ஃபிரீசர் வாங்க ஆசைப்பட்டு 11 வயது மகளை விற்ற அர்ஜெண்டினா அம்மா தலைமறைவு

அர்ஜெண்டினாவின் பியுனோஸ் எய்ர்ஸ் நகரில் வாழ்ந்து வரும் பாப்லா செசரினா மான்சன் அல்டானா (30) என்ற பெண்ணுக்கு 4 குழந்தைகளாம். நோய்வாய்ப்பட்ட கணாவனால் சம்பாத்தியம் இல்லாத காரணத்தால், தனது 11 வயது மகளை பராகுவே நாட்டில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு வளர்த்து வந்தார். பின் திடீரென மகளை தானே வளர்க்கப் போவதாக கூறி, உறவினர் வீட்டில் இருந்து தன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் அல்டானா.
சமீபத்தில், பியுனோவ் எய்ர்ஸ் அருகே இயங்கி வரும் பெர்னல் தொழிற்பேட்டையில் குழந்தை தொழிலாளர்களை சித்ரவதை செய்து வேலை வாங்குவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு ஆய்வு செய்தனர். அப்போது பல குழந்தைகள் அங்கிருந்து மீட்கப் பட்டனர். மீட்கப்பட்ட குழந்தைகளிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், 11 வயது சிறுமி ஒருவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சி அளிப்பதாக இருந்ததாம்.
அதில் அச்சிறுமி கூறியதாவது, 'என் அப்பா ஓடியாடி, வேலை செய்ய முடியாமல் நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறார். அவரை கவனித்துக் கொண்டு என்னையும் சேர்த்து 4 குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்ட எனது தாயார், என்னை வேலைக்கு அனுப்பினார்.
எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் வசித்தவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு சென்றனர். அப்போது அவர்களின் வீட்டில் இருந்த ஃப்ரீஸர் (இறைச்சியை உறைய வைத்து பாதுகாக்கும் பெட்டி) உள்பட சில பொருட்களை எடுத்துக் கொள்கிறீர்களா? என்று என் அம்மாவிடம் கேட்டனர். எங்களிடம் அவ்வளவு பணம் இல்லையே... என்று என் அம்மா கூறியபோது, 'பணம் இல்லை என்றால் பரவாயில்லை. உங்கள் மகளை எங்களுக்கு தந்துவிட்டு, எங்கள் பழைய சாமான்களை எல்லாம் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்' என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஃப்ரீஸருக்கு ஆசைப்பட்ட என் அம்மா என்னை அவர்களுக்கு விற்று விட்டார். என்னை வாங்கி வந்தவர்கள் இந்த அலுமினியம் கம்பெனி முதலாளியிடம் நல்ல விலைக்கு விற்று விட்டனர்.
இந்த கம்பெனியை நடத்துபவர்கள் என்னைப்போன்ற சிறுமிகள் பல மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று அடித்து, உதைத்து சித்ரவதை படுத்தினர். மேலும், இங்குள்ள சிலர் எங்களை மிரட்டி பாலியல் பலாத்காரமும் செய்து வருகின்றனர்' எனத் தெரிவித்தாள்.
அச்சிறுமி அல்டானாவின் மகள் என்பது விசாரணையில் உறுதியானதைத் தொடர்ந்து, அச்சிறுமியின் தாயாரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications