பறந்து, பறந்து 3ஜி இண்டர்நெட் தரப்போகும் ஹீலியம் பலூன்கள்: கூகுளின் புதிய அறிமுகம்
வெலிங்டன்: ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன்களை வானில் பறக்க விட்டுள்ளது கூகுள் நிறுவனம். இதன் மூலம், எதிர்காலத்தில் ஏற்படும் இயற்கை பேரழிவுகளின் போதும் மக்கள் இடையூறின்றி இணையத்தை பயன் படுத்த முடியும் என கூகுள் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தானியங்கி கார், கூகுள் கண்ணாடி போன்றவற்றைத் தயாரித்த கூகுள் நிறுவனத்தின் பிரத்தியேகக் குழுதான் இந்த பலூனையும் தயாரித்துள்ளது. இப்புதிய முயற்சிக்கு பிராஜெக்ட் லூன் என பெயரிட்டுள்ளது கூகுள்.
முதற்கட்டமாக 30 ஹீலியம் பலூன்களை மட்டுமே பறக்க விட்டு சோதனை செய்துள்ள கூகுள் விரைவில் அனைவரும் பயன் படுத்தும் வகையில் விரிவு படுத்த திட்டமிட்டுள்ளதாம்.

விமானத்தை விட உயரத்தில்...
நியூசிலாந்து நாட்டில் உள்ள கிரைஸ்ட்சர்ச் என்ற இடத்திலிருந்து இந்த ஹீலீயம் பலூன்கள் சோதனை முயற்சியாக பறக்க விடப்பட்டுள்ளன. இந்த பலூன்கள் விமானங்களை விட இரண்டு மடங்கு உயரத்தில் பறக்கக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகாயமார்க்க மீட்புப் பணிகளுக்கும்...
3ஜி வேகத்துடன் கூடிய இணையதளப் பயன்பாட்டை மக்கள் இப்பலூன்கள் மூலம் பெற முடியுமாம். இயற்கைப் பேரழிவுகள் காலத்தில் ஆகாய மார்க்க மீட்புப் பணிகளுக்கு இந்த பலூன்கள் பெரிதும் பயன் படும் என கூகுள் தெரிவித்துள்ளது.

கட்டுப்பாடு தரையில்...
ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட 30 பலூன்களில் இணையதள தொடர்புகளை அளிக்ககூடிய கருவிகள் பொருத்தப்பட்டு விண்வெளியில் பறக்கவிடப்படுள்ளன. பலூன்களின் பாதை தரையிலிருந்து கட்டுப்படுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் விரிவு...
மற்றொரு சிறப்பு என்னவென்றால், இந்த பலூன்கள் மூலம் இதுவரை எந்த வசதிகளுமில்லாத தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள் கூட இனி இணையதள வசதிகளைப் பெறமுடியும். முதற்கட்டமாக சோதனை முயற்சியில் இறங்கியுள்ள கூகுள் விரைவில் இதனை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளது.

நிலவு வீச்சு...
இந்தத் திட்டத்திற்கு ‘பிராஜெக்ட் லூன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் இயக்குனர் மைக் காசிடி இத்திட்டம் பற்றி கூறுகையில், 'இது ஒரு 'நிலவு வீச்சு' என்று வர்ணித்துள்ளார். மேலும், தான் சொல்லும் திட்டம் விஞ்ஞானக் கதை போலத் தெரியலாம் , ஆயினும் பெரிய பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய முடிவு இது என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications