4% கமிஷன்- ஒரு முறை கடத்தினால் ரூ.50 லட்சம்- நடிகையால் சிக்கப் போகும் கர்நாடகா அரசியல் வாரிசுகள்?
பெங்களூர்: கர்நாடகாவை அதிரவைத்திருக்கும் தங்க கடத்தலில் சிக்கிய ரன்யா ராவ் குறித்து அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. கர்நாடகா தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளுக்காக 4% கமிஷனுக்கும் ரூ.50 லட்சத்துக்கும் ஆசைப்பட்டு 'கடத்தல் குருவி'யாக நடிகை ரன்யா ராவ் மாறியதாகவும் கூறப்படுகிறது.
கர்நாடகா மாநிலம் சிக்மகளூரைச் சேர்ந்த நடிகை ரன்யா ராவ், தமிழில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து வாகா திரைப்படத்தில் நடித்திருந்தார். துபாயில் இருந்து 12 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததாக கடந்த 3-ந் தேதி பெங்களூர் கெம்பே கவுடா விமான நிலையத்தில் ரன்யா ராவ் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

நடிகை ரன்யா ராவ் குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி உள்ளன.
- கர்நாடகாவின் அரசியல் பிரமுகர்களின் வாரிசுகள், தொழிலதிபர்கள், உயர் அதிகாரிகள் என பலரும் தங்க கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனராம்; இவர்களுக்காகவே தங்க கடத்தலில் ஈடுபட்டவர்தானாம் ரன்யா ராவ்.
- துபாயில் இருந்து கடத்தி வரப்படும் தங்கத்தின் மொத்த மதிப்பில் 4% ரன்யா ராவ்-க்கு கமிஷனாக கிடைத்துள்ளது. மேலும் ஒவ்வொரு முறையும் ரூ.50 லட்சம் ரொக்கமாகவும் 'ஊதியம்' கொடுத்துள்ளனர் பிரபலங்கள்.
- கர்நாடகா மூத்த ஐபிஎஸ் அதிகாரியான அம்மாநில போலீஸ் வீட்டுவசதித் துறை டிஜிபி ராமச்சந்திர ராவ்தான், ரன்யா ராவின் வளர்ப்புத் தந்தை. அதாவது டிஜிபி ராமச்சந்திர ராவின் 2-வது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்தவர் ரன்யா ராவ்.
- தங்க கடத்தல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ரன்யா ராவ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 2 கிலோ தங்க நகைகள், ரூ.2.67 கோடி ரொக்கம் சிக்கியது.
- துபாயில் இருந்து ரன்யா ராவ் கடத்தி வந்த தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.12.56 கோடி; வீட்டில் சிக்கிய நகைகள், பணத்தின் மதிப்பு ரூ.4.73 கோடி; ரன்யா ராவிடம் இருந்து ரூ17.29 கோடி நகைகள், பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
- கர்நாடக மாநிலம் பெங்களூர் கெம்பே கவுடா விமானநிலையத்தில் பிடிபட்ட தங்க கடத்தலில்தான் இதுதான் மிக அதிகமானதாகும்.
- கடந்த 15 மாதங்களில் 48 முறை துபாய் பயணம் மேற்கொண்டவர் ரன்யா ராவ்.
- தங்க கடத்தலுக்காகவே தயாரிக்கப்பட்ட பிரத்யேக உடையை மட்டுமே துபாய் செல்லும் ஒவ்வொரு முறையும் ரன்யா ராவ் அணிந்திருந்ததும் உறுதி செய்யப்பட்டது.
- ரன்யா ராவின் தங்க கடத்தலுக்கு பெங்களூர் கெம்பே கவுடா விமான நிலைய போலீசார் உடந்தையாக இருந்துள்ளனர்; ஒவ்வொரு முறையும் ரன்யா ராவை விமான நிலையத்தில் இருந்து விமான நிலைய போலீசாரே பாதுகாப்பு அளித்து சோதனையில்லாமல் வெளியே அழைத்துச் சென்றுள்ளனர்.
- ரன்யா ராவின் கடத்தல் தொழிலின் பின்னணியில் அரசியல்வாதிகளின் வாரிசுகள் பலரும் இருக்கின்றனர்; அவர்களது பெயரையும் பெறுவதற்கான நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- ரன்யா ராவின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்லது; அப்போது ரன்யா ராவை வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் தங்களது கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கோர இருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications