உளவுத்துறை ரிப்போர்ட்டில் புகுந்த நிழல் மனிதர்! சைலண்டாக விஜய் போட்ட ஆர்டர்! அப்போ ஜான் ஆரோக்கியசாமி?
சென்னை: தவெகவின் மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணமாக கருதப்பட்டவர் ஜான் ஆரோக்கியசாமி. இப்போது இவருடைய முக்கியத்துவம் அரசில் குறைகிறதோ? என்ற விவாதம் கிளம்பியுள்ளது. காரணம், உளவுத்துறை அறிக்கை விவகாரத்தில் முதல்வர் விஜய், பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவு இப்படியொரு சந்தேகத்தை கிளப்பி உள்ளது.. இதுகுறித்து எக்ஸ்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது...!!!
தவெகவில் தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்ட ஜான் ஆரோக்கியசாமி, கட்சியின் மாபெரும் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் முதன்மையான நிழல் நபராக கருதப்படுகிறார்.. வாக்காளர்களின் மன ஓட்டத்தைக் கணித்து மைக்ரோ பிளான்களை வகுத்தது, விஜயின் பேச்சு, உடல்மொழி மற்றும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட வைத்தது எல்லாமே ஜான் ஆரோக்கியசாமியின் பிளான் என்றார்கள்.

திமுகவை அரசியல் எதிரி என்றும் பாஜக-வை கொள்கை எதிரி என்றும் பிரகடனம் செய்ய வைத்த இவருடைய வியூகமே இந்த வெற்றிக்கு முக்கிய காரணியாக அமைந்தது..
ஜான் ஆரோக்கியசாமி யார்
அதுமட்டுமல்ல தவெகவுக்குள்ளேயே கிளம்பிய விமர்சனங்கள், திமுக உள்ளிட்டவைகளிலிருந்து கிளம்பிய எதிர்ப்புகள் என எதற்கும் அஞ்சாமல் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் விஜயின் வெற்றியை மட்டுமே ஒற்றை இலக்காகக் கொண்டு அர்ப்பணிப்புடன் பணியாற்றி சாதித்தும் காட்டியவர் ஜான் ஆரோக்கியசாமி என தகவல்கள் மீடியாவில் பரபரத்ததை மறுக்க முடியாது,
இந்நிலையில், ஜான் ஆரோக்கியசாமி குறித்த முக்கிய தகவல் ஒன்று நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.. கோட்டையில் இப்போது இதுதான் ஹாட் டாபிக்காகும்.
விஜய்க்கு 2 முறை ரிப்போர்ட்
அதாவது தமிழக அரசியல் களத்தில் எப்போதும் உளவுத்துறை ரிப்போர்ட்டுகளுக்கு தனி மவுசு உண்டு. எந்தவொரு முதல்வராக இருந்தாலும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை என்ன, மக்கள் என்ன நினைக்கிறார்கள், கட்சிகளுக்குள் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள இந்த ரிப்போர்ட்டுகளைத்தான் பெரிதும் நம்பியிருப்பார்கள். அந்த வகையில், தற்போதைய முதல்வர் விஜய்க்கும் தினமும் காலை, மாலை என இரண்டு முறை மாநில உளவுத்துறை மிக முக்கியமான அறிக்கைகளை அனுப்பி வருகிறது.
இந்த அறிக்கைகள் சாதாரணமானவை கிடையாது.. மிக மிக ரகசியமானவை. விதிகளின்படி, இந்த ரிப்போர்ட்டுகளை முதலமைச்சர் மட்டுமே முதலில் பார்க்க வேண்டும். அவர் முழுமையாகப் படித்துப் பார்த்த பிறகு, அதில் இருக்கும் விவகாரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளை அழைத்து விவாதிக்கலாம். இதுதான் காலங்காலமாக நடக்கும் நடைமுறை.
உளவுத்துறை ரிப்போர்ட்
ஆனால் இப்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துக் கிளம்பியுள்ளது.. முதல்வரின் பார்வைக்கு இந்த உளவுத்துறை அறிக்கை செல்வதற்கு முன்பாகவே, முதல்வரின் ஆலோசகர் என்று சொல்லப்படுகிற ஜான் ஆரோக்கியசாமி அந்த ரகசிய ரிப்போர்ட்டுகளைப் பார்ப்பதாகவும், அவர் பார்த்த பிறகுதான், அந்த விவரங்கள் முதல்வரின் கவனத்துக்கே எடுத்துச் செல்லப்படுகிறது என்றும், இதனால் அரசின் மிக முக்கியமான ரகசியங்கள் வெளியே லீக் ஆகின்றன என்றும் பரபரப்பான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஆலோசகராக இருந்தாலும், உளவுத்துறையின் ரகசிய அறிக்கையை முதலமைச்சருக்கு முன்பே பார்ப்பதா என்று அதிகாரிகள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் விவாதங்கள் ஓடிக்கொண்டிருந்தன. இந்த விவகாரம் முதல்வர் விஜயின் காதுகளுக்கும் சென்றிருக்கிறது.
விஜய் போட்ட உத்தரவு
விஷயத்தை கேள்விப்பட்டதும் முதல்வர் விஜய் சத்தமில்லாமல் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளாராம்.. "உளவுத்துறை அறிக்கை முதலில் எனது பார்வைக்கு மட்டும்தான் வரவேண்டும். இடையில் யாரும் அதைப்பார்ப்பதற்கு அனுமதிக்கக் கூடாது" என்று உளவுத்துறைக்கே மிகத் தெளிவான உத்தரவை நேரிடையாகப் பிறப்பித்திருக்கிறாராம் முதல்வர் விஜய்.
இதன் மூலம், ஆலோசகராக இருந்தாலும் ரகசிய ரிப்போர்ட் விஷயத்தில் தலையிடக் கூடாது என்பதை விஜய் கறாராக உணர்த்தியிருப்பதாகச் சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதிகாரப் பகிர்வில் யாருக்கு எவ்வளவு எல்லை என்பதை முதல்வர் விஜய் கனகச்சிதமாக வகுக்கத் தொடங்கிவிட்டார் என்பதையே நம்முடைய இந்த எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள் காட்டுகின்றன.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications