கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு.. பூஜை செய்ய முடியவில்லை என அர்ச்சகர் வேதனை
அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் அபிஷேகத்துக்கே தண்ணீர் இல்லை என்றும், பூஜைக்கு எண்ணெய் கூட தருவதில்லை என்றும் கோயில் அர்ச்சகர் புகார் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயில், உலக நாடுகள் வியக்கும் அளாவுக்கு, பழந்தமிழர்களின் கட்டடக் கலைக்குச் சான்றாகத் திகழ்கிறது.

இந்த நிலையில், பிரகதீஸ்வரர் கோயிலில் தினசரி அபிஷேகம் செய்வதற்குக்கூட தண்ணீர் இல்லை என கோயில் அர்ச்சகர் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ச்சகர் தியாகராஜ குருக்கள், "25 ஆண்டுகளாக பூஜை செய்து வருகிறேன். கோயிலில் தினசரி அபிஷேகத்துக்குக்கூட தண்ணீர் இல்லை. சிங்கமுக கிணற்றில் இருந்துதான் நீரை எடுத்து அபிஷேகம் செய்து வந்தேன். தற்போது சிங்கமுக கிணற்றிலும் சுத்தமாக தண்ணீர் ஒரு சொட்டு கூட இல்லை. இதனால் அபிஷேகம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
பௌர்ணமி அன்று கூட அபிஷேகம் செய்ய முடியவில்லை. ஆடி திருவாதிரையின்போது அரசு விழாவுக்கு ரூ. 50,000 செலவு செய்தேன். அந்தப் பணமும் இன்னும் திரும்ப வரவில்லை. கொடுத்து விட்டதாகக் கூறுகிறார்கள், ஆனால் இன்னும் வரவில்லை. கடந்த 3 முதல் 4 மாதங்களாக எனக்கு மாதச் சம்பளமான ரூ.6,000 வழங்கப்படவில்லை.
கடந்த நிர்வாகத்திலாவது எல்லாம் நன்றாக இருந்தது. இந்த நிர்வாகத்தில் சரியில்லை. இதில் அரசுதான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த நிர்வாகத்தில் கோயிலில் தீபம் ஏற்றுவதற்கான எண்ணெய்யும் சரியாக கொடுத்து வந்தனர். ஆனால், இப்போது சரிவர எண்ணெய் வருவதில்லை. விளக்குகளே இல்லாமல் தான் பூஜை செய்து வருகிறோம்.
இன்றைய பூஜையில் அபிஷேகம் செய்வதற்கு சுத்தமாக தண்ணீர் கிடையாது. தண்ணீர் இல்லாமல்தான் பூஜை செய்ய வேண்டியுள்ளது. ஆகையால், அபிஷேகத்துக்கு தேவையான தண்ணீர் வசதியையும், பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதியையும் அரசு நல்ல முறையில் ஏற்படுத்தித் தர வேண்டும்." என வலியுறுத்தி உள்ளார்.
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் அபிஷேகத்திற்கே தண்ணீர் இல்லை என அர்ச்சகர் எழுப்பிய குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சிங்கமுகக் கிணற்றில் தண்ணீர் நிரப்பும் பணிகளை அதிகாரிகள் தற்போது வேகப்படுத்தி உள்ளனர்.


Click it and Unblock the Notifications
