தனியார் வங்கி கிரெடிட் கார்டு.. வாங்காமலேயே 14 லட்சம் பில்.. விசாரித்த கோர்டுக்கே பெரிய ட்விஸ்ட்
பெங்களூர்: பெங்களூரு நாயண்டஹள்ளி பகுதியில் வசித்து வரும் அவினாஷ் என்ற இளைஞர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கிரெடிட் கார்டு வழங்கப்படாத நிலையில் அவரிடம் ரூ.14 லட்சத்தை செலுத்தக்கூறி வங்கி பிரதிநிதிகள் நெருக்கடி கொடுத்து வந்தார்களாம். இதனால் அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நுகர்வோர் நீதிமன்றம் தனியார் வங்கியின் செயல்பாட்டை கண்டித்ததுடன், ரூ.2 ஆயிரம் அபராதமாக விதித்தது.
பெங்களூரு நாயண்டஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் அவினாஷ் என்பவர் தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரை கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ந் தேதி ஆக்சிஸ் வங்கியின் பிரதிநிதி எனக்கூறி ரிஸ்வான் என்பவர், தொடர்பு கொண்டு பேசினாராம்.

அப்போது ஆக்சிஸ் வங்கி சார்பில் சிறப்பு சலுகைகளுடன் கிரெடிட் கார்டு (கடன் அட்டை) வழங்கப்படுவதாக கூறினாராம். இதனால் அவினாஷ் பல்வேறு ஆவணங்களை கொடுத்தார். சில நாட்கள் கழித்து அவினாசின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டதாம். மேலும் அவருக்கு எந்தவித கிரெடிட் கார்டும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் 2023-ம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டு நிலுவை தொகை வசூலிப்பு பிரிவு பிரதிநிதிகள் என்று கூறி அவினாசிடம் சிலர் பேசினார்களாம். அப்போது அவர்கள் நீங்கள் ரூ.14 லட்சத்து 2 ஆயிரத்தை கிரெடிட் கார்டு மூலம் செலவழித்து உள்ளீர்கள்.. எனவே அதை உடனே செலுத்துங்கள் என்று கூறினாராம். இதனால் பயந்துபோன அவினாஷ், தனக்கு எந்த கிரெடிட் கார்டும் வரவில்லை என்றும், தான் அவ்வளவு தொகை செலவு செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஆனால் அதை ஏற்காத ஆக்ஸிஸ் வங்கி பிரதிநிதிகள் அவினாசை தொடர்ந்து மிரட்டி பணத்தை உடனே செலுத்துமாறு வற்புறுத்தி வந்தார்களாம். இதையடுத்து அவினாஷ், பெங்களூரு கிழக்கு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதுமட்டுமின்றி பெங்களூரு நுகர்வோர் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளார், வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவினாசுக்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்ட கிரெடிட் கார்டு செயல்பாட்டில் இருந்ததை கண்டறிந்தது.
ஆனால் அந்த கிரெடிட் கார்டு அவினாசுக்கு வழங்கப்படாமல், வேறொருவருக்கு வழங்கப்பட்டு இருப்பதும், இதில் வங்கியின் செயல்பாடுகள் முறைகேடாக இருந்ததையும் நீதிமன்றம் கண்டுபிடித்தது. அதையடுத்து இந்த வழக்கை அவினாசுக்கு சாதகமாக முடித்து வைத்த கோர்ட்டு, வங்கியின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி கடுமையாக கண்டித்தது. மேலும் அவருக்கான வழக்குச்செலவு ரூ.2 ஆயிரத்தை வங்கி உடனே செலுத்தக்கூறி அந்த தொகையை அபராதமாக விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் இதுபோல் நீதிமன்றத்தை நாடி எத்தனை பேரால் தீர்வு பெற முடியும்..சாமானிய மக்கள் நீதிமன்றத்திற்கும், போலீஸ் ஸ்டேசனுக்கும் செய்யாத தவறுக்கும், வாங்காத கடனுக்கும் அலைய வேண்டும் என்பதே பெரிய தவறு ஆகும். இதுபோன்ற சூழலின் போது வங்கிகள் மீது ரிசர்வ்வங்கி கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications