கர்நாடகா தேர்தலில் மரண அடி வாங்கிய மஜத- கிங்மேக்கர் ரோல் அவுட்- இனி காங், பாஜக இடையே மட்டும் போட்டி!
பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியை இழந்திருந்தாலும் வாக்கு வங்கியை பறிகொடுத்து மிக மோசமான தோல்வியை எதிர்கொண்டிருப்பது தேவகவுடா குடும்பத்தின் மதச்சார்பற்ற ஜனதா தளம் எனும் ஜேடிஎஸ் கட்சிதான்.
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ்தான் அசைக்க முடியாத தனிப்பெரும் கட்சியாக இருந்தது. இதன்பின்னர் ஜனதா, ஜனதா தளம் ஆகியவை சவால்விட்டு நின்றன. இதன் நீட்சியாகவே மதச்சார்பற்ற ஜனதா தளம்- தேவகவுடா குடும்பத்தின் கட்சியாக உருமாறியது. அப்போது பாஜகவும் கர்நாடகா தேர்தல் களத்தில் வலுவாக காலூன்றி நின்றது.

1999-ம் ஆண்டு மஜத கட்சி உருவானது முதலே சொந்த பலத்தில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தது இல்லை. 2006-ம் ஆண்டு பாஜகவுடன் இணைந்து 20 மாதங்கள் ஆட்சியில் இருந்தது மஜத. 2018-ம் ஆண்டில் 14 மாதங்கள் மஜத அதிகாரத்தில் இருந்தது. தற்போது முடிவடைந்த தேர்தலில் 123 இடங்களை இலக்கா வைத்து களமிறங்கிப் பார்த்தது மஜத. ஆனால் பெற்றது என்னவோ வெறும் 19 இடங்கள்தான். 2004-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மஜத 58 இடங்களில் வென்றது; 2013-ம் ஆண்டு 43 இடங்களில் வென்றது. கர்நாடகா தேர்தல் வரலாற்றில் மஜத அதிகமாக இடங்களைப் பெற்றது இந்த இருமுறை மட்டும்தான். பொதுவாக மஜத கட்சிக்கு 18%-20% வாக்கு உள்ளதாக நம்பப்பட்டு வருகிறது. பழைய மைசூர் பிராந்தியம் எனப்படுகிற ஒக்கலிகா கவுடாக்கள் பெரும்பான்மையினராக இருக்கும் தொகுதிகளில் மட்டுமே கணிசமான இடங்களை மஜத பெறுவது வழக்கம். கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் மஜத 37 இடங்களில் வென்றதும் அப்படித்தான்.
ஆனால் தற்போதைய தேர்தலில் மஜதவின் எதிர்காலத்தையே பெரும் கேள்விக்குறியாக்கிவிட்டது. கர்நாடகவில் மஜதவின் இருப்பால் பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளுமே தனிப்பெரும்பான்மை குறித்த சந்தேகங்களைக் கொண்டிருந்தன. இதனால் எப்படியும் தாங்கள்தான் கிங் மேக்கர் என்ற கனவுடன் வலம் வந்து கொண்டிருந்தது கவுடா குடும்பம்.

இத்தேர்தலோ, மஜதவின் இந்த கிங் மேக்கர் கனவுக்கு சமாதிகட்டிவிட்டது என்பதுதான் யதார்த்தம். மஜதவின் கோட்டையான பழைய மைசூர் மண்டலத்தில் காங்கிரஸின் மூவர்ணக் கொடிதான் பட்டொளி வீசிப் பறக்கிறது. மஜதவின் வாக்கு வங்கியில் 5%-த்தை அப்படியே காங்கிரஸ் கபளீகரம் செய்துவிட்டது. இது காங்கிரஸ் அதிகமான இடங்களில் வெல்வதற்கு வழிவகுத்துவிட்டது. இத்தேர்தலின் முடிவுகள் மஜத- இனி கிங்மேக்கர் கனவே காண முடியாத அளவுக்கு மரண அடியைக் கொடுத்துவிட்டது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இதனால் கர்நாடகா தேர்தல் களமானது இனி காங்கிரஸ்- பாஜக என்கிற இரு துருவ அரசியலாகத்தான் இருக்கப் போகிறது என்கிற ஆரூடங்களும் முன்வைக்கப்படுகின்றன. ஏனெனில் தேவகவுடாவுக்குப் பின் அவரது மகன் குமாரசாமி ஓரளவு ஜேடிஎஸ்-க்கு வெற்றியைத் தரக்கூடிய தலைவராக இருந்து வருகிறார். ஆனால் குமாரசாமிக்குப் பின்னர் மஜத கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறி. அவரது மகன் நிகில், லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு தோற்றுதான் போனா. ஏற்கனவே தேவகவுடா குடும்பத்தில் பெரும்பாலானவர்கள் எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், எம்எல்சிக்கள் என அதிகாரத்தில் குளித்துக் கொண்டிருப்பவர்கள். இப்போதைய தேர்தலில் மஜத வாங்கியிருக்கும் மரண அடியில் இருந்து அக்கட்சி மீண்டும் எழ முயற்சிக்கலாம்.. ஆனால் கிங்மேக்கர் கனவு எல்லாம் காண்பது பகல் கனவாகிவிடும் எனவும் எச்சரிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications