தூத்துக்குடியில் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே தீர்வை ரசீது: புலம்பும் கட்டிட உரிமையாளர்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதியதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு தீர்வை ரசீது கொடுப்பதில் நிலவும் குளறுபடியால் கட்டிட உரிமையாளர்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
தொழில் நகரமான தூத்துக்குடியில் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அனல் மின் நிலையங்கள், மருத்துவமனைகள், துறைமுகம், விமான நிலையம் போன்றவை அமைந்துள்ளன. இதனால் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக ஏராளமானவர்கள் தூத்துக்குடிக்கு வந்து செல்கின்றனர்.
தூத்துக்குடியை சுற்றியுள்ள தொழிற்சாலைகள், ஷிப்பிங் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிய வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் வாடகை வீடுகளை பிடித்து குடியேறி வருகின்றனர். இதுபோக பலர் இடம் வாங்கி புதியதாக வீடுகளை கட்டியும் வருகின்றனர். மாநகராட்சி அந்தஸ்துடன் திகழும் தூத்துக்குடி வளர்ந்து வரும் நகரம் என்பதற்கேற்ப நகரைச்சுற்றி புதிது புதியதாக வீடுகள், வணிக நிறுவனங்கள் போன்றவை கட்டும் பணிகளும் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.
ஒரு காலத்தில் குறிப்பிட்ட எல்லைகளுடன் இருந்த நகரம் இன்று கதிர்வேல் நகர், ராஜீவ் நகர், ஆசிரியர் காலனி, மடத்தூர், தபால் தந்தி காலனி, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி, மீளவிட்டான், முத்தையாபுரம் தோப்பு என பரந்து விரிந்து கிடக்கிறது. இப்பகுதிகளில் புதிது புதிதாக வீடுகள் அதிக எண்ணிக்கையில் கட்டப்பட்டு வருகின்றன.
புதியதாக கட்டப்படும் வீடுகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களும் சம்மந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகத்தில் உரிய அனுமதி பெறப்பட்டுத்தான் கட்டப்படுகிறது. கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி கொடுக்கும் மாநகராட்சி தான் அந்த இடத்திற்கு தீர்வை ரசிது வழங்க வேண்டும். இதனை வைத்து தான் புதிய கட்டிடங்களுக்கு மின் இணைப்பு பெற முடியும் என்பது வழக்கமானதாகும்.
தற்போது தூத்துக்குடி மாநகராட்சியில் புதியதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு அனுமதி கொடுப்பது, தீர்வை ரசிது வழங்குவதற்கு அதிக கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளது. இத்துறைக்கு தொடர்பு இல்லாதவர்களான மேயர், அதற்கு அடுத்துள்ளவர்கள் அனைவரும் தங்களுக்கு சம்திங் கொடுக்க வேண்டும் அப்போதுதான் அனுமதி கிடைக்கும் என்று கறாராக சொல்கிறார்களாம்.
இதனால் புதிதாக கட்டிடம் கட்டுபவர்கள் அதிகப்படியாக சம்திங் கொடுக்க முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். அனுமதி, தீர்வை ரசிது இல்லாத காரணத்தினால் புதிய கட்டிடங்களுக்கு மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு போன்றவற்றை பெற முடியாமல் பரிதவித்து வருகின்றனர். தூத்துக்குடி மாநகருக்குள் கட்டப்பட்டு வரும் சில பெரிய வணிக நிறுவனங்கள் கூட அதிகப்படியான சம்திங் தொகையை கொடுக்க முடியாமல் கட்டிடப் பணிகளை நிறுத்தி வைத்துள்ளன. கட்டிடம் கட்டி முடித்தவர்களில் சிலர் மின் இணைப்பு பெறமுடியாத காரணத்தினால் ஜெனரேட்டர்கள் உதவியுடன் மின்சாரம் பெற்று வருகின்றனர்.
கேட்டபடி கமிஷன் கொடுப்பவர்களுக்கு உடனடியாக எல்லாம் செய்து கொடுக்கப்படுகிறது. இந்நிலையில், இத்துறைக்கு சம்மந்தமில்லாதவர்கள் அதிக கமிஷன் கேட்பதால், துறைக்கு சம்மந்தப்பட்டவர்களுக்கு முன்புபோல சம்திங் கிடைப்பதில்லை என்ற வருத்தம் கலந்த குற்றச்சாட்டும் பலமாக எழுந்துள்ளது.
சம்திங் கொடுக்க முடியாது என்று கறாராக பேசும் கட்டிட உரிமையாளர்கள் உள்ளூர் திட்டக்குழு விதிமுறைகளை காரணம் காட்டி மிரட்டப்பட்டும் வருகின்றனர். இதனால் மாநகரின் வளர்ச்சி பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. மாநகராட்சியில் முந்தைய பொறுப்பில் இருந்தவர்கள் இதுபோன்று இல்லை. ஆனால் இப்போது பொறுப்பில் இருப்பவர்களின் கெடுபிடியால் நகரின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்று பாதிக்கப்பட்டவர்கள் புலம்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications