மலையாளம் தெரிந்தால் மட்டும் கேரள அரசு வேலை: உம்மன் சாண்டி மீண்டும் அறிவிப்பு

கேரளாவில் உம்மன் சாண்டி முதல்வராக பதவியேற்றதும் மலையாளம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்படும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு கேரளாவில் வாழும் தமிழ் மற்றும் கன்னடம் பேசும் சிறுபான்மையின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த உத்தரவு கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் மலையாளம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்க வேண்டும் என்ற உத்தரவை உடனே அமல்படுத்தக் கோரி சில மலையாள அமைப்புகள் அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் மலப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி கலந்து கொண்டார்.
அப்போது அவரிடம் செய்தியாளர்கள் மலையாளம் தெரிந்தால் மட்டுமே அரசு வேலை என்ற உத்தரவு பற்றி கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில், கேரளாவில் அரசு வேலையில் இருக்க வேண்டுமானால் அவர்களுக்கு நிச்சயம் மலையாளம் தெரிந்திருக்க வேண்டும். இதில் எந்தவித மாற்றமும் இல்லை. காங்கிரஸ் கூட்டணி அரசின் இந்த முடிவு துறை ரீதியான நடவடிக்கைக்குப் பிறகு இது தொடர்பான ஆவணம் அரசு தேர்வாணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தேர்வாணயமும் அனுமதி அளித்துவிட்டது. அதனால் இந்த உத்தரவில் மாற்றம் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications