நாங்கள் மைனாரிட்டிதான்.. எப்போதுமே மைனாரிட்டி மக்களுக்காகத்தான்.. கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாங்கள் மைனாரிட்டி தி.மு.க. தான், இந்தியாவிலே இருக்கின்ற மக்கள், தமிழ் நாட்டு மக்கள் மாத்திரமல்ல, மற்ற மாநில மக்களிலும், "மைனாரிட்டி" மக்கள், அவர்கள் கிறித்தவர்களாக இருந்தாலும், முஸ்லீம்களாக இருந்தாலும் அந்த மைனாரிட்டி மக்களுக்காகப் பாடுபட்ட ஆட்சி தான், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி..

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பி்ல ரம்ஜான் நோன்பு திறப்பு இஃப்தார் விருந்து நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு சிறப்பி்த்தார்.

நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரை...

நம்முடைய பேராசிரியர், விழாவின் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் வழக்கத்திற்கு மாறாக, மிகச் சுருக்கமாக தன்னுடைய உரையை நிகழ்த்தி, சுருக்கமாக உரை நிகழ்த்துவதற்குக் காரணம் - நான் ஆறே முக்கால் மணி வரையிலே பேச வேண்டும் என்பது தான் என்று என்னிடத்திலே குறிப்பிட்டார்கள்.

சில நேரங்களில் இது போன்ற நல்ல நிகழ்ச்சிகளில் நம்முடைய பேராசிரியர் காதர் மொகிதீன் போன்றவர்களுக்கு நேரத்தின் அருமை எந்த அளவிற்குத் தெரியும், எந்த அளவிற்கு அதை அவர்கள் சமாளிப்பார்கள் என்ற அந்த நிலைக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அவர்கள் இன்றைக்கு விளங்கியிருக்கிறார்கள். சில நிகழ்ச்சிகளில் விழா தலைமை வகிப்பவர்கள், வரவேற்புரை ஆற்றுபவர்கள் எல்லாம் தாங்கள் விரும்பியதையெல்லாம் பேசி விட்டு, விருந்தினர்களாக வருபவர்களுக்கு நேரமே இல்லை என்ற நிலையை உருவாக்குவார்கள்.

அப்படி இல்லாமல், நம்முடைய பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள், நேரத்திலே கூட அவர் குறைவாக எடுத்துக்கொண்டு எனக்கு அதிகமாக ஒதுக்கியிருக்கிறார். இப்படியே எல்லாவற்றிலும் அவர் குறைவாக எடுத்துக் கொண்டு எனக்கு - எனக்கென்றால் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு - அதிகமாக ஒதுக்குவார் என்ற நம்பிக்கையோடு தான் இருக்கிறேன்.

We are for minorites, asserts Karunanidhi

நம்முடைய நண்பர்கள் எல்லாம் எண்ணியதைப் போல, இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டிருக்கின்ற நீங்கள், எனக்கு உள்ளபடியே எனக்கு சற்று வருத்தம் தருகின்ற அளவிற்கு இரு பிரிவாக, மூன்று பிரிவாக, நான்கு பிரிவாக இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கிறீர்கள் என்பதை நான் எண்ணிப் பார்த்து, அதற்காக மகிழ்ச்சி அடையவில்லை. நீங்கள் எல்லாம் ஒன்றாக இருந்தால், இன்னும் கூடிக் கலந்து உங்களுடைய உழைப்பை நல்கி ஒற்றுமையைப் பாராட்டினால், இந்தச் சமுதாயம் இன்னும் வீறு கொண்டெழவும், இந்தச் சமுதாயத்திற்கு இன்னும் வீர உணர்வு ஏற்படவும், இந்தச் சமுதாயத்தைத் துச்சமாகக் கருதுகின்ற சில மத எரிச்சல்காரர்கள் பயந்து ஒதுங்கவும், நம்மை நெருங்காமல் இருக்கவுமான ஒரு நிலை உருவாகியிருக்கும்.

ஆனால் என்ன காரணத்தாலோ, தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் - நான் அகில இந்திய அளவிலே கூட இதைப் பற்றி கருத விரும்பவில்லை - தமிழகத்தைப் பொறுத்தவரையில் நான் சிறுவனாக இருந்த அந்தக் காலத்திலே பார்த்த முஸ்லீம் லீக் இன்றைக்கு இல்லை. பல கூறுகளாக, பல பிரிவுகளாக பிளந்து கிடக்கிறது. இதை நான் சொல்லும்போது நீங்கள் நினைக்கக் கூடும் - நீங்கள் என்ன யோக்கியதை என்று என்னைப் பார்த்துக் கேட்கக் கூடும். நீங்கள், திராவிடர் இயக்கம் ஒன்றாகத் தானே இருந்தீர்கள் - அந்தத் திராவிட இயக்கம் பிரியவில்லையா என்று கேட்கக் கூடும். எப்படியோ தவிர்க்க முடியாமல் அந்தச் சூடிநநிலை ஏற்பட்டிருந்தாலுங்கூட, இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள், இளைஞர்கள், பெரியவர்கள், நடுத்தர வயதினர் அனைவரும் முஸ்லீம் லீக்கின் வரலாறு எத்தகையது, இந்த முஸ்லீம் லீக் எப்படி உருவானது, இதற்காகப் பாடுபட்ட பெரியவர்கள் ஜனாப் ஜின்னா போன்றவர்கள் எவ்வளவு அரும்பாடுபட்டு இந்த முஸ்லீம் சமுதாயத்தை வளர்த்தார்கள் - நம்முடைய மறைந்த பெரியவர்கள் இந்தச் சமுதாயத்திற்காக எந்த அளவிற்குப் பணியாற்றியிருக்கிறார்கள் என்பதை எல்லாம் எண்ணிப் பார்த்தால் நாம் ஒற்றுமையாகத் தான் இருக்க வேண்டும்.

இருந்தாலும் நம்மை யாரும் நெருங்க அஞ்சுவார்கள் - நெருங்க என்றால், நம்முடைய வீரத்தைக் கண்டு அல்ல - நம்முடைய ஒற்றுமையைக் கண்டு அஞ்சுவார்கள். அந்த ஒற்றுமை; இன்றைக்கு தமிழகத்திலே மாத்திரமல்ல, இந்தியாவிலும் இல்லை என்பதைக் கண்டு கொண்ட காரணத்தினால் தான், பாபர் மசூதி இடிக்கக் கூடிய நிலைமை ஏற்பட்டது.

அப்படி ஏற்பட்ட போது, தமிழகத்திலே இருந்து அதை முதன் முதலாகக் கண்டித்தவன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவனான நான் தான் என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது முதல் எதிர்ப்புக் குரல் தமிழகத்திலே எழுந்தது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் குரல் தான். அந்தக் குரல் எழுந்த நேரத்திலே மறைந்த நம்முடைய அப்துல் சமத் அவர்கள் எவ்வளவு துயரம் உற்றார்களோ, அதே அளவு துயரத்தை நானும் அடைந்து, அவருக்கு நான் ஆறுதல் சொல்ல, அவர் எனக்கு ஆறுதல் சொல்ல, அப்படிப்பட்ட ஒரு சகோதர ஒற்றுமை, சகோதர உணர்வு என்னிடத்திலும் மறைந்த சமத் சாகிப் அவர்களிடத்திலும் இருந்ததை நான் மறந்து விடவில்லை.

அவர் இன்றைக்குப் பிரிந்து விட்டாலுங்கூட, அவரும் நானும் ஒரே லட்சியத்தோடு பாடுபடக் கூடிய பல நேரங்கள் வந்தன. அந்த நேரங்களை நாங்கள் இழந்து விடவில்லை. இழந்து விடாத காரணத்தால் தான், இருப்பதைக் கட்டிக் காக்க வேண்டுமென்று நாங்கள் எண்ணிய காரணத்தால் தான் இன்றைக்கு நம்முடைய பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களோடு இணைந்து இந்த இஸ்லாமிய சமுதாயத்திற்கு என்னென்ன தொண்டுகளை ஆற்ற முடியுமோ, அந்தத் தொண்டுகளை ஆற்றிக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து ஆற்றுவோம் என்ற உறுதியை நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி இப்போது இல்லை. அந்த ஆட்சி இருந்த காலத்திலே இந்தச் சமுதாயத்திற்கு எந்தெந்த வழிகளில் எல்லாம் பாடுபட்டது, பணியாற்றியது என்பதற்கு ஒரு பட்டியலே என்னிடம் இருக்கிறது.

முதன் முதலாக இஸ்லாமிய சமுதாயம் மகிழத் தக்க அளவிற்கு மிலாது நபிக்கு 1969இல் கழக ஆட்சியில் விடுமுறை அளித்து, அதற்குப் பின்பு தமிழகத்தில் ஆள வந்த அ.தி.மு.க. அரசு 2001இல் அதை ரத்து செய்த போதிலும் - மீண்டும் கழக அரசு ஏற்பட்டவுடன் மீலாது நபிக்கு 15.11.2006 அன்று பிறப்பித்த ஆணை மூலம் மீண்டும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.

1973இல் உருது பேசும் முஸ்லிம்கள் எல்லாம் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டார்கள். இன்றைக்கு இல்லாவிட்டாலும்கூட, சொல்லாமல் இருக்க முடியாது - சட்டசபையில் அதற்காக பெருங்குரல் எடுத்துப் பேசியவர் மறைந்த அப்துல் லத்தீப் சாகிப் அவர்கள். அவருடைய வேண்டுகோளையேற்று, அந்த வேண்டுகோள் அவர் ஒருவருடைய வேண்டுகோள் அல்ல, அந்தச் சமுதாயத்தின் வேண்டுகோள் என்பதைப் புரிந்து கொண்டு 1973இல் உருது பேசும் முஸ்லீம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலே சேர்க்கப்படுவார்கள் என்று அறிவித்தது நான் என்பதை இங்கே மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

1974இல் சென்னை அண்ணா சாலை அரசினர் மகளிர் கல்லூரிக்கு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பெயரைச் சூட்டி, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி என்று பெயரிட்டு அழைக்கப்பட்டதும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே தான். 1989இல் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் சமுதாய மக்கள் பெரும் பயன் எய்தும் வகையில் "சிறுபான்மையினர் நல ஆணையம்" 13.2.1989 அன்று உருவாக்கப் பட்டது தி.மு.கழக ஆட்சியிலே தான்.

1998இல் ஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கை 2000 என்பதை 1998இல் 2,200 ஆகவும்; 2008இல் 2,400 ஆகவும் உயர்த்தியதும் தி.மு. கழக ஆட்சியிலே தான். 1998இல் மதுரை வக்ஃபு வாரிய கல்லூரிக் கட்டடங்களைப் பராமரித்திட முதன்முதலாக 5 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டதும் தி.மு.கழக ஆட்சியிலே தான். 1999இல் வக்ஃபு வாரியச் சொத்துகளைப் பராமரிப்பதற்கென முதன் முறையாக 40 இலட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டதும் தி.மு. கழக ஆட்சியிலே தான்.

1999இல் ஹஜ் புனிதப் பயணத்திற்கு குலுக்கல் முறையில் ஏற்பாடு செய்து ஆண்டிற்கு 1800 பேருக்கு மிகாமல் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட முறையைக் கைவிட்டுவிட்டு, 1999 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கியதும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி யிலே தான்.

1999இல் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தில் இருந்து தனியே பிரித்து இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்' 1.7.1999 அன்று உருவாக்கப்பட்டது, தி.மு. கழக ஆட்சியிலே தான். ஆனால் அதைச் சீரழிக்கின்ற வகையில் 2003இல் செல்வி ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அரசு, பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்துடன் மீண்டும் இணைத்த சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை 12.11.2006 இல் மறுபடியும் தனியே செயல்படச் செய்து சிறுபான்மைச் சமுதாய மக்களுக்குத் தொடர்ந்து உதவி யதும் தி.மு. கழக ஆட்சி தான்.

2000இல் உலமா ஓய்வூதியத் திட்டம்' 19.7.2000 முதல் தர்காக்களில் பணிபுரியும் முஜாவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. 2000இல் இஸ்லாமியரின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப்பட்டு 21.7.2000 அன்று "உருது அகாடமி" தொடங்கப்பட்டதும் தி.மு. கழக ஆட்சியிலே தான்.

2001இல் "காயிதே மில்லத் மணிமண்டபம்" 58 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செலவில் சென்னையில் அமைத்திட 25.2.2001 அன்று அடிக்கல் நாட்டி, அது முடிவுறும் தருவாயில் கழக ஆட்சிக் காலம் முடிவடைந்தது. அதற்குப் பிறகு அந்த மணி மண்டபத்திற்கு எவ்வாறு திறப்பு விழா நடைபெற்றது என்பது உங்களுக்குத் தெரியும்.

2007இல் இஸ்லாமியர்களுக்கு; பிற்படுத்தப்பட்டோருக்கான 30 விழுக்காட்டில் 3.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே தான். இது இஸ்லாமியர்களுடைய நீண்ட காலக் கோரிக்கை, தங்களுக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் என்பது. 2007இல் சிறுபான்மையினரின் சமூக, பொருளாதார, கல்வி முன்னேற்றத்திற்கு தனிக்கவனம் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு அவர்களின் நலனுக்கென "தனி இயக்குநரகம்" 6.4.2007 அன்று அமைக்கப்பட்டது.

2008இல் சீறாப்புராணம் பாடிய உமறுப் புலவருக்கு எட்டயபுரத்தில், "அமுதகவி உமறுப்புலவர் மணிமண்டபம்" திறக்கப் பட்டுள்ளது. "உலமா மற்றும் பணியாளர்கள் நல வாரியம்" 24.8.2009 அன்று தி.மு. கழக ஆட்சியில் தான் ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் - 2009 குறித்து, இஸ்லாமிய அமைப்புகள், பேராசிரியர் காதர் மொகிதீன் போன்றவர்கள் மற்றும் இஸ்லாமியப் பெரியவர்கள் என்னைச் சந்தித்து அதைப்பற்றி விவாதித்த போது அவர்கள் கருதியவாறு, விரும்பியவாறு, எண்ணியவாறு, அவர்கள் கேட்டுக் கொண்டவாறு இஸ்லாமியர்களின் திருமணங்களைப் பதிவு செய்யும் படிவத்தில் முறையானதிருத்தங்களை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி செய்தது.

இவைகளையெல்லாம் சொல்வதற்குக் காரணம், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி - இங்கே தம்பி ஸ்டாலின் சொல்லும்போது குறிப்பிட்டாரே; அதைப் போல - இது சிறுபான்மை சமுதாய மக்களுக்காக, "மைனாரிட்டி" மக்களுக்காக இருந்த ஆட்சி என்பதற்கு இவைகள் எல்லாம் தக்க சான்றுகள் என்பதை நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

நாங்கள் ஆட்சியிலே இருந்த போது அடிக்கடி "மைனாரிட்டி" அரசின் தலைவர் கருணாநிதி - மைனாரிட்டி ஆட்சி என்றும் - அம்மையார் ஜெயலலிதா சட்டசபையிலும் குறிப்பிடுவார், வெளியிலும் குறிப்பிடுவார். அவர் எங்கே குறிப்பிட்டாலும், அதற்கு நான் அளித்த பதிலைத் தான் இங்கே ஸ்டாலின் குறிப்பிட்டார். நாங்கள் மைனாரிட்டி தி.மு.க. தான், இந்தியாவிலே இருக்கின்ற மக்கள், தமிழ் நாட்டு மக்கள் மாத்திரமல்ல, மற்ற மாநில மக்களிலும், "மைனாரிட்டி" மக்கள், அவர்கள் கிறித்தவர்களாக இருந்தாலும், முஸ்லீம்களாக இருந்தாலும் அந்த மைனாரிட்டி மக்களுக்காகப் பாடுபட்ட ஆட்சி தான், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

அத்தகைய ஆட்சியை நடத்தி இன்றைக்கு உங்களுடைய அன்பான நன்றியை அதற்கான பரிசாக நான் பெற்று, அந்த நன்றி என்றைக்கும் மறக்கக் கூடிய நன்றி அல்ல, இது பசுமையாக என்னுடைய உள்ளத்திலே பதிந்திருக்கின்ற நன்றி என்பதையும் குறிப்பிட்டு, நீங்கள் இன்று அளித்துள்ள வரவேற்புக்கும் என்னுடைய இதயமார்ந்த நன்றியை உங்களுக்குக் கூறி, இன்றைய இஃப்தார் விருந்தில் நான் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டமைக்காக இந்த வாய்ப்பை அளித்த அனைவருக்கும் என்னுடைய ஆழமான நன்றியை எடுத்துக்காட்டி, உங்களுக்கு இஃப்தார் வாழ்த்து கூறி என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+