சுதந்திர தினம்: பட்டொளி வீசி பறக்க தயாராகும் தேசிய கொடிகள்
சென்னை: இந்திய திருநாட்டின் 67வது சுதந்திர திருநாள் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. சுதந்திர திருநாள் கொண்டாட்டங்களுக்கு இப்போதே நாடு தயாராகி வருகிறது. டெல்லி செங்கோட்டை கொத்தளம் அழகுபடுத்தும் பணிகள், வாகன அணிவகுப்புக்கான ஏற்பாடுகள் விரைவாக செய்யப்படுகின்றன.
அதேபோல சென்னை கோட்டை கொத்தளங்கள் பராமரிக்கும் பணி, கொடி மரம் சுத்தப்படுத்தும் பணி போன்ற பணிகள் விரைவாக நடக்கின்றன. அதேபோல பள்ளி, கல்லூரிகளிலும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர்.
தேசிய கொடிகளை பொறுத்தவரை கிழிந்திருக்க கூடாது, நிறம் மங்கியிருக்க கூடாது என்பது போன்ற விதிமுறைகள் உள்ளன. அதனால் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் புதிய கொடிகளையே சுதந்திர தினத்துக்கு பயன்படுத்துவது வழக்கம்.

சிவகாசி தேசிய கொடிகள்
சுதந்திர தினம் நெருங்குவதையொட்டி, சிவகாசியில் தேசியக்கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. சிவகாசியில் உள்ள அச்சகங்களில் தேசியக் கொடிகள், பேட்ஜ், தொப்பி, தேசத் தலைவர்களின் படங்கள் ஆகியவற்றை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. வெளியூர் வியாபாரிகள் சிவகாசிக்கு நேரடியாக சென்று இவற்றை வாங்கிச் செல்கின்றனர்.

விலை அதிகம்
தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் இவை விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. தேசியக் கொடி உள்ளிட்ட அனைத்தும் கடந்த ஆண்டைவிட 15 சதவிகிதம் அளவுக்கு விலை அதிகரித்திருப்பதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் கொடிகள் இல்லை
வழக்கமாக சென்னையில் கடைகளுக்கு திருப்பூரிலிருந்து அதிகளவில் தேசியக் கொடிகள் வரும். ஆனால் மின்வெட்டு காரணமாக திருப்பூரில் பெரும்பாலான மில்கள் இயங்கவில்லை. தேசியக் கொடி வரத்தும் குறைந்தது. இதனால் வேறு வழியின்றி டெல்லி, மும்பை, பெங்களூர் போன்ற நகரங்களிலிருந்து அதிகளவில் தேசியக் கொடிகளை வரவழைத்து விற்பனை செய்து வருகின்றனர். கொடியின் நீள, அகலத்துக்கு ஏற்ப ரூ.20 லிருந்து ரூ.450 வரை விலை உள்ளது. தோரணங்களும் கிடைக்கின்றன.

கொடிக்கு தட்டுப்பாடு
சுதந்திர தின பணிகளை மேற்கொண்டுள்ள கல்வியாளர்கள், அரசு அலுவலகத்தினர் தேசியக் கொடிக்கு தட்டுப் பாடு காணப்படுவதால் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர். மேலும் தற்போது கொடிகளை வாங்குவோர் கொடி அதிக விலைக்கு விற்கப்படுவதால் வேறு வழியின்றி வாங்கி செல்கின்றனர்.

பட்டொளி வீசி பறக்கட்டும்…
சுதந்திர தினத்தன்று பள்ளி வளாகங்கள், அரசு அலுவலகங்கள் மட்டுமல்லாது அனைவரும் வீடுதோறும் தேசிய கொடி ஏற்றி நாட்டின் சுதந்திரத்தை கொண்டாடவேண்டும் என்பது தேசப்பற்றாளர்களின் கோரிக்கையாகும்.
சுதந்திர தினத்தை வித்தியாசமாய் கொண்டாட ஒரு வாய்ப்பு!












Click it and Unblock the Notifications