மருத்துவ பொது நுழைவுத் தேர்வை உடனே கைவிடுக - வைகோ கோரிக்கை
சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இரண்டாவது முறையாக 2009 இல் பொறுப்பேற்ற போது, மத்திய மனித ஆற்றல் வளத்துறை அமைச்சர் கபில் சிபல், "மருத்துவப் படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒற்றை சாளர முறையில் மாணவர்களை சேர்ப்பதற்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்" என்று அறிவித்தார்.
மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அப்போதே கடுமையாக எதிர்த்தது. மத்திய அரசு, எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல், அகில இந்திய மருத்துவக் கவுன்சில் மூலம் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை நடத்திட முடிவு செய்தது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஜூலை 18 ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. அல்டமாஸ் கபீர் தலைமையிலான அமர்வு, மருத்துவக் கல்வி பயில மத்திய அரசு கொண்டுவந்த பொது நுழைவுத் தேர்வை இரத்து செய்து தீர்ப்பளித்தது. சமூக நிதியை நிலைநாட்டக்கூடிய இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது ஆகும்.
ஆனால், மத்திய அரசு, "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரும் மனுவை தாக்கல் செய்வோம்" என்று கூறி இருக்கிறது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு சமூக நீதிக்கு எதிரானது மட்டுமல்ல, உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளபடி, அரசியல் சட்டத்திற்கும் எதிரானது ஆகும்.
பொது மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகள் மற்றும் மருத்துவ உயர் கல்வி நிலையங்களில் சேருவதற்கு தமிழகத்தில் பொது நுழைவுத் தேர்வு ஏற்கனவே இரத்து செய்யப்பட்டது. மாநில உரிமைகளில் தலையிட்டு ஆதிக்கம் செலுத்த, கூட்டாட்சி தத்துவத்தை காங்கிரஸ் கூட்டணி அரசு குழிதோண்டி புதைத்து வருகிறது.
மருத்துவக் கல்விக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்போது, நுழைவுத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள், சி.பி.எஸ்.இ. பள்ளியில் படித்த மாணவர்களுக்கு எளிதாக இருக்கும். ஆனால், கிராமப்புறங்களில் பயிலும் மாணவர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பொது நுழைவுத் தேர்வை எதிர்கொள்வது என்பது மிகுந்த சோதனையாகும்.
மேலும், மத்திய அரசு பாடத்திட்டம், மாநில அரசின் பாடத்திட்டம், மெட்ரிக், சி.பி.எஸ்.இ போன்று பல பாடத்திட்டங்கள் நடைமுறையில் இருக்கும்போது, அனைத்திற்கும் பொதுவான முறையில் நுழைவுத்தேர்வு கொண்டுவந்து, சமூக நீதி கோட்பாட்டை சீர்குலைத்து தகுதி, திறமையை நிர்ணயம் செய்ய மத்திய அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
தனியார் மருத்துவக்கல்வி நிறுவனங்களும், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களும் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கை முறைகேடுகளில் ஈடுபடும்போது, அதைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அகில இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் மாநில அரசின் மருத்துவக்கல்வி இயக்குனரகம் ஆகியவற்றுக்கு இருக்கின்றது.
ஆகவே மத்திய அரசு, இதைக் காரணமாகக் கூறி பொது நுழைவுத் தேர்வை புகுத்தும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
உச்ச நீதிமன்றம் அளித்த இன்னொரு தீர்ப்பில், டெல்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியில் கழகத்தில் சிறப்பு மற்றும் உயர்நிலை மருத்துவ படிப்புகளுக்கான பேராசிரியர்கள் பணி இடங்களில் இட ஒதுக்கீடு வழங்குவதை இரத்து செய்து இருக்கின்றது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களும், பழங்குடியின மாணவர்களும் உரிய தகுதியைப் பெற்றிருந்தாலும், "எய்ம்ஸ்" நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பைத் தட்டிப்பறிப்பதாக உள்ளது.
சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் இதற்காக மத்திய அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications