அரியலூரில் மழையில் மிதந்து வந்த 2 பூனைக்குட்டிகள்.. வீட்டுக்கு வந்ததும் தாயாக மாறிய நாய்
அரியலூர்: இயற்கையின் விசித்திரங்களுக்கு எப்போதுமே எல்லையே கிடையாது.. வழக்கமாக பூனையை கண்டாலே சீறிப்பாய்ந்து துரத்தும் நாய்களைத்தான் நாம் பார்த்திருப்போம். "பூனையும் நாயும் போல" என்ற பழமொழியே இந்த ஜென்மப் பகையை வைத்துத்தான் உருவானது. ஆனால், அந்த பழமொழியையெல்லாம் பொய்யாக்கி, தாய்மைக்கு எந்த எல்லைகளும் தடைகளும் கிடையாது என்பதை நிரூபிக்கும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் தான் இப்போது அரியலூர் அருகே நடந்துள்ளது.
அரியலூர் மாவட்டம் நின்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மனைவி திலகவதி. சுமார் 1 மாதத்திற்கு முன்பு, அந்த பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.

அரியலூர் அதிசயம்
அப்போது அருகே உள்ள ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்க, ஓடையின் ஓரத்தில் இருந்த ஒரு பாறையின் மீது ஏதோ சத்தம் கேட்பதை வேல்முருகனும் அவரது மனைவியும் கவனித்துள்ளனர். அருகே சென்று பார்த்தபோது, வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட 2 குட்டி பூனைகள், தாயைப் பிரிந்து உயிருக்கு போராடியபடி சத்தம் போட்டபடி இருந்துள்ளன..
தாயை இழந்து ஆதரவற்று தவித்த அந்த பிஞ்சு உயிர்களை பார்த்ததும், வேல்முருகன் தம்பதியினருக்கு மனசு கேட்கவில்லை. உடனே அந்த பூனைக்குட்டிகளை பத்திரமாக மீட்டு, தங்கள் வீட்டிற்கு எடுத்து வந்து பாசத்தோடு வளர்க்கத் தொடங்கினார்கள்.. ஆனால், விஷயம் இத்துடன் முடியவில்லை..
வேல்முருகனின் 2 பூனைக்குட்டிகள்
வேல்முருகனின் வீட்டில் ஏற்கனவே ஒரு பெண் நாய் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்டு வந்தது. புதியதாக வீட்டிற்குள் வந்த பூனைக்குட்டிகளைப் பார்த்ததும் நாய் என்ன செய்யப் போகிறதோ என்று தான் அனைவரும் முதலில் பயந்தனர். ஆனால் வீட்டிற்கு வந்த ஆதரவற்ற பூனைக்குட்டிகளை முதலில் ஒரு நண்பனைப் போல ஏற்றுக்கொண்ட அந்த நாய், நாளடைவில் அவைகளுக்கு தாயாகவே மாறிவிட்டது.
ஆம், தாயை இழந்து தவித்த அந்த 2 பூனைக்குட்டிகளுக்கும், தன் சொந்தக் குட்டிகளைப் போலவே தாய்மையோடு பாலுாட்டி வளர்க்கத் தொடங்கியது அந்த நாய். இப்போது அந்த பூனைக்குட்டிகளும் நாயைப் பிரிவதே இல்லை. நாயின் உடலின் மேல் ஏறி விளையாடுவது, அது செல்லும் இடங்களுக்கெல்லாம் பின்னாடியே ஓடுவது என ஒரே குதூகலமாக சுற்றி வருகின்றன.
தாயாக மாறிய நாய்
பூனையைக் கண்டாலே துரத்திப் பிடிக்கும் நாய்களுக்கு மத்தியில், தன் எஜமானின் வீட்டிற்கு ஆதரவற்று வந்த பூனைக்குட்டிகளைத் தன் சொந்தக் குழந்தைகளாகப் பாவித்து பாலுாட்டி வரும் அந்த நாயின் தாய்மை குணத்தைஅபார்த்து, நின்னியூர் கிராம மக்களே மெய்சிலிர்த்துப் போயுள்ளனர்.
தினமும் ஏராளமான கிராம மக்கள் வேல்முருகனின் வீட்டிற்கு வந்து இந்த அதிசயக் காட்சியைக் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.அ இந்த அதிசயத்தை வீடியோ எடுத்து இணையத்தில் பதவிட, அதை பார்த்து மொத்த பேரும் வாயடைத்து போயுள்ளார்கள்..
விலங்கினங்களுக்குள் இருக்கும் இந்த எல்லையற்ற அன்பும் தாய்மையும், மனிதர்களுக்கு உணர்த்தும் பாடம் தான் எத்தனை பெரியது...!!!


Click it and Unblock the Notifications
