தமிழக வறட்சி மாவட்டங்களில் மத்திய குழு இன்றும் ஆய்வு: முற்றுகையிட்ட விவசாயிகள்
மதுரை: தமிழகத்தில் வறட்சி பாதித்த பகுதிகளில் மத்தியக் குழுவினர், இரண்டாவது நாளாக ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்ற குழுவினரை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பருவமழை பொய்த்ததால், வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் தமிழக மாவட்டங்களை பார்வையிடுவதற்கு 10 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் திங்களன்று தமிழகம் வந்தனர்.
இந்த குழுவினர் இரு பிரிவுகளாக ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். செவ்வாய்கிழமையன்று மானஸ் சவுத்ரி தலைமையிலான மத்திய குழுவினர் திருச்சி,தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து இன்று நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆய்வு செய்தனர்.
இதேபோல் பர்வேஸ் சர்மா தலைமையிலான மற்றொரு குழுவினர், மதுரையில் இருந்து ஆய்வுப் பணிகளை நேற்று தொடங்கினர். பின்னர் சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்திலும் வறட்சி பாதித்த பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அப்போது மத்திய ஆய்வுக்குழுவினரை முற்றுகையிட்ட விவசாயிகள் தங்களின் குறைகளை தெரிவித்து நிவாரணம் கோரினர்.

தூத்துக்குடியில் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று வறட்சியால் பாதிக்கப்பட்ட வாலசமுத்திரம், ஜெகவீரபாண்டியபுரம், எப்போதும்வென்றான், கீழஈரால், மேலஈரால் ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்டனர்.
வாலசமுத்திரத்தில் மாடுவளர்ப்பு குறித்த பணிகளையும், ஜெகவீரபாண்டியபுரத்தில் பண்ணைக்குட்டை அமைக்கும் பணிகளையும், எப்போதும்வென்றானில் கால்நடை தீவனப்பயிர்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து எப்போதும்வென்றான் பகுதியில் உள்ள அணைக்கட்டு மற்றும் வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்கு வந்த மத்திய குழுவினரை அப்பகுதிகளை சேர்ந்த கிராமமக்கள் மற்றும் விவசாயிகள் முற்றுகையிட்டனர். 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் சரியானமுறையில் சம்பளம் தருவதில்லை என்று கூறி முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆய்வுப்பணிகளைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மத்திய அரசின் நிவாரணக்குழுவினர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள், குடிநீர் திட்டப்பணிகளை இன்று பார்வையிட்டுள்ளனர். இதுபோக எப்போதும்வென்றான் அணைக்கட்டையும் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.
இந்த அணைக்கட்டை தூர்வாருவதற்காக 20கோடி ரூபாயில் திட்டமிடப்பட்ட அறிக்கை அரசுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிவாரணக்குழுவினரிடம், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்குவதற்கு தேவையான தொகையை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.
வரும் 9ஆம் தேதி வரை ஆய்வு நடத்தும் இந்த குழு, மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்கிறது. இதனிடையே, மத்தியக் குழுவினர் வரும் 9ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications