ராஜ்யசபா தேர்தல்.. 6வது எம்.பி.க்கு இ.கம்யூனிஸ்ட்- திமுக மோதல்!
டெல்லி: ராஜ்யசபா தேர்தலில் 6வது எம்.பி. இடத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திமுக இடையே போட்டி உருவாகியுள்ளதால் வாக்குப் பதிவு நடைபெறக் கூடும் எனத் தெரிகிறது.
தமிழகத்தைச்சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவி காலம் முடிவடைவதால் வரும் 27-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு 17-ந்தேதி கடைசி நாள். ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை.
5வது வேட்பாளர்
தமிழக சட்டசபையில் அ.தி.மு.க.வுக்கு 151 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதனால் அந்த கட்சி 4 எம்.பி.க்களை கண்டிப்பாக தேர்வு செய்ய முடியும். 5-வது இடத்தில் வெற்றிபெற அ.தி.மு.க.வுக்கு இன்னும் 19 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படுகின்றனர். புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சியின் தலா 2 எம்.எல்.ஏ.க்கள், ஒரு எம்.எல்.ஏ.வை வைத்துள்ள பார்வர்டு பிளாக் ஆகியவற்றிடம் ஆதரவு கோரியுள்ளது. தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரின் ஆதரவும் அ.தி.மு.க.வுக்கு கிடைக்கும்.
6வது வேட்பாளர்
இந்நிலையில் தி.மு.க. சார்பில் கனிமொழியை எம்.பி.யாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. தி.மு.க.வுக்கு 23 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர். இதனால் மேலும் 11 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. 5 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டுள்ள காங்கிரசிடம் ஆதரவு கோரியிருப்பதாகவும் கூறப்படுகிறது. நிச்சயமாக 6-வது இடத்துக்கு தி.மு.க. போட்டியிடும். ஏற்கெனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் தி.மு.க. பார்லிமென்ட் குழு தலைவர் டி.ஆர்.பாலு பேசியதாகவும் கூறப்படுகிறது.
மனுவாங்கிய இ.கம்யூனிஸ்ட்
திமுக களம் இறங்கும் நிலையில் திடீரென தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை சென்னை கோட்டையில் உள்ள ராஜ்யசபா தேர்தல் பிரிவிடம் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகிகள் வாங்கிச் சென்றுள்ளனர். கட்சியின் ஒப்புதலுடன்தான் வேட்பு மனுக்களை வாங்கியுள்ளோம். கட்சியின் அனுமதிக்கடிதத்துடனேயே தேர்தல் பிரிவு அலுவலகத்தில் மனுவைப் பெற்றுள்ளோம் என்றும், தேர்தலில் போட்டியிடுவதா, வேண்டாமா? என்பது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்துள்ளனர்.
6வது இடத்துக்கு தி.மு.க.வும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும் நிலை உருவானால் 7 பேர் களத்தில் இருப்பார்கள். அதனால் 27-ந்தேதி தேர்தல் நடைபெறும் நிலை உருவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications