மொத்தம் 270 முறை.. ரூ.1.36 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட பெங்களூர் பெண்ணுக்கு மறக்க முடியாத தண்டனை
பெங்களூர்: பெங்களூர் பானஸ்வாடியை சேர்ந்த இளம் பெண் ஒருவர், ஸ்கூட்டர் மூலமாக 270 முறை சாலை விதிகளை மீறி இருக்கிறார்.. இதற்காக அந்த பெண்ணுக்கு ரூ.1.36 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் போக்குவரத்து விதிமீறல்கள் சர்வ சாதாரணமாக தினசரி நடந்து வந்தது. இதனால் மத்திய அரசு 2019ம் ஆண்டு சின்ன சின்ன தவறுகளுக்கு கூட அபராதங்களை கடுமையாக்கியது. புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி 46 வகையான போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட உயிர்காக்கும் வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்லுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், பைக் ரேஸில் ஈடுபடுதல் உள்ளிட்டவற்றுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. தலைகவசம் அணியாவிட்டால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ. 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். இந்த விதி கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு மட்டும் இன்றி பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ரூ. 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.1,000, இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தால் ரூ.1000, கார்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பவர்களுக்கு ரூ.1000 என அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோல் அதிக எடையை ஏற்றுவது, சிக்னல்களில் சிவப்பு விளக்கு ஒளிரும் போது நிற்காமல் செல்வது உள்ளிட்ட பல்வேறு வகையிலான விதிமீறல்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் 500 ரூபாய் அபராதம் விதிக்கிறார்கள். சிறுவர்கள் வாகனம் ஓட்டினால், பாதுகாவலர் அல்லது பெற்றோருக்கு 25000 அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. போக்குவரத்து விதிமீறல்கள் கடுமையாக அமல்படுத்தப்பட்ட போதிலும் அபராதத்தை பற்றி கவலைப்படாமல் விதிமீறலில் ஈடுபடுகிறார்கள்.. அப்படி அபராதம் விதித்தாலும் விதிமீறல்களை தொடர்கிறார்கள்.
பெங்களூரு பானஸ்வாடியை சேர்ந்த பெண் ஒருவர் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் வைத்துள்ளார். இவர் தான் வசிக்கும் பகுதியில் போக்குவரத்து விதிகளை துளியும் மதிப்பது இல்லை.. அடிக்கடி ஹெல்மெட் அணியாமல் சென்று வந்துள்ளார். சிக்னல்களையும் மதிப்பது இல்லை.. பெங்களூர் நகரை பொறுத்தவரை விதிகளை மீறினால் ஆன்லைன் முறையிலேயே அபராதம் விதிக்கப்படுகிறது.
அந்த பெண் விதிகளை மீறி 3 பேர் வரை அடிக்கடி ஆட்களை ஸ்கூட்டரில் ஏற்றிச் செல்வது, மொபைல் போனில் பேசிக்கொண்டே சிக்னலை மதிக்காமல் செல்வது, தவறான ரூட்டில் செல்வது என கிட்டத்தட்ட 270 முறை போக்குவரத்து விதிகளை மீறியிருக்கிறார்.
இது அங்கிருந்த கேமராக்களில் பதிவாகியுள்ளது. சமீபத்தில் கேமராக்களை பரிசோதித்த போலீஸார், அந்தப் பெண்ணின் நடவடிக்கைகளுக்காக 1.36 லட்சம் ரூபாய் அபராதம் வரை விதிக்கப்பட்டதை கண்டறிந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்தப் பெண்ணின் ஸ்கூட்டரை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அவரை கடுமையாக எச்சரித்தனர். போலீஸார் விதித்துள்ள அபராதம் அந்த பெண்ணின் பழைய ஸ்கூட்டர் விலையை விட அதிகம் என்பதால் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications