ஒகேனக்கல் திட்டத்தை வேண்டும் என்றே அதிமுக அரசு தாமதப்படுத்தியது: ஸ்டாலின்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம் மற்றும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தை வழங்கிய கருணாநிதி, திமுக பொருளாளர் முக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நேற்று நடந்தது.
இதில் கலந்து கொண்ட ஸ்டாலின் பேசியதாவது,
திமுக தலைவர் கலைஞரால் உருவாக்கி தயார் செய்யப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு அவர் அர்பணித்துள்ளார். அவரை பாராட்டும் இந்த விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். கலைஞரின் பிறந்தநாள் ஜூன் 3ம் தேதி. இன்று ஜூன் 9ம் தேதி கூட கொண்டாட்டம் நடைபெறுகிறது. ஏன் அடுத்த ஆண்டு வரை கூட கொண்டாடுவோம். அது நமக்கெல்லாம் கிடைத்த பெருமை ஆகும். அவரது பிறந்நதாளை தமிழகத்தில் மட்டுமின்றி, அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் கொண்டாடப்படுகிறது.
கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கு அவர் பாதுகாப்பு அரணாக இருக்கிறார். இந்த ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் முழுமையாக நிறைவு பெறாத நிலையில் அவசர அவசரமாக துவங்கி வைக்க முடிவு செய்தனர். பிறகு சென்னையில் உள்ள கோட்டையில் இருந்து கொண்டு வீடியோ கான்பரன்சிங் மூலம் இத்திட்டத்தை ஜெயலலிதா துவங்கி வைத்தார். எதற்கு இந்த அவசரம்?
கடந்த 6 மாதங்களில் நான் இளைஞர் பயிற்சி பாசறை கூட்டம், தேர்தல் நிதி அளிப்பு பொதுக்கூட்டம், நாடாளுமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் ஆகியவற்றில் பேச மூன்று முறை வந்தேன். அப்போதெல்லாம் ஒகேனக்கல் திட்டம் பற்றி உரை நிகழ்த்தினேன். திமுக ஆட்சியில் 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டன. மீதமுள்ள 10 சதவீத பணியை முடிக்க அதிமுக ஆட்சியில் தாமதம் ஆனது.
கலைஞர் கொண்டு வநத் திட்டம் என்பதால் தாமதப்படுத்தினார்களா என்று தெரியவில்லை. திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கிடப்பில் போடப்பட்டது. இது 2 மாவட்டங்களின் ஜீவாதார பிரச்சனை ஆகும். இந்த பணியை முடிக்க எனக்கு 2 மாதம் அதிகாரம் கொடுங்கள் முடித்து தருகிறேன் என்றேன். இதை கேட்ட ஜெயலலிதா அமைச்சர்களை அவசரமாக அழைத்துப் பேசி இத்திட்டத்தை விரைந்து முடிக்குமாறு கூறினார். இத்திட்டத்தை கொண்டு வந்தவர்கள் யார் என்று மக்களுக்கு நன்கு தெரியும்.
நான் ஜப்பான் சென்று இத்திட்டத்திற்கான நிதியை பெற்று வந்தது மக்களுக்கு தெரியும். திமுக ஆட்சியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை அளித்தோம். திமுக ஆட்சியில் ஒகேனக்கல் திட்டம் கிடப்பில் போடப்பட்டதாக இந்த மாவட்ட அமைச்சர் பொய் கூறி வருகின்றார். கடந்த 1997ம் ஆண்டு திமுக ஆட்சியில் ரூ. 576 கோடி மதிப்பில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு திட்ட மதிப்பீட தயார் செய்யப்பட்டது.
பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இத்திட்டத்தை கிடப்பில் போட்டனர். ஒரு இம்மி அளவு கூட வேலை நடக்கவில்லை. அப்படி நடந்தது என்று கூறட்டும் இந்த மேடையிலேயே மன்னிப்பு கேட்க நான் தயார். 2006ம் ஆண்டில் உள்ளாட்சித்துறை அமைச்சராக நான் பொறுப்பேற்ற பிறகே இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கான அடிக்கல் 26.6.2008 அன்று நாட்டப்பட்டது. 5 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு இத்திட்டப்பணிகளை பார்வையிட நான் 20 முதல் 25 முறை வந்துள்ளேன். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஓசூரில் நடந்த கூட்டத்தில் அதிமுக அமைச்சர் கே.பி முனுசாமி 3 கேள்விகள் கேட்பதாக கூறினார்.
நீங்கள் அமைச்சர். நான் தான் உங்களிடம் கேள்வி கேட்க வேண்டும். எதிர்கட்சிகளுக்கு தான் ஆளுங்கட்சியினர் பதில் அளிக்க வேண்டும். 2012ம் ஆண்டில் முடிக்கப்பட வேண்டிய இத்திட்டம் தாமதமாக யார் காரணம். இப்போது திட்டத்தை துவங்கி வைத்துள்ளதாக பேசுகிறீர்கள். ஆனால் இன்னும் 50 சதவீத இடங்களுக்கு கூட தண்ணீர் செல்லவில்லை.
பாதாள சாக்கடை திட்டத்தை நாங்கள் அறிவித்து திரும்ப பெற்றதாக தெரிவித்தார். நீதிமன்றத்தில் தடை ஆணை பெறும்போது அதை சட்டரீதியாக சந்திக்க வேண்டியதால் திரும்பப் பெற நேரிட்டது. இந்த அமைச்சர் சட்டசபையில் சில இடங்களில் பாதாள சாக்கடை திட்டம் திரும்பப் பெறப்பட்டதாக தெரிவித்தார். இந்த 2 ஆண்டுகளில் பாதாள சாக்கடை திட்டத்தை துவங்கி வைத்துள்ளீர்களா?
திமுக ஆட்சியில் தான் சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. அதனால் இன்று மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் பெறுகின்றனர். தமிழகத்தில் கொலை-கொள்ளை அதிகரித்துவிட்டது. சென்னையில் அதிக குற்றங்கள் நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் குற்றங்கள் நிறைந்த மாவட்டமாகிவிட்டது என்றது.












Click it and Unblock the Notifications