அசட்டுச் சிரிப்பால் 14 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற சீன அதிகாரி
பெய்ஜிங்: விபத்தைப் பார்வையிடச் சென்ற இடத்தில் சிரித்ததால், சீன அதிகாரி ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது சீன நீதிமன்றம்.
சிரித்ததெற்கெல்லாமா சிறைத் தண்டனைக் கொடுப்பார்கள் என அதிர்ச்சியடையாதீர்கள். சிரிப்பதற்கும் இடம், பொருள், ஏவல் இருக்கிறது. ஆனால், சிலர் சமயமறியாமல் சிரித்து பிரச்சினையில் சிக்கிக் கொள்வதுண்டு.
அப்படித் தான், சீன அதிகாரி ஒருவர் கட்டிட இடிபாடுகளைப் பார்வையிடச் சென்றபோது, சம்பவ இடத்தில் அசட்டுத் தனமான சிரிப்பொன்றைச் சிரித்து வைக்க, அதன் விளைவாக தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

பயங்கர விபத்து.....
சீனாவில் உள்ள ஷான்ஜி மாகாணத்தில் பாதுகாப்பு நடவடிக்கை உயர் அதிகாரியாக பணியாற்றியவர் யாங் டாகாய். கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அப்பகுதியில் நடந்த ஒரு விபத்தொன்றில் சிக்கி 36 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். சம்பவ இடத்தை பார்வையிட சென்றார் அதிகாரி யாங் டாகாய்.

சிரித்து சிக்கிக் கொண்ட அதிகாரி......
மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களிடம் பேசிக் கொண்டிருந்த யாங், எதேச்சையாக சிரித்து வைக்க, அக்காட்சியைப் படம் பிடித்த பத்திரிக்கையாளர் ஒருவர் அதனை இணைய தளாத்தில் வெளியிட்டு விட்டார்.

மக்கள் கோபம்....
படத்தில் யாங் கையில் ஆடம்பர கைக்கடிகாரம் அணிந்திருந்ததும், விலை உயர்ந்த பல சொகுசு பொருட்களை அணிந்திருக்கும் படங்களும் வெளியானதால் மக்கள் கடும் கோபத்திற்கு ஆளானார்கள்.

சகோதரர் கடிகாரம்....
விபத்தை பார்வையிட்ட போது சிரித்தது, ஆடம்பர பொருட்களை அணிந்திருந்தது என மக்களின் ஏகோபித்த கண்டனத்திற்கு ஆளானார் யாங். இதனால் ‘சகோதரர் கைக்கடிகாரம்' என்ற புனைப்பெயருடன் அவரை அழைக்க ஆரம்பித்து விட்டார்கள் மக்கள்.

லஞ்சம், ஊழல்....
அவரைப் பற்றி விசாரணை மேற்கொண்டதில், லஞ்ச, முறைகேடு விசாரணை வளையத்தில் சிக்கினார் யாங். ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதும், வங்கி கணக்கில் முறைகேடாக ரூ.5 கோடியை சேமித்து வைத்திருப்பதையும் கண்டறிந்தனர் அதிகாரிகள்.

உற்சாகப் படுத்தவே சிரித்தேன்....
இதனைத் தொடர்ந்து யாங் பேரில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த யாங், ' சட்டபூர்வ வருமானத்தில் சொகுசு கடிகாரத்தை வாங்கியதாகவும், விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணி ஊழியர்களை உற்சாகப்படுத்தவே முயற்சி செய்தேன்' எனவும் விளக்கமளித்தார்.

14 ஆண்டுச் சிறை....
ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதி, யாங் மீது சுமத்தப் பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டதால் அவருக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications