ரூ12 கோடி, ஒரே எண்ணில் 3 கார்கள்.. சிக்கிமில் அமலாக்கத்துறையிடம் சிக்கிய கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ
பெங்களூர்: சட்ட விரோத பெட்டிங் மோசடி தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக அமலாக்கத்துறை பல்வேறு மாநிலங்களில் சோதனை நடைபெற்று வந்த நிலையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏவை (Congress MLA ) சிக்கிமில் வைத்து அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அப்போது ரூ.12 கோடி ரொக்க பணம், ஒரே எண் கொண்ட மூன்று கார்களையும் பறிமுதல் செய்துள்ளது.
சட்டவிரோத பெட்டிங் மோசடி தொடர்பான வழக்கில், கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கே.சி. வீரேந்திரா 'பப்பி' சிக்கிமில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்திய நிலையில் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ரூ.12 கோடி ரொக்கம் பறிமுதல்
அமலாக்கத்துறை விசாரணையில், சர்வதேச கேசினோக்கள் மற்றும் துபாயில் உள்ள சூதாட்ட நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஒரு பெரிய சட்டவிரோத பெட்டிங் நெட்வொர்க் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் சிக்கிம், கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.
சோதனையின் போது, அதிகாரிகள் ரூ.12 கோடி ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். இதில் ₹1 கோடி வெளிநாட்டு நாணயமாக இருந்தது. ₹6 கோடி மதிப்புள்ள தங்க நகைகளும், சுமார் 10 கிலோ வெள்ளி நகைகளும் மீட்கப்பட்டன. மேலும், 0003 என்ற ஒரே VIP எண்ணுடன் கூடிய மூன்று ஆடம்பர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பப்பீஸ் கேசினோ ப்ரைட்
கோவாவில் உள்ள பப்பீஸ் கேசினோ கோல்ட், ஓசன் ரிவர்ஸ் கேசினோ, பப்பீஸ் கேசினோ ப்ரைட், ஓசன் 7 கேசினோ மற்றும் பிக் டாடி கேசினோ ஆகிய ஐந்து கேசினோக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் குறிவைத்து சோதனை நடத்தினர்.
கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது தொடர்பாக அமலாக்கத்துறை கூறுகையில், "காங்கிரஸ் எம்.எல்.ஏ. 'King567' மற்றும் 'Raja567' போன்ற பல பெட்டிங் இணையதளங்களை நடத்தி வந்துள்ளார். அதே சமயம், அவரது சகோதரர் கே.சி. திப்பேசுவாமி துபாயை தளமாகக் கொண்ட கால் சென்டர் சேவைகள் மற்றும் சூதாட்ட நடவடிக்கைகளுடன் தொடர்புடைய மூன்று நிறுவனங்களை இயக்கி வந்தார்." என தெரிவித்துள்ளது.
கிரெடிட், டெபிட் கார்டுகள் மீட்பு
மேலும், 17 வங்கிக் கணக்குகள், இரண்டு லாக்கர்கள், மற்றும் வீரேந்திராவின் சகோதரர் கே.சி. நாகராஜ் மற்றும் மருமகன் பிருத்வி என். ராஜ் ஆகியோருடன் தொடர்புடைய சொத்து ஆவணங்கள் முடக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன. விசாரணையின் போது, எம்.ஜி.எம்., பெல்லாஜியோ, மெட்ரோபொலிட்டன், மரினா மற்றும் கேசினோ ஜூவல் ஆகிய கேசினோக்களின் பல சர்வதேச உறுப்பினர் அட்டைகள், தாஜ், ஹயாத் மற்றும் தி லீலா ஆகிய ஆடம்பர ஹோட்டல்களின் உறுப்பினர் அட்டைகள், மேலும் பல உயர் மதிப்பு கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மீட்கப்பட்டன.
பெங்களூர் அழைத்து வருகிறார்கள்
சிக்கிமில் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ-வை அங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை பெங்களூர் அழைத்து வர திட்டமிட்டுள்ளனர். அவரிடம் நடைபெறும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., சட்டவிரோத பெட்டிங் மோசடி தொடர்பான குற்றச்சாட்டில் கைதாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications