வயதுக்கு மீறிய மார்பகம்: சாதனை ஆபரேஷன் மூலம் 'சரி' செய்த குமரி டாக்டர்கள்
நாகர்கோவில்: ஹார்மோன் சுரப்பினால் வயதுக்கு மீறிய மார்பக வளர்ச்சியை பெற்று அவதிப்பட்ட 18 வயது இளம் பெண்ணுக்கு, ஆபரேஷன் மூலம் மார்பகத்தின் அளவைக் குறைத்து, சாதனை புரிந்துள்ளனர் குமரி மாவட்ட டாக்டர்கள்.
நாகர்கோவில் ராமன் புதூர் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண்ணுக்கு ஹார்மோன் சுரப்பிகள் அதிகமாக உற்பத்தியானதால், வயதுக்கு மீறிய மார்பக் வளர்ச்சியால் அவதிப்பட்டார். ஏழ்மையில் வாடிய அப்பெண்ணுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் செலவு செய்து ஆபரேஷன் செய்து கொள்ளும் அளவிற்கு குடும்ப வருமானம் இல்லை.
இந்நிலையில், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் இத்தகைய ஆபரேஷன் செய்யும் சிறப்பு டாக்டர்கள் இருப்பது குறித்து கேள்விப்பட்டுள்ளார் அவர். ஆசார்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றவர், அங்கு சமீபத்தில் பொறுப்பேற்ற டீன் ரேவதி மேற்பார்வையில் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினரை சந்தித்துள்ளார்.
பரிசோதனையில், குடும்ப பாரம்பரியம் காரணமாக அரிதிலும் அரிதாக ஏற்படும் கூடுதல் ஹார்மோன் சுரப்பு மற்றும் கொழுப்பு உருவாகியதே, அப்பெண்ணின் அபரிமிதமான மார்பக வளர்ச்சிக்குக் காரணம் எனத் தெரிய வந்தது. இதனையடுத்து, அவருக்கு ஆபரேஷன் செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். 18 வயது முடிவடைந்த பின்னரே, அத்தகைய ஆபரேஷனைச் செய்ய முடியும் என்பதால், சமீபத்தில் அப்பெண்ணுக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது.
ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், துறையின் நிபுணர்கள் டாக்டர் எட்வின் எம்பரர், அகமது ரபீக், மீரான், மயக்க மருந்து நிபுணர்கள் வாசுகிநாதன், முத்து செண்பகம் ஆகியோர் சேர்ந்து, கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் நடந்த ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது.
பெருத்த மார்பகங்கள் அகற்றப்பட்டு, வயதுக்கேற்ற அழகான மார்பகங்கள் ஒட்டுறுப்பு மூலம் அவ்ருக்கு பொருத்தப்பட்டுள்ளது. இத்தகைய சாதனை ஆபரேஷன் குறித்து, ஆஸ்பத்திரி டீன் ரேவதி கூறியதாவது, "ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் அரசு டாக்டர்களால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது. இதற்காக சுமதிக்கு ஆபரேஷன் செய்த டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்பட அவரது குழுவினரை பாராட்டுகிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications