ஜெயலலிதா பதவிக்கு போட்டியிட அதிமுகவினரே தயாரா...?
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு உறுப்பினர் உரிமைச் சீட்டு வழங்கும் பணி முடிந்தவுடன் தேர்தல் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட திட்ட விதிகளின்படி, கட்சி அமைப்புகளின் பொது தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்திட வேண்டும், என்பதற்கு இணங்க, அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான பணிகள் தொடங்கப்பட்டு ஏராளமானோர் உறுப்பினர் உரிமைச் சீட்டு வேண்டி, அதற்கான விண்ணப்ப படிவங்களை தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்துள்ளனர். தற்போது இவர்களுக்கான உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் தயார் செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

கட்சியின் சட்ட திட்ட விதிகளின் படி, கழகத்தின் பொதுச் செயலாளர் தமிழ்நாட்டில் உள்ள கிளைக் கழகங்களின் அடிப்படை உறுப்பினர்களாலும், கட்சி அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலக் கழகங்களில் அடங்கிய கிளைக் கழகங்களின் உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
தற்போது உறுப்பினர் உரிமைச் சீட்டு அச்சடிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டு இருப்பதை கருத்தில் கொண்டு, கழக சட்டத்திட்ட விதிகளின் படி கழக சட்ட திட்ட விதிகளுக்கு, விதி விலக்கு அளிக்கும் அதிகாரம் கழகப் பொதுச் செயலாளருக்கு உண்டு என்ற அதிகாரத்தின் அடிப்படையில், கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வழங்கும் பணி நிறைவு பெற்றவுடன், கழக பொதுச் செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் நடைபெறும் என்பதையும், இதனை தொடர்ந்து அடுத்தக் கட்ட கழக அமைப்புத் தேர்தல்கள் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications