நாடாளுமன்றத்திற்கு வருவதில் இளம் எம்.பிக்கள்தான் 'டாப்'.. முதலிடம் மீனாட்சிக்கு!
டெல்லி: நாடாளுமன்றக் கூட்டங்களுக்கு வருவதில் இளம் எம்.பிக்கள்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அனுபவம் வாய்ந்த எம்.பி்க்களைக் காட்டிலும் இவர்கள்தான் அதிக அளவிலான நாட்களில் கூட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 வயதான எம்.பி. மீனாட்சி நடராஜன்தான் அதிக அளவில் கூட்டங்களுக்கு வந்த எம்.பி என்ற பெயரைப் பெற்றுள்ளார். இவர் 85 சதவீத அட்டென்டென்ஸ் வைத்துள்ளார்.
2வது இடம் பாஜகவுக்குக் கிடைத்துள்ளது. அக்கட்சியின் 38 வயதான அனுராக் தாக்கூர், 84 சதவீத வருகைப் பதிவேட்டை வைத்துள்ளார்.
ராகுல் காந்தி இந்தப் பட்டியலில் 50 சதவீதத்திற்கும் குறைவான வருகைப் பதிவை வைத்துள்ளார். அதேசமயம், இவரது சித்தப்பா மகன் வருண் காந்தி பரவாயில்லை, அவர் 65 சதவீத வருகையை வைத்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்து மீனாட்சி
மத்தியப் பிரதேச மாநிலம் மந்தசூர் தொகுதியிலிருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மீனாட்சி நடராஜன். 40 வயதான இவர் 2009ம் ஆண்டிலிருந்து 85 சதவீத வருகைப் பதிவேட்டை வைத்துள்ளார்.

16 விவாதங்களில் பங்கேற்பு
ராகுல் காந்திக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருக்கும் மீனாட்சி, 16 விவாதங்களில் கலந்து கொண்டுள்ளார். 135 கேள்விகளைக் கேட்டுள்ளார்.

பாஜகவுக்கு 2வது இடம்
பாஜகவின் 38வயதான அனுராக் தாக்கூர் 84 சதவீத வருகைப் பதிவேட்டைவைத்துள்ளார். இவர் மொத்தம் 61 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். ஒரு தனி நபர் மசோதாவைத் தாக்கல் செய்துள்ளார். 540 கேள்விகளைக் கேட்டுள்ளார்.

3வது இடத்தில் ஹம்துல்லா சயீத்
லட்சத்தீவு காங்கிரஸ் எம்.பியான ஹம்துல்லா சயீத் 82 சதவீத வருகைப் பதிவேட்டை வைத்துள்ளார். 572 கேள்விகளைக் கேட்டு அசத்தியுள்ளார். 2 தனி நபர் மசோதாக்களையும் தாக்கல் செய்துள்ளார்.

1000 கேள்விகள் கேட்ட ஓவைசி
அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தஹதுல் உறுப்பினரான 44 வயது அசாதீன் ஓவைசி 1042 கேள்விகளைக் கேட்டுள்ளார். 69 சதவீத வருகைப் பதிவை வைத்துள்ளார். 38 விவாதங்களில் கலந்து கொண்டுள்ளார்.

ராகுலுக்கு வயதும் 43.... அட்டென்டென்ஸும் 43
43 வயதான காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 43 சதவீத வருகைப் பதிவேட்டை மட்டுமே வைத்துள்ளார்.

ஒரு விவாதத்தில் மட்டுமே
அமேதி தொகுதி எம்.பியான ராகுல் காந்தி ஒரே ஒரு விவாதத்தில் மட்டுமே கலந்து கொண்டுள்ளார். ஒரு தனி நபர் மசோதாவைக் கூட அவர் தாக்கல் செய்ததில்லை.

தம்பி வருண் பரவாயில்லையே...!
ராகுல் காந்தியின் சித்தப்பா மகன் வருண் காந்தி பரவாயில்லை. 33 வயதான அவர் 65 சதவீத வருகைப் பதிவை வைத்துள்ளார். 2 விவதங்களில் கலந்து கொண்டுள்ளார். 618 கேள்விகளைக் கேட்டுள்ளார். 2 தனி நபர் மசோதாக்களையும் தாக்கல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications