முடிவைச் சொல்லுன்னு சொன்னீங்க, சொன்னா ஏன் திட்றீங்க.. நிதீஷ் குமார் தாக்கு

Subscribe to Oneindia Tamil

Nitish Kumar blasts BJP in Bihar assembly
பாட்னா: முடிவெடுங்கள் என்று அவர்கள் தொடர்ந்து வற்புறுத்தினார்கள். ஆனால் முடிவெடுத்து அறிவித்தால் துரோகம் செய்து விட்டதாக வர்ணிக்கிறார்கள் என்று பாஜகவை விமர்சித்துள்ளார் பீகார் முதல்வர் நிதீஷ் குமார்.

பீகார் சட்டசபையில் இன்று நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசினார் முதல்வர் நிதீஷ் குமார்.

அவரது பேச்சிலிருந்து சில துளிகள்...

இங்கு உறுப்பினர்கள் அவரவர் கருத்துக்களைத் தெரிவித்தனர். அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏன் இந்த நிலைமை ஏற்பட்டது... நேற்று வரை அவர்கள் தோழமைக் கட்சியாக இருந்தனர். இன்று எதிர்க்கட்சித் தலைவராகியுள்ளார் அக்கட்சியின் தலைவர்.

அவர் தனது மனதில் தோன்றியதையெல்லாம் சொல்லி விட்டுச் சென்று விட்டார். ஐக்கிய ஜனதாதளத் தலைவர் பேசியபோது சிலர் குறுக்கிட்டனர். அது தவறு. ஒவ்வொருவருக்கும் பேச உரிமை உள்ளது.

பேசுவதைக் கவனிக்க வேண்டும். அதைத் தடுக்கக் கூடாது. இந்தக் கூட்டம் தொடங்கியபோது அத்தரப்பிலிருந்து எழுப்பப்பட்ட கூச்சல் ஒன்றே இந்தக் கூட்டணி முறிவை நியாயப்படுத்த போதுமானதாகும்.

நான் எப்போதுமே பீகாரின் சாதனைகள் குறித்துத்தான் பேசி வந்திருக்கிறேன். ஆனால் நான் எடுத்த முடிவுகளை இங்கு எதிர்க்கட்சித் தலைவரான நண்பர் விமர்சித்துள்ளார். பீகாரின் சாதனைகளைப் பாராட்டுவது என்பது எப்படி மற்றவர்களை விமர்சிப்பதாக அர்த்தமாகும் என்று நான் அவரைக் கேட்க விரும்புகிறேன்.

பீகாரின் வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாகும் என்று நான் கூறுகிறேன். அனைவரையும் சேர்த்துத்தான் இங்கு வளர்ச்சித் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. நமது வளர்ச்சியில் அடிப்படைக் கட்டமைப்பு, சட்டம் ஒழுங்கு, மனித வள மேம்பாடு ஆகியவை உள்ளடங்கியுள்ளது.

இட ஒதுக்கீட்டில் 50 சதவீதத்தை கொண்டு வந்த முதல் மாநிலம் பீகார். ஆனால் இது சிலருக்கு எரிச்சலாக உள்ளது.

அனைவரையும் சமமாக பாவிக்கும், பார்க்கும் ஒருவர்தான் நாட்டின் பிரதமராக முடியும். பிரதமராக வேண்டும்.

இங்கு சட்டசபைக் கூட்டம் தொடங்கியதும் பாஜக உறுப்பினர்கள் தங்களது தலைவர் சுஷில் குமார் மோடியைப் பாராட்டிக் கோஷம் எழுப்பாமல் வேறு யாரையோ பாராட்டி கோஷம் எழுப்பினர்.

அவர்கள் எந்த வளர்ச்சியைப் பற்றி பேசுகிறார்கள் என்றே புரியவில்லை. ஏற்கனவே வளர்ந்த நகரங்கள் மட்டுமே மேலும் வளர வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்களா.... ஒரு தலைவர் என்பவர் அனைத்துப் பகுதிகளின் வளர்ச்சியைப் பற்றியும் கவலை கொள்ள வேண்டும். திட்டமிட வேண்டும்.

நான் 2003ம் ஆண்டு ரயில்வே அமைச்சராக இருந்தபோது பேசியதை இப்போது குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். மத்திய ரயில்வே அமைச்சராக இருக்கும் ஒருவர் ஒரு மாநிலத்தில் நடக்கும் விழாவுக்குச் செல்லும்போது, அந்த மாநில அரசை விமர்சித்தா பேச முடியும். அப்போது நான் பேசிய பேச்சிலும் கூட குஜராத் அரசு மீது மிகப் பெரிய கரும்புள்ளி இருப்பதாக பேசியதை மறந்து விடக் கூடாது.

வளர்ச்சி அடைந்த மாநிலமான குஜராத்தில் தினக்கூலியாக ரூ. 100 தருகிறார்கள். ஏழை மாநிலமான பீகாரில் ரூ. 162 தருகிறோம்.

உங்களது முடிவைச் சொல்லுங்கள் என்று எங்களைப் பார்த்து கேட்டுக் கொண்டே இருந்தார்கள். நாங்கள் முடிவைச் சொன்னதும் துரோகம் செய்து விட்டதாக விமர்சிக்கிறார்கள்.

பிரிவினைவாத அரசியலை ஒருபோதும் நாம் ஏற்க மாட்டோம். ராஜதர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று அத்வானி சொன்னார். அதில் அவர்களுக்கு என்ன கஷ்டம்.

பொது சிவில் சட்டம், அயோத்தி விவகாரம் உள்ளிட்டவை குறித்து சர்ச்சை எழுப்ப வேண்டாம் என்று நாங்கள் சொன்னோம். அவர்கள் கேட்கவில்லை.

நாங்கள் சும்மா உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவேதான் முடிவெடுக்குமாறு கட்சித் தலைமையை கேட்டுக் கொண்டோம்.

அவர்களை அரசியல் ரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

நான் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்பவில்லை. 17 வருட கால உறவு இது. எனவே இதை அசிங்கப்படுத்த விரும்பவில்லை. ஆனால் அவர்கள்தான் முதலில் ஆரம்பித்தார்கள் என்றார் நிதீஷ் குமார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+