நடிகர் பிரகாஷ் ராஜ் வாக்குரிமை பறிப்பு.. SIR நடவடிக்கையால் பெங்களூர் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்
பெங்களூர்: ''பெங்களூரில் பிறந்து வளர்ந்து, பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தவன் நான். பெங்களூர் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டுள்ளேன். ஆனால் என்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி காமெடி செய்துள்ளனர்'' என்று நடிகர் பிரகாஷ் ராஜ் 'செல்பி' வீடியோ வெளியிட்டுள்ளார்.

அண்டை மாநிலமான கர்நாடகாவில் SIR எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை ஆகஸ்ட் 17 ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது.
அதன்படி வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 24ம் தேதி வெளியாக உள்ளது. அதன்பிறகு பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 23ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். அதன்மீதான நடவடிக்கை ஆகஸ்ட் 24 முதல் அக்டோபர் 22 வரை நடைபெறும். பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27ம் தேதி வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே தான் பெங்களூரில் பிறந்து வளர்ந்ததோடு, 2019 நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டும் கூட தனது பெயர் நீக்கப்பட்டுள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் 'செல்பி' வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது:
'' அன்பான நண்பர்களே.. நான் உங்களுடன் ஒரு ஜோக்கை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். SIR நடவடிக்கைக்கு பிறகு பெங்களூர் தொகுதிகளில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களில் நானும் ஒருவன். இது நல்ல காமெடியாக இருக்கிறது. நான் பெங்களூரில் தான் பிறந்தேன். பெங்களூரில் தான் வளர்ந்தேன். இங்கு தான் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தேன். நடிப்பை இங்கிருந்து தான் தொடங்கினேன்.
இது எல்லாவற்றுக்கும் மேலாாக பணிவாக கூறி கொள்வது என்னவென்றால் நான் பெங்களூர் மத்திய தொகுதியில் எம்பி வேட்பாளராக போட்டியிட்டேன். நல்லா இருக்கு.. இந்த காமெடி நன்றாக இருக்கு.. விளையாட்டு தொடங்குகிறது. எனது வாக்காளர் அடையாள அட்டையைத் திரும்பப் பெறுவதற்கு நான் என்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும், என்னென்ன ஆவணங்களைக் காட்ட வேண்டும் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்'' என கூறியுள்ளார்.
மேலும் இந்த பதிவில் பிரகாஷ் ராஜ், ''உங்களை மீண்டும் அரியணை ஏற விரும்பாத குடிமக்களின் வாக்குரிமையை நீங்கள் விரும்பிபடி தடுக்கலாம்.ஆனால் இறுதியில் உங்களை அரியணையில் இருந்து வீழ்த்து கீழே இறங்க வைப்பதை தடுக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். அதாவது SIR நடவடிக்கையின்போது பாஜகவினருக்கு வாக்களிக்காத மக்களின் வாக்குரிமைகள் பறிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில் பிரகாஷ் ராஜ்ஜூம் அதனை முன்வைத்துள்ளார்'' என்று கூறியுள்ளார்.
முன்னதாக பிரகாஷ் ராஜ் கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் ஓட்டுரிமை வைத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வழக்கறிஞர் திலீப் குமார் சார்பில் பெங்களூர் 48 வது கூடுதல் முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் பிரகாஷ் ராஜ்க்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அவர் நேரில் ஆஜரானதால் ஜாமீன் வழங்கப்பட்டது. தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தான் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது பெங்களூரில் தனது வாக்குரிமை பறிக்கப்பட்டதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
மேலும் தற்போது வரை கர்நாடகாவில் மொத்தம் உள்ள 5 கோடியே 54 லட்சத்து 32 ஆயிரத்து 314 வாக்காளர்கள் உள்ளனர். தற்போதைய SIR நடவடிக்கையில் 1 கோடியே 9 லட்சத்து 83 ஆயிரத்து 901 வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இறந்தவர்கள், வேறு இடத்துக்கு இடம்பெயர்ந்தவர்கள், விண்ணப்பங்கள் கொண்டு செல்லும்போது வீட்டில் இல்லாதவர்கள் என்ற வகையில் 1 கோடியே 9 லட்சத்து 83 ஆயிரத்து 901 வாக்காளர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதில் அதிகபட்சமாக பெங்களூர் நகரில் மொத்தமுள்ள 40 லட்சத்து 21 ஆயிரத்து 039 வாக்காளர்களில் 17 லட்சத்து 74 ஆயிரத்து 626 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. பெங்களூர் மாநகராட்சி தெற்கு பகுதியில் மொத்தமுள்ள 21 லட்சத்து 44 ஆயிரத்து 784 வாக்காளர்களில் 10 லட்சத்து 87 ஆயிரத்து 829 பேரை SIR ஊழியர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
