"ஐயோ, தெரியாம பேசிட்டேன்.." இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க யூடியூபர்.. வாங்கிய அடி அப்படி!
பெங்களூர்: கர்நாடகாவில் நடைபெறும் சாணம் எறியும் நிகழ்ச்சி தொடர்பாகச் சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட அமெரிக்க யூடியூபரை இந்தியர்கள் சேர்ந்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். இந்தியர்களைக் காயப்படுத்தும் நோக்கம் இல்லை என அவர் விளக்கமளித்துள்ளார். இருப்பினும், அதில் அவர் இன்னொரு சர்ச்சை கருத்தையும் கூறியிருக்கிறார். அது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இருப்பினும், அதில் சிலர் வேண்டும் என்றே இந்தியா குறித்து மோசமான வீடியோக்கள் அல்லது போட்டோக்களை போட்டு லைக்ஸ் மற்றும் வியூஸ்களை பெற முயல்கிறார்கள். இதற்காக அவர்கள் பல சர்ச்சை கருத்துகளையும் சொல்கிறார்கள்.

அமெரிக்க யூடியூபர்
அப்படி இந்தியாவுக்குச் சுற்றிப் பார்க்க வந்தவர் தான் அமெரிக்க யூடியூபர் டைலர் ஒலிவேரா. இவர் கடந்த மாதம் கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் பாரம்பரிய மாட்டுச் சாணம் வீசும் நிகழ்வில் கலந்து கொண்டார். இருப்பினும், அது தொடர்பாக அவர் சில சர்ச்சை கருத்துகளைக் கூறியிருந்தார். பாரம்பரிய நிகழ்வு குறித்து அவர் சர்ச்சை கருத்துகளைக் கூறியதால் நெட்டிசன்கள் பலரும் அவருக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
அந்தக் கிராமத்தில் தீபாவளி பண்டிகையின் முடிவைக் குறிக்கும் வகையில் நடத்தப்படும் இந்தச் சடங்கில் டைலரும் கலந்து கொண்டார். அப்போது அவர் சில சர்ச்சை கருத்துகளைக் கூறியிருந்தார். இதனால் நெட்டிசன்கள் பலரும் அவருடைய கருத்துகள் இனவெறி ரீதியாக இருப்பதாக விமர்சித்திருந்தனர். இந்தச் சூழலில் தான் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த டைலர், சாணம் எறியும் திருவிழாவைப் படமாக்குவதால் மட்டும் தன்னை இனவெறி பிடித்தவன் எனச் சொல்வதில் நியாயம் இல்லை என்றார்.
சர்ச்சை
இருப்பினும், பல ஆயிரம் இந்தியர்கள் தன்னை அச்சுறுத்தியதாகவும் மிரட்டல் விடுக்கும் மெசேஜ்களை அனுப்பியதாகவும் கூறிய டைலர், இதனால் அந்த குறிப்பிட்ட வீடியோவை வெளியிடப் போவதில்லை என்றும் அவர் அறிவித்தார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் மேலும், "நீண்ட யோசனைக்குப் பிறகு, இந்தியாவில் சாணம் எறியும் திருவிழாவைப் பற்றி நான் எடுத்த வீடியோவை வெளியிட வேண்டாம் என முடிவெடுத்துள்ளேன்.
கடந்த 2 வாரங்களாகப் பல ஆயிரம் இந்தியர்கள் என்னை மிரட்டினார்கள். இந்தியர்கள் எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டனர். நானும் எனது குடும்பமும் கற்பனை கூடச் செய்யாத வழிகளில் என்னைத் தாக்கினர்.. இந்த திருவிழாவில் கலந்துகொண்டது தான் நான் எனது வாழ்க்கையில் செய்த மிக மோசமான முடிவாக இருக்கும் என நினைக்கிறேன்.
விளக்கம் கொடுத்து வீடியோ
எனது அழிவை விரும்பும் 1.5 பில்லியன் இந்தியர்களின் ஒருங்கிணைந்த சக்தியை என்னால் தோற்கடிக்க முடியாது. இந்தப் போரை என்னால் தொடர முடியாது, என் போர்களை நான் தேர்வேன். இந்த விவகாரம் நான் போராடத் தகுதியானது அல்ல" என்று மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மேலும், இந்தியர்களையோ, அவர்களின் மதத்தையோ, கலாச்சாரத்தையோ புண்படுத்தும் நோக்கம் ஒருபோதும் தனக்கு இல்லை என்றும் இந்த வித்தியாசமான சாணம் எறியும் திருவிழாவை உலகிற்குக் காட்டவே விரும்பியதாகவும் தெரிவித்தார்.
பின்னணி
சாணம் எறியும் விழாவில் சூட் மற்றும் கண்ணாடிகளை அணிந்தபடி டைலர் பங்கேற்றார். "இந்தியாவின் சாணம் எறியும் திருவிழாவில் நான் கஷ்டப்பட்டு உயிர் பிழைத்தேன்" என்று அவர் வீடியோவை பகிர்ந்த நிலையில், அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அத்தோடு நிற்காமல் இந்த விழாவில் பங்கேற்றதால் தனக்கு உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லி போட்டோக்களை பகிர்ந்து வந்தார்.
யாரும் அவரை வலுக்கட்டாயமாக அந்த நிகழ்வில் கலந்து கொள்ளச் சொல்லவில்லை. அவராக விரும்பி கலந்து கொண்டு, பிறகு இதுபோல கலாச்சாரத்தை அவமதித்ததாக அந்த யூடியூபர் மீது நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.












Click it and Unblock the Notifications