ஓட்டுப் பெட்டியை இருகரம் கூப்பி கும்பிட்டுவிட்டு ஓட்டு போட்ட எம்எல்ஏக்கள்!
சென்னை: நேற்று நடந்த ராஜ்யசபா தேர்தலில் சில எம்.எல்.ஏக்கள் வாக்குச் சீட்டில் ஓட்டுப் போட்டுவிட்டு அதை ஓட்டுப் பெட்டியில் போடுவதற்கு முன் அந்தப் பெட்டியை இருகரம் கூப்பி கும்பிட்டுவிட்டு வாக்குச் சீட்டை உள்ளே போட்டது பார்க்க காமெடியாக இருந்தது.

அணி அணியாக வந்து வாக்களித்த அதிமுக கூட்டணி...
அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிகளின் எம்எல்ஏக்கள் காலை 8 மணிக்கே கோட்டைக்கு வந்துவிட்டனர். இவர்கள் மூத்த அமைச்சர்கள் 5 பேரின் அலுவலகங்களில் தலா 34 எம்.எல்.ஏக்கள் என்ற எண்ணிக்கையில் பிரித்து அமர வைக்கப்பட்டிருந்தனர். ஓட்டுப் பதிவு தொடங்கியவுடன் இவர்கள் அணி, அணியாக வந்து வாக்களித்தனர்.

காத்திருந்த ஸ்டாலின்...
அதே போல திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 10.45 மணிக்கே கோட்டைக்கு வந்துவிட்டார். ஆனால், பகல் 1.10 மணிக்கு திமுக கருணாநிதி வந்து ஓட்டு போட்ட பின்னரே ஸ்டாலின் ஓட்டுப்போட்டார்.

விஜய்காந்துக்கு வந்த சந்தேகம்...
தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஓட்டுச்சீட்டை வாங்கிக்கொண்டு மறைவிடத்துக்குச் சென்று ஓட்டுப் போடுவதற்காக சென்றார். போன வேகத்திலேயே திரும்பி வந்தார். அங்கிருந்த கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனிடமும், தேர்தல் அதிகாரி ஜமாலுதீனிடமும் ஏதோ விவரம் கேட்டார். அவர்கள் விளக்கம் தந்த பின்னரே ஓட்டு போட்டார்.

தேமுதிகவுக்கு ஓட்டளிக்காத 7 பேர்...
தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்களில் முதல் ஓட்டை போட்டவர் நடிகர் அருண் பாண்டியன் தான். அவரைத் தொடர்ந்தே சாந்தி, சுரேஷ் குமார், பாண்டியராஜன், சுந்தர்ராஜன், தமிழழகன், மைக்கேல் ராயப்பன் ஆகியோர் ஓட்டுப் போட்டனர்.
இந்த 7 அதிருப்தி எம்எல்ஏக்களும் தேமுதிக வேட்பாளர் ஏ.ஆர்.இளங்கோவனுக்கு, ஓட்டுப் போடவில்லை.

பாலபாரதிக்கு வந்த கஷ்டம்...
திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. பாலபாரதிக்கு, கொடுக்கப்பட்ட ஓட்டுச்சீட்டில், பிரிண்டிங் மை ஒரு பெரிய கரும்புள்ளியாக இருந்தது. இதை அவர் தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரிடம் போய் காட்டி புகார் கூறினார். இதையடுத்து கரும்புள்ளி இருப்பதை எல்லா தேர்தல் ஏஜெண்டுகளிடமும் காட்டிவிட்டு வேறு ஒரு ஓட்டுச்சீட்டு கொடுத்து ஓட்டுப் போடச் சொன்னார்.

2 மணி நேரம் 18 நிமிடங்களில்...
வாக்குப்பதிவில் மொத்தமுள்ள 234 வாக்குகளில் 231 வாக்குகள் பதிவாயின. தேர்தலை பாமக புறக்கணித்ததால் 3 வாக்குகள் பதிவாகவில்லை. ஒரு வாக்கு செல்லாதது என அறிவிக்கப்பட்டது. செல்லாத வாக்கைப் போட்டது காங்கிரஸ் எம்எல்ஏ என்று கூறப்படுகிறது.
மொத்தம் 2 மணி நேரம் 18 நிமிடங்களில் 231 எம்.எல்.ஏக்களும் தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.

குறைந்தபட்ச வாக்கு மதிப்பு 32.86...
மாலை 4 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதன்பின் வாக்குகளை எண்ணும் பணி, வாக்குப் பதிவு நடந்த அறையிலேயே நடைபெற்றது. மாலை 6.17 மணியளவில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது. தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்ற பிறகு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பதிவான 231 வாக்குகளில் 230 வாக்குகள் செல்லத்தக்கவை. செல்லத்தக்க வாக்குகள் அடிப்படையில், வெற்றிக்கான குறைந்தபட்ச வாக்கு மதிப்பு 32.86 என நிர்ணயிக்கப்பட்டது. அதிமுகவைச் சேர்ந்த கே.ஆர்.அர்ஜுனன், வா.மைத்ரேயன், டி.ரத்தினவேல் ஆகியோர் 36 வாக்கு மதிப்பையும், ஆர்.லட்சுமணன் 35 வாக்கு மதிப்பையும் பெற்று வெற்றி பெற்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா 34 வாக்கு மதிப்பை பெற்று வெற்றி பெற்றார்.

கனிமொழி 31, இளங்கோவன் 22...
திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றிக்குத் தேவையான குறைந்தபட்ச வாக்கு மதிப்பை பெறாவிட்டாலும், தேமுதிக வேட்பாளர் ஏ.ஆர்.இளங்கோவனை விட அதிக வாக்கு மதிப்பைப் பெற்றார். கனிமொழி 31 வாக்கு மதிப்பையும், இளங்கோவன் 22 வாக்கு மதிப்புகளையும் பெற்றனர். இருவரில் கனிமொழி அதிக வாக்கு மதிப்பைப் பெற்றதால் 6வது இடத்துக்கான போட்டியில் கனிமொழி வெற்றி பெற்றார்.
வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம்:
கே.ஆர்.அர்ஜுனன் (அதிமுக)- 36
வா.மைத்ரேயன் (அதிமுக)- 36
டி.ரத்தினவேல் (அதிமுக)- 36
ஆர்.லட்சுமணன் (அதிமுக)- 35
டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்)- 34
கனிமொழி (திமுக)- 31
ஏ.ஆர்.இளங்கோவன் (தேமுதிக)- 22












Click it and Unblock the Notifications