ராமதாஸ் செங்கல் எடுத்துக் கொடுக்க.. குரு மணிமண்டப அடிக்கல் நாட்டு விழா.. குடும்பம் புறக்கணித்தது!
அரியலூர் : மறைந்த வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டி குருவின் நினைவு மணி மண்டப அடிக்கல் நாட்டு விழாவில் அவரது குடும்பத்தினர் கலந்து கொள்ளாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வன்னியர் சங்க மாநில தலைவரும் முன்னாள் எம்எல்ஏ -வுமான காடுவெட்டி குரு உடல்நிலை குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மே 25ம் தேதி மரணமடைந்தார். அதன் பின் அவரது ஊரில் உள்ள சொந்த நிலத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அப்பொழுது நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜெ. குருவுக்கு காடுவெட்டி கிராமத்தில் மணி மண்டபம் கட்டப்படும் என்று டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தனர்.

ரவி குடும்ப இடத்தில்
இந்நிலையில் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவரின் குடும்பத்தினர் ராமதாஸ் கேட்டுக்கொண்டதற்கிணங்க தங்களுடைய குடும்ப சொத்தான சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 51 சென்ட் இடத்தை தானமாக வழங்கினர்.

ராமதாஸ் - அன்புமணி
அந்த இடத்தில் நேற்று மணி மண்டபம் கட்டுவதற்காக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் ஜிகே மணி ஆகியோர் வந்தனர். நிகழ்ச்சியில் மணி மண்டபத்திற்கான முதல் செங்கல்லை ராமதாஸ் எடுத்துக்கொடுத்து துவக்கி வைத்தார்.

மனைவி மட்டுமே
அதன் பிறகு வந்த அன்புமணி ராமதாஸ், மணி மண்டபத்திற்கான கல்வெட்டினை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா மட்டுமே கலந்து கொண்டார். மற்றபடி குருவின் தாய், அவரது மகன் கனலரசன், மகள் விருத்தாம்பிகை மற்றும் குருவின் சகோதரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

வென்றவர்களுக்கு அன்புமணி வாழ்த்து
நிகழ்ச்சியின் முடிவில் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், 5 மாநில தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சிக்கும், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் மிசோரம் முதலமைச்சர் சோரம் தங்கா ஆகியோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

லட்சக்கணக்கில் இளைஞர்கள்
எதிர்வரும் தேர்தலுக்கு தயாராக இருக்கின்றோம். 9 மாதங்களாக தேர்தல் பணி செய்து வருகின்றோம் கட்சியை பலப்படுத்தி வருகின்றோம் தமிழ்நாடு முழுவதும் சென்று லட்சக்கணக்கான இளைஞர்களை கட்சியில் சேர்த்திருக்கின்றார்கள்.

யாருடனும் பேசவில்லை
நாங்கள் தயார் நிலையில் இருக்கின்றோம் . தேர்தல் கூட்டணி தொடர்பாக தேர்தல் அறிவித்த பிறகு நாங்கள் முடிவு எடுப்போம். அதற்கு முன்பு யார் எதைக் கூறினாலும் ஏற்றுக் கொள்ள வேண்டாம்.. யாருடனும் இதுவரை பேசவே இல்லை. இதற்கு மேலும் கூட்டணி பற்றிய செய்திகள் வந்தால் அது முழுமையாக தவறானதாகும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications