சென்னையில் பாமக பொதுக் கூட்டம் நடத்த ஹைகோர்ட்டு அனுமதி மறுப்பு
சென்னை: சென்னையில் பொது கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
பாமகவை சேர்ந்த வடிவேலு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது
சென்னை அடையாறு அருகே சாஸ்திரி நகரில் பாமக சார்பாக பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு கடந்த 4 ம் தேதி காவல் நிலையத்தில் மனு அளித்தோம். இந்த மனுவை பரிசீலனை செய்த போலீசார், இந்த பொதுக் கூட்டத்தை அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி பொதுக் கூட்டம் நடத்த அனுமதி மறுத்துவிட்டனர்.
இது சட்டப்படி, தவறான செயலாகும். ஜனநாயக நாட்டில் அனைத்து கட்சிகளுக்கும் பொதுக் கூட்டம் நடத்த உரிமை உள்ளது. இதை தடுக்க முடியாது. அரசியல் உள்நோக்கத்துடன் போலீசார் செயல்படுகின்றனர்.
தர்மபுரி கலவரத்துக்கும், மரக்காணம் கலவரத்துக்கும் பாமக காரணம் இல்லை. எங்கள் கட்சி தொண்டர்கள் எந்த கலவரத்திலும் ஈடுபடமாட்டார்கள்.
எனவே போலீசார் உத்தரவை ரத்து செய்து பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி தனது உத்தரவில், சாஸ்திரி நகரில் பாமக பொதுக்கூட்டம் நடத்த அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று போலீஸ் தரப்பில் கூறியுள்ளனர். காரண காரியங்களை அலசி பார்த்தால் போலீஸ் கூற்று சரியானது தான்.
தர்மபுரி, மரக்காணத்தில் ஏற்பட்ட கலவரத்தை போலீசார் முன் உதாரணமாக கூறி அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர்.
எனவே சென்னையில் பொதுக்கூட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று போலீசார் கூறியதை நிராகரிக்க முடியாது. இதற்கு முகாந்திரம் உள்ளது. எனவே போலீசார் உத்தரவை ரத்து செய்ய முடியாது. எனவே, அதனால், மனுதாரின் மனுவை தள்ளுபடி செய்கிறேன் என தீர்ப்பில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications