வாட்டர் கேன் நிறுவனங்கள் ஸ்டிரைக்… ஒரு கேன் தண்ணீர் ரூ.100க்கு விற்பனை

சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அங்கீகாரம் இல்லாத தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் செயல்படுவதாகவும், இந்த நிறுவனங்கள் தரம் இல்லாத தண்ணீரை கேன், பாட்டில், பாக்கெட்டுகளில் நிரப்பி விற்பனை செய்வதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இந்த செய்திகள் அடிப்படையில் தென்னிந்திய தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து வழக்கை பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயத்தின் உறுப்பினர்கள் நீதிபதிகள் சொக்கலிங்கம், பேராசிரியர் நாகேந்திரன், அங்கீகாரம் இல்லாத தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு முறையாக உரிமம் பெறாமல் நடத்தப்பட்ட 103 வாட்டர் கேன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சீல் வைத்தோடு, மின் இணைப்பையும் துண்டித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாட்டர் கேன் தயாரிக்கும் நிறுவனங்கள் கடந்த 15ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குடிநீருக்கு வாட்டர் கேன் பயன்படுத்தும் பெரும்பாலான வீடுகளிலும், அலுவலகங்களிலும் சிக்கல் எழுந்துள்ளது.
ஒரு கேன் ரூ.100க்கு விற்பனை
வாட்டர் கேன் சப்ளை செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதால் சென்னையில் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கேன் தற்போது 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாலை மறியல்
இந்த பிரச்சினை எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாமல் தவிக்கும் மக்கள் சென்னை அசோக் பில்லர் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தினர்.
குடிநீர் வாரியம் ஆறுதல்
இதனிடையே தேவைக்கேற்ப லாரிகள் மூலம் குடிநீர் வழங்க தயாராக இருப்பதால், மக்கள் கவலைப்பட வேண்டாம் என சென்னைக் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.சென்னையில் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதோடு, லாரிகள் மூலமாகவும் விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போன் செய்தால் தண்ணீர்
இது மட்டுமின்றி டயல் ஃபார் வாட்டர் திட்டத்தின் மூலம் 6 ஆயிரம் லிட்டர் நீர் 400 ரூபாய்க்கும், 9 ஆயிரம் லிட்டர் நீர் 600 ரூபாய்க்கும் நேரடியாக வழங்கப்பட்டு வருவதாகவும் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த நீர் பாதுகாப்பானது என்றும் குடிப்பதற்கு ஏற்றது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சேவையைப் பெற 4567 4567 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும், குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications