிவா மறுத்து விட்டார். பின்னர் கனிமொழி தலையிட்டு அவரை சமாதானப்படுத்தினார்.இந்த நிலையில், துணைத் தலைவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் மட்டும் வெளிநடப்பு செய்தார். அதைத் தொடர்ந்து மைத்ரேயன் பேசியதும் திருச்சி சிவா பேசினார்












Click it and Unblock the Notifications