2ஜி: தயாளு அம்மாளிடம் சாட்சியம் பெற சென்னை பெருநகர மாஜிஸ்திரேட் நியமனம்

2ஜி ஊழல் வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ஒரு சாட்சியமாக சேர்க்கப்பட்டார். ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக அவரால் டெல்லியில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. அதனால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு அவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவின்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் குழு சென்னைக்கு சென்று தயாளு அம்மாளின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கையை சமர்பித்தது. அதன் பிறகு 2ஜி வழக்கில் தயாளு அம்மாள் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 22ம் தேதி உத்தரவிட்டது.
ஆனால் தயாளு அம்மாளிடம் சென்னையில் வைத்தே சாட்சியம் பெற வேண்டும் என்று அது உத்தரவிட்டது. அதன்படி தயாளு அம்மாளிடம் சாட்சியம் பெற சென்னை தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்ற தலைமை மாஜிஸ்திரேட் ஒருவரை சிறப்பு சிபிஐ நீதிமன்றம் நியமித்துள்ளது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சாட்சியத்தை பதிவு செய்து அனுப்பி வைக்க வேண்டும் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications