ஜியா கான் தற்கொலை வழக்கு - வெளியில் வந்தார் சூரஜ் பஞ்சோலி

பிரபல பாலிவுட் நடிகை ஜியா கானின் தற்கொலை வழக்கில் நடிகர் ஆதித்ய பஞ்சோலியின் மகனும் ஜியாவின் காதலனுமான சூரஜ் பஞ்சோலி கைது செய்யப்பட்டார்.
ஜியா கானை தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், சூரஜ் பஞ்சோலி திருமணம் செய்துகொள்ளாமல் ஜியா கானுடன் சேர்ந்து வாழ்ந்ததும், கருக்கலைப்பு செய்தது, திருமணம் செய்ய மாட்டேன் என ஏமாற்றியது என பல விவரங்கள் தெரியவந்தன.
ஜியா அனுப்பிய எஸ்.எம்.எஸ்-களை சூரஜ் பஞ்சோலி அழித்து விட்டதால், விசாரணை நடத்த போலீசார் கால அவகாசம் கோரினர். இதனால் சூரஜ் பஞ்சோலியை வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சூரஜ் பஞ்சோலி மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சூரஜ் பஞ்சோலிக்கு ரூ 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் இருநபர் பொறுப்பில் ஜாமீன் வழங்கியது. மேலும் அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஜூஹூ காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
மேலும், இளம் வயதில் ஜியா கான் தற்கொலை செய்து கொண்டது துரதிருஷ்டமானது என்றும், ஆனால் அதற்கு சூரஜ் மட்டுமே முழுப் பொறுப்பல்ல என்றும் நீதிபதி சாதனா ஜாதவ் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
ஜாமீன் கிடைத்ததும் நேற்று மாலை அவர் மும்பை ஆர்தர் சாலை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.











Click it and Unblock the Notifications