கர்நாடகாவில் 1994 ஆண்டுக்கு பிறகு 3 முறை பெரும்பான்மை பெற்ற ஒரே கட்சி காங்கிரஸ்.. இத்தனை சாதனைகளா?
பெங்களூர்: கர்நாடகாவில் 1994 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு கட்சி தனிபெரும்பான்மை பெற்றுள்ளது என்றால் அது காங்கிரஸ் கட்சிதான். அதுவும் 3 முறை அருதி பெரும்பான்மை பெற்றுள்ளது.
கர்நாடகா சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 25 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும் சரி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் சரி கர்நாடகாவில் தொங்கு சட்டசபை நடக்கும் என கணித்தன.

இந்த நிலையில் இந்த கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வென்று கர்நாடகாவில் ஆட்சியை பெற்றுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியை பாஜக ஆளாத மாநில அரசுகள் பாராட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் 1985 ஆம் ஆண்டு முதல் கர்நாடகாவில் ஒரே கட்சி இதுவரை ஆட்சியை தக்க வைத்துக் கொண்டதில்லை. இதே நிலையே தற்போது வரை அதாவது 39 ஆண்டுகளாக தொடர்கிறது. இந்த நிலையை உடைக்கத்தான் பாஜக எப்படியோ போராடியது. ஆனாலும் அக்கட்சி பெரும்பான்மையை பெறவில்லை. பிரதமர் நரேந்திர மோடி 7 நாட்கள், 19 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தும் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை.
இந்த நிலையில் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசனை செய்ய பெங்களூரில் இன்று காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நன்றி தெரிவித்துள்ளார். 1994 ஆம் ஆண்டுக்கு பிறகு கர்நாடகாவில் எந்த ஒரு கட்சியும் அருதி பெரும்பான்மை பெற்றதில்லை. ஆனால் காங்கிரஸ் மட்டும் விதிவிலக்கு.
இதுவரை தொங்கு சட்டசபை ஏற்படும். யாருக்கும் பெரும்பான்மை நிலை கிடைக்காத போது கூட்டணி ஆட்சி அமையும். இதற்காக குதிரை பேரங்கள் களைகட்டும். ஆனால் 1994 ஆம் ஆண்டுக்கு பிறகு 3 முறை மட்டுமே ஒரு கட்சி பெரும்பான்மை பலத்தை நிரூபித்துள்ளது என்றால் அது காங்கிரஸ் கட்சிதான்.
1994 ஆம் ஆண்டு கர்நாடகா சட்டசபை தேர்தலில் மஜத கட்சி அருதி பெரும்பான்மை பலத்தை பெற்றது. 115 இடங்களில் தேவகவுடாவின் மஜத வென்றது. அதன்பிறகு 1999 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 132 இடங்களில் வென்றது. அப்போது முதல்வராக எஸ்.எம். கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டார்.
அதன்பிறகு 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் 122 இடங்களில் வென்றது. அப்போது சித்தராமையா முதல்வரானார். அதன் பிறகு 2023 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி 135 இடங்களை பெற்று பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் தனது 5 ஆண்டு பதவிக்காலத்தை முழுமையாக முடித்தவர் சித்தராமையாதான் முதல் கர்நாடகா முதல்வர். அது போல் கர்நாடகா வரலாற்றில் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட முதல்வரும் அவரே ஆவார்.
அவருக்கு முன்பு 1972 ஆம் ஆண்டு 1977 ஆம் ஆண்டு வரை தேவராஜ் மட்டுமே தனது 5 ஆண்டு ஆட்சி காலத்தை முடித்துள்ளார். 1999 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி 133 தொகுதிகளில் வென்றாலும் 5 ஆண்டு காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. 1999 ஆம்ஆண்டு எஸ்.எம். கிருஷ்ணாவால் 2004 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியை தொடர வைக்க முடியவில்லை. பதவிக்காலம் முடிய 5 மாதங்களுக்கு முன்பே அந்த மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்துள்ளது.
1989 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி 178 இடங்களில் வென்றுள்ளது. 1972 ஆம் ஆண்டு 165 இடங்களிலும் 1957 ஆம் ஆண்டு 150 இடங்களிலும் 1978 ஆம் ஆண்டு 149 இடங்களிலும் 1962 ஆம் ஆண்டு 138 இடங்களில் 5 முறை காங்கிரஸ் கட்சி அருதி பெரும்பான்மை பெற்றது. அதன் பிறகு பாஜக வென்றாலும் அக்கட்சியால் 5 ஆண்டுகளை முழுமையாக ஆட்சி செய்ய முடியவில்லை.












Click it and Unblock the Notifications