'புரட்சித் திலகம்' என்றால் யார் என்று தெரியுமா....?
சென்னை: கட்சித் தலைவர்களாகட்டும், நடிகர்களாகட்டும், ஆளுக்கு ஒரு பட்டப் பெயருடன்தான் அலைந்து கொண்டிருக்கின்றனர்.
சிலர் தங்களுக்குத் தாங்களே பெயர் சூட்டிக் கொள்வார்கள். சிலரோ, மற்றவர்களை விட்டு தங்களுக்கேற்றார் போல பெயர் சூட்டிக் கொள்வார்கள். சிலருக்கு மக்களே பட்டம் சூட்டுவார்கள்.
அந்த வகையில் லேட்டஸ்டாக ஒரு அரசியல் தலைவருக்கு அவரது கட்சியினர் புதுப் பட்டம் சூட்டி மகிழ்ந்துள்ளனர்.

மக்கள் திலகம்
மறைந்த எம்.ஜி.ஆர். நடிகராக இருந்தது முதலே அவருக்கு ஏகப்பட்ட பட்டப் பெயர்கள் இருந்தன. மக்கள் திலகம், புரட்சி நடிகர் என்று நிறைய..

புரட்சித் தலைவர்
ஆனால் அவர் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அவருக்குப் புரட்சித் தலைவர் என்ற பெயர் படு வேகமாக பிரபலமாகி விட்டது. இந்தப் பெயரே இன்று வரை அதிமுகவினரால் அழைக்கப்படுகிறது. மக்கள் மத்தியிலும் நிலைத்து விட்ட பெயர் இது.

டாக்டர் கலைஞர்
திருவாரூர் முத்துவேலர் கருணாநிதி என்றால் யாருக்கும் சீக்கிரம் புரியாது. ஆனால் கலைஞர் என்றால் பட்டென்று பொட்டில் அடித்தது போல நினைவுக்கு வரும். கருணாநிதி என்ற பெயரை விட கலைஞர் என்ற பெயரை திமுகவினர் மத்தியில் மட்டுமல்ல, மக்கள் மத்தியிலும் நிலை கொண்டு விட்டது.. இதுவே அவரது பெயராகவும் மாறிப் போயுள்ளது.

வை.கோபால்சாமி
வை. கோபால்சாமி என்றுதான் பல காலமாக அவரை அழைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் சுருக்கமாக எல்லோரும் வைகோ என்று கூப்பிட அதிகாரப்பூர்வமாகவே தனது பெயரை வைகோ என்று மாற்றி விட்டார் வைகோ.

புரட்சித் தலைவி
ஜெயலலிதாவுக்கு இந்தப் பெயர் வர வேறு எதுவுமே காரணம் இல்லை. புரட்சித் தலைவரின் வாரிசு... எனவே புரட்சித் தலைவி என்று வைத்து விட்டனர். அதற்கு முன்பு வரை செல்வி ஜெயலலிதா என்று மட்டுமே அழைக்கப்பட்ட ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் புரட்சித் தலைவி ஆகி விட்டார்.

தளபதி....
தளபதி என்ற பெயர் ஸ்டாலினுக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் கருணாநிதியின் தளபதியாக அவர் பார்க்கப்பட்டதால் அது வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

புரட்சிக் கலைஞர்
விஜயகாந்த்துக்குச் சொந்தமான பெயர் இது. கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகிய இருவரையும் மிக்ஸ செய்வது போல பெயர் அமைய வேண்டும் என்பதற்காக இந்தப் பெயரை வைத்தார்களா என்று தெரியவில்லை.

கருப்பு எம்.ஜி.ஆர்.
ஆனால் இப்போது புரட்சிக் கலைஞர் என்று கூப்பிடுவதை விட கருப்பு எம்.ஜி.ஆர். என்றுதான் செல்லமாகவும், பாசமாகவும் அழைத்து வருகிறார்கள் தேமுதிகவினர்.

சரி.. புரட்சித் திலகத்திற்கு வருவோம்
இந்த வரிசையில் தற்போது சரத்குமார் இணைந்துள்ளார். அவருக்குப் புரட்சித் திலகம் என்று படா புதுமையாக ஒரு பெயரைச் சூட்டியுள்ளனர்.

அது என்ன புரட்சி.. அது என்ன திலகம்...??
புரட்சித் திலகம் என்றால் என்ன என்று அர்ததம் தெரியவில்லை. ஒருவேளை புரட்சித் தலைவர், மக்கள் திலகம் ஆகியவற்றை எடுத்து தலா ஒரு வார்த்தையை எடுத்து புதுப் பட்டமாக மாற்றியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இனிமே சுப்ரீம் ஸ்டார் இல்லையா...??
ஏற்கனவே சரத்குமாரை சுப்ரீம் ஸ்டார் என்றுதான் அவரது ரசிகர்கள் அழைத்து வந்தனர். தற்போது புதுப் பட்டம் கிடைத்திருப்பதால் இனி இதை பிக்கப் செய்து கொண்டு பழையதை டிராப் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்றாங்கய்யா.. பின்றாங்கய்யா....!

பாக்யராஜும் கூட ஒரு காலத்தில் புரட்சித் திலகம்தான்...
ஆனால் சரத்குமார் தற்போது வாங்கி வைத்துள்ள இந்த புரட்சித் திலகம் பட்டமானது புதிதில்லை.. முன்பே இயக்குநர் கே.பாக்யராஜ் சிறிது காலம் அரசியலில் இருந்தபோது இந்தப் பட்டத்தை வைத்து அழைக்கப்பட்டார்.
ஒருவேளை பாக்யராஜிடமிருந்து சரத்குமார் 'காப்பிரைட்'டை வாங்கி விட்டாரோ...??












Click it and Unblock the Notifications