ஷாக்! பெற்றோரே உஷார்! 8 மாத குழந்தையின் உயிரை பறித்த செல்போன் சார்ஜர்! பின்னணியில் பெரும் துயரம்
பெங்களூர்: பெற்றோரின் கவனக்குறைவு காரணமாக கர்நாடகாவில் செல்போன் சார்ஜர் பிறந்து 8 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தையின் உயிரை பறித்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய சூழலில் செல்போன் இல்லாத வீடுகளே இல்லாத நிலையே உள்ளது. ஏறக்குறைய வீட்டில் பள்ளி செல்லும் குழந்தைகள் தவிர மீதமுள்ள அனைவரும் தனித்தனியே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். சில வீடுகளில் பள்ளி மாணவர்களுக்கும் தனியே செல்போன் உள்ளது.

இதனால் வீடுகளில் பிளக் பாயிண்டுகளில் எப்போதும் செல்போன் சார்ஜர் அப்படியே இருக்கிறது. இத்தகைய சார்ஜரை நாம் சரியாக கையாள்கிறோமா? என்றால் அது கேள்விக்குறி தான். ஏனெ்னறால் பலரும் செல்போனை சார்ஜ் செய்துவிட்டு அப்படியே சென்று விடுகிறோம்.
பல சந்தர்ப்பங்களில் செல்போன் சார்ஜருக்கான ஸ்வீட்சை கூட ஆப் செய்யாமல் அவசரமாக அல்லது அலட்சியாக இருந்து விடுகிறோம். இத்தகைய அலட்சியப்போக்கு கூடவே கூடாது. ஏனென்றால் சிறு அலட்சியம் கூட நம் வீட்டில் உள்ளவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இன்னும் விளக்கமாக கூற வேண்டும் என்றால் கர்நாடகாவில் பெற்றோர்களின் அலட்சியத்தால் 8 மாத பச்சிளம் குழந்தையின் உயிரை செல்போன் சார்ஜர் பறித்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம் இது உண்மை தான். கர்நாடகாவில் இந்த சோக சம்பவம் நம் அனைவரின் அலட்சியத்துக்கும் எச்சரிக்கை மணியடிக்கும் வகையில் உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:
கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் கார்வார் அருகே உள்ள சித்தாரா கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் கல்லுட்கர்.
இவர் ஹெஸ்காம் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சஞ்சனா. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சஞ்சனா கர்ப்பமாக இருந்தார்.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவருக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சானித்யா என்ற பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில் குழந்தை வீட்டில் படுத்து கிடந்தது. அப்போது குழந்தையின் அருகே செல்போன் சார்ஜர் தொங்கியது.
அந்த செல்போன் சார்ஜரின் ஒரு முனை பிளக்பாயிண்டில் சொருகி இருந்தது. மேலும் பிளக் பாயிண்டுக்கான ஸ்வீட்சும் ஆப் செய்யப்படாமல் இருந்தது. இதனால் சார்ஜரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இந்த வேளையில் எதிர்பாராத விதமாக அந்த குழந்தை செல்போன் சார்ஜரை தனது வாயில் வைத்தது.
இதனால் செல்போன் சார்ஜர் வழியாக குழந்தையின் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதை பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதபடி குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். குழந்தையின் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இன்றைய தினம் சந்தோஷ்-சஞ்சனாவின் ஒரு பெண் குழந்தைக்கு பிறந்தநாளாகும். இதனால் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்தனர். இத்தகைய சூழலில் தான் வீட்டில் இருந்த சார்ஜரை எடுத்து 8 மாத குழந்தை வாயில் வைத்து மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளது.
முன்னதாக சந்தோஷ் இன்று வழக்கம்போல் வேலைக்கு சென்றிருந்தார். குழந்தை இறந்தது பற்றி அவருக்கு செல்போனில் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் பதறியடித்து மருத்துவமனைக்கு வந்தார். அப்போது குழந்தையின் உடலை பார்த்த அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து சந்தோசும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தால் இன்று பிறந்தநாள் கொண்டாடி மகிழ வேண்டிய குடும்பம் கடும் துயரத்தை சந்தித்துள்ளது. இதுகுறித்து கார்வார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications