கவுண்டிங் ஸ்டார்ட்ஸ்... தென்மேற்கு பருவமழை முன்னக்கூட்டியே தொடங்குகிறது!
சென்னை: அந்தமானில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி மழை வெளுத்து வாங்குவதால், தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது கோடைவெயில் கொளுத்துகிறது. ஆங்காங்கே சதமடிக்கும் வெயிலால் மக்கள் அவதியில் உள்ளனர். அவ்வப்போது வருண பகவான் தன் குளிர்ந்த முகத்தை காட்டுவதால் வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழையும் பெய்து வருகிறது. ஆனபோதும் வெப்பம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகி இதோ மழை தருகிறேன் என்ற மகாசேன் புயலும் திசை மாறி, வங்காள தேசம் மியான்மர் நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இதனால் புயல் தாக்குதலில் இருந்து சென்னை தப்பியது. போகிற போக்கில், மகாசேன் புயல் தமிழ் நாட்டின் மீதான ஈரப்பதத்தை உறிஞ்சி செல்வதால் அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக அந்தமானில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென் மேற்கு பருவ மழை முன் கூட்டியே தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பி.சி.எஸ்.ராவ் தெரிவித்துள்ளார்.
தென் மேற்கு பருவ மழை காலத்தில் கேரளா, கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். கர்நாடகத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கும்.
பொதுவாக தென் மேற்கு பருவ மழையானது ஜூன் முதல் வாரத்தில்தான் தொடங்கும் இந்த ஆண்டும் ஜூன் 1-ந்தேதி தொடங்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்தமான் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மேற்கு பருவ மழை இன்னும் 3 நாள் அல்லது அடுத்த வாரத்தில் முன் கூட்டியே தொடங்கிவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மற்கு பருவ மழை காலத்தில் ஜூன் மாதம் தொடங்கி ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதம் வரை மழை பெய்யும் செப்டம்பர் மாதத்திலேயே வடகிழக்கு பருவ மழையும் தொடங்கிவிடும். செப்டம்பர், நவம்பர், டிசம்பர், மாதம் வரை வடகிழக்கு பருவ மழை நீடிக்கும்.
தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவ மழையின் போது மேற்கு மாவட்டங்களிலும், வடகிழக்கு பருவ மழையின் போது மற்ற மாவட்டங்களிலும் மழை பெய்வது வழக்கம். கடந்த ஆண்டு போதிய அளவு மழை இல்லை. இந்த ஆண்டு மழை சராசரியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications