மீண்டும் இன்போசிஸ் நிர்வாக இயக்குனரானார் நாராயணமூர்த்தி- சம்பளம் வருடத்துக்கு 1 ரூபாய்!

இதுவரை தலைவராக இருந்த கே.வி.காமத் அந்தப் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். அவர் இனி இன்போசிஸ் இயக்குனர் குழுவில் சுயேச்சையான இயக்குனராக செயல்படுவார்.
இந்த மாற்றங்களை இன்போசிஸ் நிர்வாகக் குழு இன்று அறிவித்தது. இந்த மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.
1981ம் ஆண்டு தனது நண்பர்களுடன் இணைந்து இன்போசிஸ் நிறுவனத்தை நிறுவியவர் நாராயணமூர்த்தி. 1981ம் ஆண்டு முதல் 2002 வரை இந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் செயல் அதிகாரியாக (CEO) செயல்பட்டு வந்தார்.
பின்னர் இளைய தலைமுறையிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு இன்போசிஸ் நிறுவனத்தின் அன்றாடப் பணிகளில் இருந்து விலகினார்.
இந் நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாயும் லாபமும் சரிந்து வருகிறது. இதையடுத்து நாராயண மூர்த்தி மீண்டும் இந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழிவின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே இன்போசிஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமை செயல் அதிகாரியை (CEO) தேர்வு செய்ய தேடுதல் வேட்டையை இந்த நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதற்காக ஒரு தனியார் அமைப்பை இன்போசிஸ் நாடியுள்ளது.
வழக்கமாக நிறுவனத்துக்குள்ளேயே மூத்த அதிகாரி ஒருவரை சிஇஓ-வாக தேர்வு செய்வது இன்போசிஸ் வழக்கமாகும். இந்த முறையும் உள்ளேயே சிஇஓ-வை தேடுவதோடு, வெளியிலும் தேட உள்ளது.
இப்போது சிஇஓ-ஆக உள்ள சிபுலாலின் பதவிக் காலம் 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தான் முடிகிறது. ஆனால், அவர் விலகும் முன்பே புதிதாக ஒருவரை சிஇஓ பதவிக்கு தேர்வு செய்து, சிபுலாலுடன் இணைந்து பணியாற்ற வைக்க இன்போசிஸ் முடிவு செய்துள்ளது.
66 வயதான நாராயணமூர்த்தி ரூ. 7,500 கோடி இன்போசிஸ் நிறுவன பங்குகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.
மகனுக்கும் இன்போசிஸ்சில் பதவி:
இந் நிலையில் இவரது மகன் ரோகன் மூர்த்தியும் இன்போசிஸ் நிறுவனத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் நாராயணமூர்த்தியின் நிர்வாக உதவியாளராக (Executive assistant) செயல்படுவார்.
இவர் டிவிஎஸ் குடும்பத்தைச் சேர்ந்த வேணு சீனிவாசனின் மகள் லட்சுமியை மணந்தவர் ஆவார்.












Click it and Unblock the Notifications