அடேங்கப்பா.. மீம்ஸ் கிரியேஷனில் 'கிரேட் கிரிகாலனா' நீங்க? பெங்களுர் நிறுவனம் தரும் சம்பளம் தெரியுமா?
பங்கு சந்தை விவரங்கள் குறித்து நன்கு அறிந்த மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பெங்களூரு நிறுவனம் அதிரடி ஆஃபரை அறிவித்திருக்கிறது
பெங்களூரு: மீம்ஸ்களை உருவாக்குவதில் நீங்கள் கில்லாடிகளா? அப்படியெனில் உங்களுக்கு அற்புதமான ஒரு வேலையை பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு தற்போது சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகி வருகிறது.
மீம்ஸ் கிரியேட்டர்கள் இறை தூதர்கள் என்றே சொல்லலாம். இவர்கள் கை வைத்த எந்த போட்டாவாக இருந்தாலும், அது மக்களை துன்பத்திலிருந்து நொடிப்பொழுதில் மீட்டு கொண்டு வந்துவிடும். அன்றாட நெருக்கடிகளில் சிக்கி ஏதோ ஒரு தேவைக்காக பல்லை கடித்துக்கொண்டு வேறு வழியின்றி வேலை செய்துகொண்டிருக்கும் பாவப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையில் 8வது அதிசயமாக வந்தவர்கள்தான் இந்த மீம் கிரியேட்டர்கள். இவர்கள் கை வைக்காத இடமே கிடையாது என்று சொன்னால் அது மிகையாகாது.
அந்த அளவுக்கு விஷயங்களை அறிந்தவர்களாக இருப்பார்கள். அரசு அதிகாரிகளோ, அரசியல் தலைவர்களோ அவர்களுக்கு எவ்வித பாகுபாடும் கிடையாது. அவர்களின் அனைத்து விஷயங்களையும் இந்த தூதுவர்கள் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவார்கள். அப்படியொரு திறமையான தூதுவரைதான் பெங்களூரை சேர்ந்த StockGro தேடிக்கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் பங்கு சந்தையில் முதலீடு செய்வது தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் நிறுவனமாகும்.

தேவ தூதுவர்கள் எனும் மீம்ஸ் கிரியேட்டர்கள்
தற்போது இந்த நிறுவனத்திற்குதான் ஒரு திறமையான மீம் கிரியேட்டர் தேவைப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவ்வாறு வேலைக்கு சேரும் நபர் பொருளாதாரம் குறித்து தெளிவாக அறிந்திருக்க வேண்டும். அதைவிட முக்கியம், பங்கு சந்தைகள் குறித்து தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோல பங்கு சந்தைகள் குறித்த விவரங்களை வாடிக்கையாளர்களுக்கு புரியும் வகையில் விளக்கி சொல்லும் திறன் கொண்டிருக்க வேண்டும்.

மக்கள் மொழி
மக்கள் மொழியை அறிந்திருக்க வேண்டும். இதுதான் பிரதானமான தேவையாகும். இத்துடன் இவர் உருவாக்கும் மீம்கள் நகைச்சுவை உணர்வுடன் இருத்தல் அவசியம். பங்கு சந்தையில் ஏற்படும் மாற்றங்களை வாடிக்கையாளர்களுக்கும், வாடிக்கையாளர்களின் தேவையை பங்கு சந்தையில் பிரதிபலிக்கும் இணைப்பு பாலமாக இந்த மீம் கிரியேட்டர் இருக்க வேண்டும். அத்துடன் சிறந்த தகவல் தொடர்பு திறன் மற்றும் குழுவுடன் இணைந்து பணியாற்றும் திறனையும் பெற்றிருக்க வேண்டும் என நிறுவனம் தங்களது எதிர்பார்ப்புகளை பட்டியலிட்டுள்ளது.

சம்பளம்
அதேபோல சம்பளம் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கூறியுள்ள நிறுவனம் இந்த வேலைக்காக ரூ.1 லட்சத்தை மாத சம்பளமாக நிர்ணயித்துள்ளது. மேலும், லிங்க்ட் இன் தளத்தில் உள்ளவர்கள் இதுபோன்ற நபரை எங்காவது பார்த்திருந்தால் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று நிறுவனம் கேட்டுக்கொண்டிருக்கிறது. இவ்வாறு பரிந்துரைக்கும் நபர் வாய்ப்பிருப்பின் ஐ பேட் வெல்லலாம். பலரும் மீம் கிரியேட்டர் என்றால் நகைச்சுவை உணர்வு மட்டும்தான் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அப்ளை பண்ணலாம்
ஆனால், இந்த துறையில் உள்ள சாதக பாதகங்களை நகைச்சுவை உணர்வுடன், பொறுப்புணர்வோடு வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தவே இந்த வேலை என நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது. அவ்வளவுதாங்க விஷயம். இனி 'நான் அடித்த மணி கடவுளுக்கு கேட்டுச்சோ இல்லையோ StockGro கம்பெனிக்கு கேட்டுடுச்சு' என நினைக்கும் மீம் கிரியேட்டர் எனும் தூதுவர்கள் இந்த வேலைக்கு தாராளமாக அப்ளை செய்யலாம்.












Click it and Unblock the Notifications