3 தலித் அமைச்சர்களுக்கு அனுமதியில்லை.. மைசூர் தசரா விழாவில் தடுத்து நிறுத்திய ஐபிஎஸ்.. டிகே சிவக்குமார் டென்ஷன்
பெங்களூர்: மைசூர் தசரா விழாவின்போது முதல்வர் டிகே சிவக்குமாருடன் சென்ற 3 தலித் அமைச்சர்களை ஐபிஎஸ் அதிகாரி தடுத்து நிறுத்தியது சர்ச்சையை கிளப்பிய நிலையில் அதுபற்றிய விசாரணைக்கு அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. என்ன நடந்தது? என்பது பற்றிய விவரம் வெளியாகி உள்ளது.

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா நேற்று முடிவடைந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்ப சவாரி நேற்று நடந்தது. மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையை 750 கிலோ தங்க அம்பாரியில் வைத்து பிரஷாந்தா யானை சுமந்து சென்றது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார், கேரளா முதல்வர் விடி சதீசன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்பட அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். ஜம்பு சவாரி ஊர்வலத்துடன் மைசூரு தசரா விழா முடிவுக்கு வந்தது.
முன்னதாக நேற்று மதியம் மைசூர் அரண்மனை வளாகத்தில் நந்திகொடிக்கு மகர லக்கனத்தில் முதல்வர் டிகே சிவக்குமார் சிறப்பு பூஜை செய்தார். அதுமட்டுமின்றி மாநில அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த 'நாட ஹப்பா' கொண்டாட்டங்கள் நடந்து வந்தன. இந்த கொண்டாட்டத்துக்கு நடுவே நந்திகொடி பூஜை உள்பட சில பாரம்பரிய சடங்குகள் மேற்கொள்ள டிகே சிவக்குமார் சென்றார்.
டிகே சிவக்குமார் உடன் கன்னட மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி சென்றார். அவருக்கு பின்னால் தலித் சமுதாயத்தை சேர்ந்த நகர நிர்வாக துறை அமைச்சர் எச்சி பாலகிருஷ்ணா, விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சாமி அறநிலையத்துறை அமைச்சர் பசவந்தப்பா ஆகியோர் சென்றனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த மைசூரு எஸ்பி ரிஷ்யாந்த் டிகே சிவக்குமாரை அனுமதித்தார். அவருடன் வந்த அமைச்சர் சிவராஜ் தங்கடகியை நிறுத்தினார். ஆனால் அவர் உதறிவிட்டு சென்றார். அதேவேளையில் பின்னால் வந்த அமைச்சர்கள் எச்சி பாலகிருஷ்ணா, நரேந்திர சாமி, பசவந்தப்பா ஆகியோர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதனை கவனித்த டிகே சிவக்குமார் தலையீடு செய்து 3 பேரையும் விடுவிக்க செய்தார். அதன்பிறகு டிகே சிவக்குமார் உடன் அனைத்து அமைச்சர்களும் சென்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகின. தடுத்து நிறுத்தப்பட்ட அமைச்சர்கள் எச்சி பாலகிருஷ்ணா, நரேந்திர சாமி மற்றும் பசவந்தப்பா ஆகியோர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சர்ச்சை வெடித்தது.
இந்நிலையில் தான் சம்பவம் பற்றி விசாரணை நடத்த முதல்வர் டிகே சிவக்குமார் தலைமை செயலாளர் ஷாலினி ரஜ்னேஷ்க்கு உத்தரவிட்டுள்ளார். என்ன நடந்தது? எதற்காக ஐபிஎஸ் அதிகாரி ரிஷ்யாந்த் அமைச்சர்களை தடுத்து நிறுத்தினார்? என்பது தொடர்பாக அனைத்து விவரங்களையும் விசாரித்து அறிக்கை அளிக்க உத்தவிடப்பட்டுள்ளார்.
இதுபற்றி டிகே சிவக்குமார் கூறுகையில், ''மைசூரில் அமைச்சர்கள் தடுத்து நிறுத்தப்பட்டது பற்றி அறிந்ததும் நானே தலையிட்டு நிலைமையை சரிசெய்தேனர். இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
ஏனென்றால் அமைச்சர்களை தடுத்து நிறுத்தும் அளவுக்கு அதிகாரிகள் தன்னிச்சையாகவும், அதிகார தோணையுடனும் செயல்பட்டு இருப்பதாக தெரிகிறது. அதிகாரிகளின் இத்தகயை பொறுப்பற்ற செயலை ஒருபோதும் ஏற்க முடியாது. விசாரணை அறிக்கை வந்த பிறகு அதிகாரி தவறு செய்திருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
