வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்தம்.. வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலில் புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்தம் ஏற்பட்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் மழை நீடிக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்கக் கடலில் ஏறபட்டுள்ள வளி மண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள காற்றின் சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் அனேக இடங்களில் மழை பெய்துள்ளது.

இந்த நிலையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில்,

Rain to lash TN and Puducherry

ஆந்திரா அருகே வங்க கடலில் வளி மண்டலத்தின் மேல் அடுக்கில் உருவான சுழற்சி காரணமாக நேற்றிரவு தமிழ்நாட்டில் வடமேற்கு மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்துள்ளது.

இந்த சுழற்சி இன்னும் நீடிப்பதால் இன்றிரவும் மழை பெய்யும். வட மாவட்டங்களில் அனேக இடங்களிலும், மற்ற பகுதிகளில் ஓரிரு பகுதிகளிலும் மழை எதிர்பார்க்கலாம்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும். தற்போது ஆந்திரா அருகே மத்திய மேற்கு வங்க கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இது நகரும் பட்சத்தில் தமிழ்நாட்டில் மேலும் மழை பெய்யும் என்றார் அவர்.

இன்று புதுச்சேரியில் அதிகபட்சமாக 10 செமீட்டர் மழை பெய்துள்ளது. இதேபோல கும்பகோணம், கடலூர், விழுப்புரம், மயிலம், உளுந்தூர்ப்பேட்டை, சிதம்பரம், நெய்வேலி, குடவாசல், ஓமலூர், வாழப்பாடி, தர்மபுரி, திருப்பத்தூர், அரியலூர், மன்னார்குடி, ஈரோடு, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், விருத்தாச்சலம், பாபநாசம், வால்பாறை, வலங்கைமான், ஓசூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.

சேலத்தில் விடிய விடிய மழை

சேலம் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. நேற்று இரவும் சேலத்தில் விடிய, விடிய மழை பெய்தது. இதனால் கிச்சிப் பாளையம் பகுதியில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது.

அஸ்தம்பட்டி, செவ்வாய்ப்பேட்டை, புதிய பஸ்நிலையம், பழைய பஸ் நிலையம், அம்மாப்பேட்டை, குகை உள்பட பல பகுதிகளில் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

ஏற்காடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. ஏற்காட்டில் பெய்து வரும் மழையால் டேனிஷ்பேட்டை ஏரியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. ஏற்காடு மழை அடிவாரத்திலும் மழை கொட்டியதால், கோரிமேடு ஏடிசி நகர் பகுதியில் உள்ள கால்வாயில் தண்ணீர் கரை புரண்டு ஓடியது.

இந்த நீர் பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில் பின் பகுதியில் உள்ள தோப்புக் காடு பகுதிக்குள் புகுந்தது. இதனால் இந்த பகுதியில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது. இந்த பகுதி தாழ்வான பகுதியால் மழை நீர் தேங்கி அப்படியே நின்றது.

பொதுமக்கள் வீடுகளில் புகுந்த மழை நீரை வாளி மற்றும் பாத்திரங்களில் எடுத்து சாக்கடைகளில் கொட்டினர். விடிய விடிய பெய்த மழையால் மழை நீர் வெளியேறாமல் தேங்கி நின்றது. இன்று அதிகாலையில் தான் மழை நீர் வடிந்தது. மழை நீர் வீடுகளில் புகுந்ததால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்தனர்.

மேட்டூரில் நீர் திறப்பு குறைப்பு

இந்த நிலையில் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடுவது குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரை திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் டெல்டா பகுதியில் தற்போது தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. இதனால் பாசன தேவைக்கான தண்ணீரின் அளவு குறைந்தது. இதையடுத்து அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது.

நேற்று காலையில் அணையில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இது நள்ளிரவு 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 10800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 109.40 அடியாக இருந்தது. அணைக்கு 12,365 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மேலும் கனமழையால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+