நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு பெரும் தோல்வி; பாஜக கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது!
டெல்லி: நாடாளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பாஜக கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் என்று ஏபிபி தொலைக்காட்சியும் (முந்தைய ஸ்டார் நியூஸ் சேனல்) நீல்சன் நிறுவனமும் (ABP News-Nielsen) இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் 152 நாடாளுமன்றத் தொகுதிகளில் அடங்களில் தலா 2 சட்டமன்றத் தொகுதிகளில், மொத்தம் 33,408 பேரிடம் வீடு, வீடாக இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் தெரியவந்துள்ள விவரம்:

பாஜக 206-காங் 136:
தேர்தல் நடந்தால் பாஜக கூட்டணி 206 இடங்களில் வெல்லும் என்றும், காங்கிரஸ் கூட்டணி வெறும் 136 இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. இந்த இரு அணிகளிலும் இடம் பெறாத மற்ற கட்சிகள் 167 இடங்களைப் பிடிக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

பாஜக ஆட்சிககு வர மேலும் 66 எம்பிக்களின் ஆதரவு தேவை:
ஆனால், ஆட்சியைப் பிடிக்க 272 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வென்றாலும் அந்தக் கட்சி ஆட்சிக்கு வர மேலும் 66 எம்பிக்களின் ஆதரவு தேவைப்படும். இந்த ஆதரவு கிடைப்பது எளிதல்ல.

யாருக்கும் மெஜாரிட்டி இல்லை:
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மட்டும் தனித்து 206 இடங்களைப் பிடித்தது. ஆனால், இந்தமுறை அதன் எண்ணிக்கை 136 என்ற அளவுக்கு சரியப் போகிறது. அதே நேரத்தில் பாஜக கூட்டணியாலும் மெஜாரிட்டி இடங்களில் வெல்ல முடியாது.

இடதுசாரிகளுக்கு 34 இடங்கள்:
இப்போது தேர்தல் நடந்தால் நாடு முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் 34 இடங்களில் வெல்லும். கேரளத்தில் இடதுசாரிகளுக்கு பெரும் வெற்றி கிடைக்கும், மேற்கு வங்கத்திலும் கடந்த முறையை விட அதிக இடங்களில் இடதுசாரிகள் வெல்வர் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

வடக்கே, கிழக்கே பாஜக:
நாட்டின் வட பகுதிகளில் பாஜக 67 இடங்களிலும் காங்கிரஸ் 36 இடங்களிலும் வெல்லும். கிழக்குப் பகுதிகளில் பாஜக 49 இடங்களிலும் காங்கிரஸ் 33 இடங்களிலும் வெல்லும்.

மோடியால் மேற்கு பகுதிகளில் பாஜகவுக்கு லாபம்:
அதே போல குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் செல்வாக்குக் காரணமாக நாட்டின் மேற்குப் பகுதிகளில் பாஜக 80 இடங்களில் வெல்லும். அதே நேரத்தில் இந்தப் பகுதிகளில் காங்கிரசுக்கு வெறும் 36 இடங்களே கிடைக்கும்.

தெற்கே தீர்மானிப்பது மாநில கட்சிகள்:
தென் மாநிலங்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு 36 இடங்கள் கிடைக்கும். பாஜகவுக்கு வெறும் 10 இடங்களே கிடைக்கும். இங்கு 75 தொகுதிகளை மாநிலக் கட்சிகளே கைப்பற்றவுள்ளன என்கிறது கருத்துக் கணிப்பு.

காங் கூட்டணிக்கு 26%, பாஜக கூட்டணிக்கு 27% ஓட்டு:
ஓட்டுகளைப் பொறுத்தவரை காங்கிரஸ், பாஜக கூட்டணிகளுக்கு இடையே பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. காங்கிரஸ் கூட்டணிக்கு 26 சதவீதம் பேரும் பாஜக கூட்டணிக்கு 27 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 41 சதவீதம் பேர் மற்ற கட்சிகளுக்கும் 6 சதவீதம் பேர் இடதுசாரிகளுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

காங்கிரசிலிருந்து விலகும் வாக்காளர்கள்:
2009ம் ஆண்டு காங்கிரசுக்கு வாக்களித்தவர்களில் 74 சதவீதம் பேர் மீண்டும் அதே கட்சிக்கு வாக்களிப்போம் என்று தெரிவித்துள்ளனர். ஆனால், 26 சதவீதம் பேர் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர். இந்த 26 சதவீதம் பேரில் 9 சதவீதம் பேர் பாஜகவுக்கு வாக்களிக்கப் போவதாகக் கூறியுள்ளனர்.

பாஜகவிலேயே 90 சதவீத வாக்காளர்கள்:
அதே நேரத்தில் கடந்த தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்தவர்களில் 90 சதவீதம் பேர் மீண்டும் அந்தக் கட்சிக்கே வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர். வெறும் 10 சதவீதம் பேர் தான் பாஜகவுக்கு மீண்டும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர். இதிலும் வெறும் 2 சதவீதம் பேர் தான் காங்கிரசுக்கு வாக்களிப்பதாகக் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications