23 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி 14 பேர் பலி.. இறந்த 3 இந்தியர்கள் யார் யார்? சோக பின்னணி
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தை லாரியால் சங்கிலி தொடர் விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்து மொத்தம் 23 வாகனங்கள் விபத்தில் சிக்கியதில் கேரளாவை சேர்ந்த 3 இந்தியர்கள் உள்பட மொத்தம் 14 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கோர விபத்தில் இறந்த கேரளாவை சேர்ந்த 3 பேரின் சோக பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைரா நுழைவு பகுதியில் நேற்று நள்ளிரவில் கோரமான விபத்து ஒன்று நடந்தது. செய்க் கலிஃபா பின் ஜயத் ரோட்டில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து வாகனம் ஒன்றின் மீது மோதி மோதி கவிழ்ந்தது.

சாலையில் கவிழ்ந்த லாரி, அடுத்தடுத்து அங்கு நின்று கொண்டிருந்த வாகனங்கள், நகர்ந்து கொண்டிருந்த வாகனங்கள் மீதும் மோதியது. மொத்தம் 5 லாரிகள் உள்பட 23 வாகனங்கள் விபத்தில் சிக்கின. அதுமட்டுமின்றி விபத்துக்கு காரணமான அந்த லாரி தீப்பற்றி எரிந்ததோடு, இந்த தீ பிற வாகனங்களுக்கும் பரவியது.
வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. வாகனங்களில் பயணித்த 3 இந்தியர்கள் உள்பட 14 பேர் இறந்தனர். 30 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 15 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய நிலையில் இன்னும் 15 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை தொடர்ந்து வருகிறது.
இந்த விபத்தில் இறந்த 14 பேரில் 3 பேர் கேரளாவை சேர்ந்தவர் ஆவார்கள். கேரளாவின் மலப்புரம் ஏஆர் நகரை சேர்ந்த முஸ்லீம் லீக் தலைவரான சித்திக்கின் இரட்டை குழந்தைகளான மகன் முகமது அஸ்மில் (வயது 21), சகோதரி மிஸ்னா ஜுபின் (21) இன்னொரு மகள் ஃபர்சானாவின் மகன் முகமது பயாஸ் (3) ஆகியோர் இறந்துள்ளனர். இதில் முகமது அஸ்மில், மிஸ்னா ஜுபின் ஆகியோர் கேரளாவில் 10ம் வகுப்பு படிப்பை முடித்தனர். அதன்பிறகு ஐக்கிய அரபு அமீரகம் சென்றனர்.
சித்திக் தனது மனைவி ஆரிஃபா மற்றும் மகள் ஃபர்சானா , பேரன் பயாஸ் ஆகியோருடன் கடந்த 10ம் தேதி மலப்புரத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். பர்சானாவிற்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக அவர்கள் அங்கு சென்றபோது தான் விபத்து ஏற்பட்டது. இதில் சித்திக்கின் இரட்டை குழந்தைகளான ஒரு மகன் முகமது அஸ்மில், ஒரு மகள் மிஸ்னா ஜுபின், பேரன் முகமது பயாஸ் ஆகியோர் இறந்துள்ளனர்.
இதனை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. கேரளாவை சேர்ந்த 3 பேரின் குடும்பத்தினரிடமும் தொடர்பில் உள்ளதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்து பற்றி ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்துறை அமைச்சகம் கூறுகையில், ''5 லாரிகள் உள்பட மொத்தம் 23 வாகனங்கள் விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் லாரி தீப்பற்றி எரிந்தது. அந்த தீ பிற வாகனங்களுக்கும் பரவியது. இதனால் தான் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என கூறப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
