கன்னடம் கற்றுக்கொள்ளாத தமிழ் நண்பர் பிரண்ட்ஷிப்பையே கட் செய்துவிட்டேன்.. கன்னடர் போட்ட பதிவு வைரல்
பெங்களூர்: பெங்களூர் எஸ்பிஐ வங்கி மேலாளர் கன்னடத்தில் பேச மாட்டேன் என்று கூறியதால் மொழி குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் 18 ஆண்டுகளாக ‛‛பெங்களூரில் வசித்து வரும் தோழிக்கு சொல்லிக்கொடுத்தும் கூட கன்னடம் கற்கவில்லை'' என்று பிரஜ்வல் பட் என்பவர் கவலை தெரிவித்த நிலையில் இன்னொருவரோ, ‛‛தமிழகத்தை சேர்ந்த என் நண்பர் 15 ஆண்டுகளாகியும் கன்னடம் கற்கவில்லை. இதனால் அவரது தொடர்பை துண்டித்துவிட்டேன்'' என்று கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் இப்போது இதுதான் ட்ரெண்ட்.
பெங்களூர் தொழில் துறையில் முன்னணி நகரமாக இருந்து வருகிறது. பல்வேறு முக்கிய ஐடி நிறுவனங்கள் பெங்களூரில் உள்ளன. இதனால் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் பெங்களூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் கன்னட மொழியை கற்றுக்கொள்கின்றனர்.

ஆனால் இன்னொரு தரப்பினரோ கன்னட மொழியை கற்றுக்கொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அவர்கள் தங்களின் தாய்மொழி அல்லது ஆங்கிலத்தில் தான் தொடர்ந்து பேசுவதோடு, கன்னட மொழியை புறக்கணிப்பதாக நீண்டகாலமாக புகார்கள் உள்ளன. சில வேளைகளில் கன்னட மொழி பேசாதவர்களுடன் உள்ளூரை சேர்ந்தவர்கள் வாக்குவாதம் செய்த சம்பவங்களும் நடந்துள்ளன.
சில நாட்களுக்கு முன்பு கூட, பெங்களூர் புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா சூர்யா நகரில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளையின் மேலாளர் ஒருவர் வாடிக்கையாளருடன் ஏற்பட்ட மோதலின்போது ‛‛கன்னட மொழி பேசமாட்டேன். இது இந்தியா. இந்தியில் தான் பேசுவேன்'' என்று கூறிய வீடியோ சர்ச்சையானது. தற்போது அந்த மேலாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மொழி விவகாரம் தொடர்பான விவாதம் சமூக வலைதளங்களில் தொடங்கி உள்ளது.
இந்நிலையில் பெங்களூரில் தற்போது மொழி பிரச்சனை என்பது விவாதமாகி வருகிறது. கர்நாடகாவை சேர்ந்த பலரும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் கர்நாடகாவில் வசிக்கும்போது கன்னட மொழிக்கு மரியாதை கொடுத்து அதனை கற்க வேண்டும். உள்ளூர் மக்களுடன் கன்னட மொழியில் பேச வேண்டும் என்று கூறி வருகின்றனர். அதேவேளையில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் கன்னட மொழியில் தான் பேச வேண்டும் என்று கர்நாடகா மக்கள் தங்களை வலியுறுத்த கூடாது என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தான் கர்நாடகாவை சேர்ந்தவரும், பெங்களூரில் வசித்து வருபவருமான பிரஜ்வல் பட் என்பவர் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அந்த பதிவில், தனது நண்பர் எப்படி கன்னட மொழியை கற்க மறுப்பு தெரிவித்து வருகிறார் என்பது பற்றிய கவலையை பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக பிரஜ்வல் பட் தனது பதிவில் கூறியுள்ளாதாவது:
"பெங்களூரில் 18 வருடங்கள் இருந்தும் கூட என் தோழி கன்னடத்துக்கு ஆதரவாக இல்லை. கன்னடத்தை கற்றுக்கொள்ளவில்லை. அவருக்கு கன்னடத்தில் உரையாட தேவையான வார்த்தைகளை நான் கற்றுக்கொடுக்க கற்றுக்கொடுக்க நான் எடுத்த தொடக்க முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. சமீபத்தில், கன்னடர்கள் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறார்கள் என்று அவள் சொன்னாள். சொல்லப்போனால், இப்போது எங்கள் இருவருக்குமான தொடர்புகள் குறைவாகவே உள்ளன'' என்று கூறியுள்ளார்.
பிரஜ்வல் பட்டின் இந்த பதிவு உடனடியாக வைரலானது. பலரும் பிரஜ்வல் பட்டின் தோழியை விமர்சிக்க தொடங்கினர். ஒருவர், ‛‛இது ரொம்ப மோசமானது. ஒரு இடத்தில் 18 ஆண்டுகள் வசித்த பிறகும் உள்ளூர் மொழியை கற்றுக்கொள்ளாதாதது மோசமான ஒன்றாகும்'' என்று கூறியுள்ளார். அதேபோல் இன்னொருவர் ‛‛அவளுக்கு மொழியை கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கும் முழு சுதந்திரம் என்பது உள்ளது. இருப்பினும் உள்ளூர் மொழியை கற்றுக்கொண்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்'' என்று கருத்து தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் இன்னொரு தரப்பினர், ‛‛டெல்லி, மும்பை, பெங்களூர், கொல்கத்தா ஆகியவை காஸ்மோபொலிட்டர் நகரங்களாக உள்ளன. இந்த நகரங்களை மொழி பிரச்சனையை எழுப்பி சிறிய கிராமங்கள், சிறிய நகரங்களாக மாற்ற வேண்டாம்'' என்று பிரஜ்வல் பட்டின் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இன்னொருவரோ, ‛‛நானும் இதேபோன்ற சூழலை எதிர்கொண்டேன். என் நண்பர் தமிழகத்தை சேர்ந்தவர். அவர் பெங்களூரில் 15 ஆண்டுகளாக இருக்கிறார். ஆனாலும் கன்னடத்தில் ஒரு வார்த்தை கூட கற்கவில்லை. இதுபற்றி கேட்டால் கன்னடம் படிக்க என்ன தேவை இருக்கிறது? என்று கேள்வி எழுப்புகிறார். அதோடு உள்ளூர் மொழியை கற்காமலேயே என்னால் பெங்களூரில் வசிக்க முடியும் என்கிறார். அதேபோல் காவிரி பிரச்சனை வரும்போது தமிழ்நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். இதனை எவ்வளவு காலம் தான் என்னால் பொறுத்து கொள்ள முடியும். இப்போது சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ளார். நான் அவருடனான தொடர்பை துண்டித்து விட்டேன்'' என்று கூறியுள்ளார்.
இதனை பார்த்த பலரும் பிரஜ்வல் பட்டிடம், நீங்களும் கன்னடம் கற்க விரும்பாத தோழியின் தொடர்பை துண்டித்து விடுங்கள் என்று கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications