இந்தி எம்.பி. தமிழைப் புகழ்ந்திருப்பது பெருமை தருகிறது, பாராட்டுக்குரியது- அசோகமித்திரன்
சென்னை: உத்தரகாண்ட் எம்.பி. தருண் விஜய் தமிழ் மொழியைப் புகழ்ந்து பேசியிருப்பது பாராட்டுக்குரியது என்று பிரபல தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரன் கூறியுள்ளார்.
அசோகமித்திரன் மட்டுமல்லாமல் பல்வேறு அரசியல் தலைவர்களும், தமிழறிஞர்களும், எழுத்தாளர்களும் உத்தரகாண்ட் எம்.பியின் பேச்சை வரவேற்றுள்ளனர்.
இந்தி பேசும் ஒரு மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி, தமிழை இந்த அளவுக்குப் புகழ்ந்து பேசியிருப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்க ஒன்று, இந்தி பேசும் மக்களின் மன நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை இது வெளிக்காட்டுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அசோகமித்திரன் பாராட்டு
பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் கூறுகையில், என்ன காரணத்திற்காக அவர் அப்படிப் பேசினார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் உத்தரகாண்ட்டைச் சேர்ந்த ஒருவர் இந்த அளவுக்குப் பேசியிருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

மற்றவர்களும் எழுப்பலாம்...
பெரும்பாலான தமிழர்கள் நாடு முழுவதும் தமிழ் தேசிய மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். அதேசமயம், தெலுங்கு, கன்னடனம், பெங்காலி போன்றவையும் வளர்ந்த மொழிகள்தான். அவர்களும் இதேபோல கோரிக்கை எழுப்ப வாய்ப்புண்டு.

ஐரோப்பியர்களின் எஸ்பரன்டோ கோரிக்கை
ஐரோப்பியர்கள் முன்பு உலகம் முழுவதும் தங்களின் எஸ்பரன்டோ மொழி பேசப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை என்றார் அசோகமித்திரன்.

தெலுங்குத் துறை தலைவர் சொல்வது என்ன...
சென்னை பல்கலைக்கழகத்தின் தெலுங்குத் துறைத் தலைவர் டாக்டர் சம்பத் குமார் கூறுகையில், உத்தரகாண்ட் எம்.பியின் கோரிக்கையில் தவறில்லை. அதேசமயம், நாட்டில் அதிகஅளவில் பேசப்படும் 2வது மொழி தெலுங்கு. எனவே அதற்கு உரிய இடம் தர வேண்டும். மேலும், வட இந்திய மாநிலங்களில் தென்னிந்திய மொழி ஒன்றை 2வது மொழியாக கற்பிக்க வேண்டும். காரணம், தென்னிந்தியாவில் பெரும்பாலானவர்கள் இந்தியைக் கற்றுக் கொள்கிறார்கள், பேசுகிறார்கள் என்பத அவர்கள் உணர வேண்டும் என்றார்.

கன்னடத்து அனந்தமூர்த்தியின் கருத்து
பிரபல கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி கூறுகையில், ஒரு மொழியின் முக்கியத்துவம் என்பது அது எப்படி கற்றுத் தரப்படுகிறது என்பதில்தான் உள்ளது. மாறாக அதற்கு செம்மொழி அந்தஸ்து தருவதிலோ அல்லது தேசிய மொழி அந்தஸ்து தருவதிலோ இல்லை. ஒரு குறிப்பிட்ட மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நாட்டின் பன்முகக் கலாச்சாரத்தை நாம் பாழ்படுத்தி விடக் கூடாது என்றார்.

எல்லாமே தேசிய மொழிகள்தான்.. மலையாளத்து சச்சிதானந்தன்
மலையாள கவிஞர் சச்சிதானந்தன் கூறுகையில், அனைத்து இந்திய மொழிகளுமே தேசிய மொழிகள்தான். எனவே ஒரு குறிப்பிட்ட மொழிக்கு மட்டும் தேசிய மொழி அந்தஸ்து தருவது சரியாக இருக்காது என்பது எனது கருத்து என்றார்.












Click it and Unblock the Notifications