ராமேஸ்வரம்: தமிழ்நாடு ஹோட்டலில் விபச்சாரம்… விடுதிக்கு சீல்வைக்க கலெக்டர் உத்தரவு
ராமநாதபுரம்: ரமேஸ்வரத்தை அடுத்த மண்டபத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் விபச்சாரம் நடைபெறுவதாக எழுந்த புகாரை அடுத்து ஹோட்டலை மூட கலெக்டர் உத்தரவிட்டார்.
ராமேஸ்வரம் வரும் சுற்றுலாபயணிகள் மற்றும் பக்தர்கள் தங்குவதற்காக ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பில் தங்கும் விடுதிகள் இயங்கி வந்தன.
இதில் ராமேஸ்வரத்தில் உள்ள ‘ஓட்டல் தமிழ்நாடு' சுற்றுலாத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. ஆனால், மண்டபத்தில் இயங்கிவந்த ஓட்டல் தமிழ்நாடு போதிய வருவாய் வராததால் தனியாருக்கு குத்தகை விடப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக தனியார் நிர்வாகத்தின் கீழ் இருந்த தமிழ்நாடு ஓட்டலில் விபச்சாரம் மற்றும் சமூகவிரோத செயல்கள் நடப்பதாக புகார் எழுந்து வந்தது. இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் போலீஸார் சோதனை நடத்தினர். இதில் விபசாரம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து தனியாரிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ள தமிழ்நாடு ஓட்டலை மூடுமாறு மாவட்ட கலெக்டர் நந்தகுமார் பரிந்துரை செய்திருந்தார்.
இந்தநிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் பாலகிருஷ்ணன், மண்டபம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ் ஆகியோர் இன்று காலை மண்டபத்தில் இருந்த தமிழ்நாடு தங்கும் விடுதிக்கு சீல் வைத்தனர். பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் தங்கும் விடுதியில் விபச்சாரத் தொழில் நடைபெற்ற சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications