‛குபேரர்கள்’.. கோடிகளில் புரளும் பெங்களூர் சட்டசபை தொகுதி வேட்பாளர்கள்! வாய்பிளக்க வைக்கும் லிஸ்ட்
பெங்களூர்: பெங்களூர் நகரில் மொத்தம் 28 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக மற்றும் ஜேடிஎஸ் சார்பில் மும்முனை போட்டி நிலவுகிறது. பெங்களூரில் போட்டியிடும் வேட்பாளர்கள் குபேரர்களாக உள்ள நிலையில் அவர்களின் சொத்து மதிப்பு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். கடந்த 2018 ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்த நிலையில் 5 ஆண்டு ஆட்சி காலம் மே மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதனால் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே மாதம் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மே 13ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. தற்போது வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
இந்நிலையில் தான் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் பெங்களூரில் உள்ள 28 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில் அவர்களின் சொத்து மதிப்பு விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி தற்போது வரை பெங்களூர் நகரில் உள்ள சட்டசபை தொகுதிகளில் வேட்புமனுத்தாக்கல் செய்தவர்களின் சொத்து விபரங்கள் வருமாறு:
பிரியா கிருஷ்ணா: பெங்களூர் நகரை பொறுத்தமட்டில் கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களில் கோவிந்தராஜ் நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பிரியா கிருஷ்ணா தான் அதிக சொத்து உள்ளது. இவர் காங்கிரஸ் சார்பில் கோவிந்தராஜ் நகர் தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவரது சொத்து மதிப்பு ரூ.1,156.83 கோடியாக உள்ளது.
கிருஷ்ணப்பா: அதேபோல் பிரியா கிருஷ்ணாவின் தந்தையான கிருஷ்ணப்பா தற்போது விஜயநகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக உள்ளார். மீண்டும் விஜயநகரில் அவர் போட்டியிடும் நிலையில் அவரது சொத்து மதிப்பு ரூ.400 கோடியாக உள்ளது. இந்த விஜயநகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான ரவீந்திரனுக்கு ரூ.15.62 கோடி சொத்து இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேஜே ஜார்ஜ்: மேலும் சர்வக்ஞநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சிட்டிங் எம்எல்ஏவும், முன்னாள் உள்துறை அமைச்சருமான கேஜே ஜார்ஜ் போட்டியிடுகிறார். இவரது சொத்து மதிப்பு 214.11 கோடியாக இருக்கிறது. 2018ல் அவரது சொத்து ரூ.80.36 கோடியாக இருந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.133.75 கோடி சொத்துக்கள் அதிகரித்துள்ளன.
ராமலிங்க ரெட்டி: மேலும் பிடிஎம் லேஅவுட் தொகுதி சார்பில் சிட்டிங் எம்எல்ஏ ராமலிங்கரெட்டி மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இவருக்கு ரூ.110.66 கோடி சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ல் ராமலிங்க ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.66.59 கோடியாக இருந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.44.07 கோடி என்ற அளவில் சொத்து அதிகரித்துள்ளது.
சிக்பேட்டை வேட்பாளர்: இதுதவிர சிக்பேட்டை சட்டசபை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஆர்வி தேவராஜ் போட்டியிடுகிறார். இவர் தன்னிடம் ரூ.97.83 கோடிக்கு சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இவர் பிஎம்டபிள்யூ, கியா உள்பட 5 கார்கள் வைத்துள்ளார். இவருக்கு ரூ.22.5 கோடி கடன் உள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். அதேபோல் இந்த தொகுதியில் காங்கிரசில் போட்டியிட சீட் கேட்டுவந்த கேஜிஎப் பாபு, தனது மனைவி சாஜியா தரணத்தை சுயேச்சையாக களம் இறக்கி உள்ளார். இவர்களின் சொத்து மதிப்பு ரூ.1,662 கோடியாக இருக்கிறது. சாஜியா, கர்நாடக பணக்கார வேட்பாளர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்
பொம்மனஹள்ளி வேட்பாளர்: பொம்மனஹள்ளி சட்டசபை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் உமாபதி சீனிவாச கவுடாவுக்கு ரூ.74.2 கோடி சொத்து இருப்பதாக அறிவித்துள்ளார். திரைப்பட தயாரிப்பாளரான உமாபதி சீனிவாச கவுடா நடிகர் தர்ஷனுக்கு 2 கோடியும், சிக்கண்ணாவுக்கு ரூ.26 லட்சமும் கடனாக கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் ரூ.31 கோடி கடன் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார். பெங்களூர் தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்கே ரமேஷ் தன்னிடம் ரூ.94.69 கோடி சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். தன்னிடம் 772 கிராம் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பதாகவும், ரூ.31.70 கோடி கடன் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜமீர் அகமது கான்: சாம்ராஜ்பேட்டை சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சிட்டிங் எம்எல்ஏ ஜமீர் அகமது கான் போட்டியிடுகிறார். இவர் தன்னிடம் ரூ.73.61 கோடிக்கு சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 2018 தேர்தலில் ரூ.40.45 கோடி சொத்து இருப்பதாக அவர் தெரிவித்த நிலையில் 5 ஆண்டுகளில் ரூ.33.16 கோடி வரை சொத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ண பைரே கவுடா: பெங்களூர் பேடராயனபுரா காங்கிரஸ் வேட்பாளராக சிட்டிங் எம்எல்ஏ கிருஷ்ண பைரேகவுடா போட்டியிடுகிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.16.8 கோடியாக இருக்கிறது.இதில் மனைவி மீனாட்சி சேஷாத்ரியின் சொத்து ரூ.9.96 கோடியாகும். கிருஷ்ண பைரேகவுடாவுக்கு ரூ.6.62 கோடி மட்டுமே உள்ளது. ரூ.95.21 லட்சம் வரை கடன் இருப்பதாக அவர் தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.
அனூப் அய்யங்கார்: மல்லேஸ்வரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக தமிழரான அனுப் அய்யங்கார் போட்டியிடுகிறார். இவர் ரூ.4.33 கோடி சொத்து வைத்திருப்பதாக அறிவித்துள்ளார். இருப்பினும் அனூப் அய்யங்கார் மற்றுமு் அவரது மனைவியின் பெயரில் வீடு இல்லை எனவும், ரூ.2.46 கோடி கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சுரேஷ் குமார்: பெங்களூர் ராஜாஜிநகர் சட்டசபை தொகுதி சிட்டிங் எம்எல்ஏவான சுரேஷ் குமார் மீண்டும் பாஜகவில் போட்டியிடுகிறார். இவர் ரூ.4.78 கோடி சொத்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். சுரேஷ்குமாருக்கு தங்க நகைகள் இல்லை. மனைவியிடம் ரூ.9 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளும், தாயிடம் ரூ.3.65 லட்சம் நகைகளும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கேசி ராமமூர்த்தி: ஜெயநகர் சட்டசபை தொகுதியில் பாஜக சார்பில் கேசி ராமமூர்த்தி போட்டியிடுகிறார். இவரிடம் ரூ.33 கோடி சொத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிந்தராஜ் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் உமேஷ் ஷெட்டிக்கு ரூ.30 கோடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஞ்சுளா லிம்பாவலி: மகாதேவபுரா சட்டசபை தொகுதி சிட்டிங் எம்எல்ஏவாக பாஜகவின் அரவிந்த் லிம்பாவளி இருந்தார். இவருக்கு பாஜக டிக்கெட் கொடுக்க மறுத்தது. மாறாக அவரது மனைவி மஞ்சுளா லிம்பாவளிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மஞ்சுளா லிம்பாவளிக்கு ரூ.53 கோடி சொத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைரதி பசவராஜ்: கேஆர் புரம் சட்டசபை தொகுதி சிட்டிங் எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருப்பவர் பைரதி பசவராஜ். இவருக்கு ரூ.118.44 கோடிக்கு சொத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரிடம் பென்ஸ், டுயோட்டா, ஆடி க்யூ7 உள்பட பல கார்கள் உள்ளன. மேலும் 8 கிலோ தங்கம், ரூ.47.92 லட்சம் மதிப்புள்ள 54 கிலோ வெள்ளி, ரூ.86.86 லட்சம் மதிப்புள்ள வைரமும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
****












Click it and Unblock the Notifications