வாக்கிங் போனாலும் மகன் நினைப்பு.. உஷ்ணத்தால் உளறும் கட்சி..! ரெண்டு போஸ்டலயும் கோல் போடும் எடப்பாடி!
அரியலூர்: வாக்கிங் போகும்போது கூட தனது மகனின் திரைப்படம் என்ன வசூலானது என்பது குறித்துதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுவார் என திமுகவையும், வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகிவிட்டதால் சிலர் எதை எதையோ உளறிக் கொண்டிருக்கிறார்கள். பூச்சாண்டிகளுக்கெல்லாம் அதிமுக என்றைக்கும் பயப்படாது என பாஜகவையும் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
மக்களவை தேர்தல் பிரசாரம் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பல்வேறு அரசியில் கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் அரியாலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையும் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
எடப்பாடி பழனிசாமி: பிரசாரத்தில் பேசிய அவர்,” அதிமுக காணாமல் போய்விடும் என்று சிலர் சொல்கிறார்கள். யார் காணாமல் போவார்கள் என்பது ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு தெரியும். அதிமுக தெய்வ சக்தி உள்ள கட்சி. அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். அதிமுகவை சீண்டிப் பார்க்காதீர்கள். அப்படிப் பார்த்தால் என்ன ஆகும் என்பதை தொண்டர்கள் காட்டுவார்கள். இந்தியாவிலேயே அதிக தொண்டர்களை கொண்ட ஒரே கட்சி அதிமுகதான்.
உரிமைத் தொகை : வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகிவிட்டதால் சிலர் எதை எதையோ உளறிக் கொண்டிருக்கிறார்கள். பூச்சாண்டிகளுக்கெல்லாம் அதிமுக என்றைக்கும் பயப்படாது. 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த கட்சியை மிரட்டிப் பார்க்கிறார்கள். இந்த வேலையெல்லாம் இங்கே எடுபடாது. இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 கொடுத்தோம் என்கிறார் ஸ்டாலின். 27 மாதம் அதிமுக போராடியதால் தான் வேறு வழியில்லாமல் கொடுத்தார்கள். நமது சட்டமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்தார்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றச் சொல்லி அழுத்தம் கொடுத்ததால்தான் உரிமைத் தொகை கொடுத்துள்ளீர்கள். அதிமுக இல்லாவிட்டால் மக்களுக்கு உரிமைத் தொகை கிடைத்திருக்காது.
வேறொரு நிலைபாடு: ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கவர்ச்சியாக பேசும் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பின்பு தகுதியானவர்களுக்குத்தான் உரிமைத் தொகை என மாற்றிப் பேசுவார். அனைத்து நகர பேருந்துகளிலும் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என்றார் ஸ்டாலின். இப்போது பேருந்துக்கு பெயின்ட் அடித்து அந்தப் பேருந்தில் ஏறினால்தான் இலவசமாக பயணம் செய்ய முடியும். மற்ற பேருந்துகளில் கட்டணம் செலுத்த வேண்டும் என்கிறார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைபாடு, வந்த பின்பு வேறொரு நிலைபாடு.
மகனின் திரைப்படம்: எப்போது பார்த்தாலும் மக்கள் என் பக்கம் என்கிறார் ஸ்டாலின். மக்கள் உங்கள் பக்கம்தான், ஆனால், வாக்கு எங்களுக்கு தான் போடுவார்கள். மக்களை நீங்கள் எப்போது நேரடியாக சென்று பார்த்தீர்கள். இப்போதுதான் கடைக்குச் சென்று டீ குடிக்கிறார். முன்பு சைக்கிளில் செல்வார், பளு தூக்குவார், வாக்கிங் போவார். இதுதான் திமுகவின் 3 ஆண்டுகளாக சாதனை. இதைத் தவிர்த்து வேறு எதையும் செய்யவில்லை. வாக்கிங் போகும்போது கூட தனது மகனின் திரைப்படம் என்ன வசூலானது என்பது குறித்துதான் பேசுவார்.
போதைப்பொருள் : திமுக ஆட்சியில் கஞ்சா கிடைக்காத இடமே இல்லை. இன்றைக்கு தமிழகம் போதைப்பொருள் நிறைந்த இடமாக காட்சி அளிக்கிறது. அண்மையில் திமுக நிர்வாகி சிக்கினார். எதிர்கட்சி அந்தஸ்தில் இருந்தது காங்கிரஸ். ஸ்டாலின் என்றைக்கு ராகுல் காந்தியை பிரதமராக அறிவித்தாரோ அன்றைக்கே காங்கிரஸ் எதிர்கட்சி அந்தஸ்தை இழந்துவிட்டது. பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும்போது விசுவாசமாக இருந்தோம். இன்று பாஜக மக்களுக்கு எதிரான திட்டங்களை நிறைவேற்றினால் அதனை எதிர்க்கும் திராணி அதிமுகவுக்கு உள்ளது. எதிர்க்கும் நேரத்தில் எதிர்ப்போம். மக்களுக்கு நல்லது செய்தால் பாராட்டுவோம். இது அதிமுகவின் ஸ்டைல்” என்றார்.












Click it and Unblock the Notifications