பஜ்ரங் தள் அமைப்பு விவகாரம்.. கர்நாடக காங்.தேர்தல் அறிக்கைக்கு சொந்த கட்சி தலைவரே எதிர்ப்பு
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் பஜ்ரங் தள் அமைப்பை தடை செய்வோம் என்று கூறியுள்ள நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி., இதற்கு நேர்மாறாக கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் கர்நாடக தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது. ஆளும் பாஜக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளன.

பல இலவச வாக்குறுதிகளை இரு கட்சிகளும் போட்டி போட்டி அறிவித்துள்ளன. இதற்கிடையே, இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரம் இந்த தேர்தலில் பிரதானமான விவாதமாக அமைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி , இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வருவோம் என்று கூறியுள்ளது.
அதேபோல், பஜ்ரங் தள் அமைப்பிற்கு தடை விதிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுஇருப்பதாவது:-கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் மதம் அல்லது ஜாதி ரீதியான மோதல்களை ஏற்படுத்தக் கூடிய தனிநபர்கள் அல்லது இயக்கங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பஜ்ரங் தள், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட இயக்கங்கள் சட்டத்தை மீறி செயல்படுவதை அனுமதிக்க முடியாது. ஆகையால் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இத்தகைய இயக்கங்களுக்கு தடை விதித்த உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று கூறப்பட்டு இருந்தது.
பஜ்ரங் தள் அமைப்பு தடை விதிக்கப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு கடும் எதிர்ப்புகளை வலதுசாரி அமைப்புகளும் ஆதரவாளர்களும் கூறி வருகின்றன. இதனால், இந்த விவகாரமும் கர்நாடக தேர்தல் களத்தில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பஜ்ரங் தள் அமைப்பிற்கு தடை விதிக்கப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு சொந்த கட்சியில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான வீரப்ப மொய்லி இது குறித்து கூறியிருப்பதாவது:- எங்கள் தேர்தல் அறிக்கையில் பி.எப்.ஐ மற்றும் பஜ்ரங் தள் ஆகிய இரண்டு அமைப்புகளை பற்றியும் கூறியிருக்கிறோம். இந்த இயக்கங்களுக்கு தடை விதிப்பது மாநில அரசால் சாத்தியம் கிடையாது.
டிகே சிவக்குமார் இன்னும் தெளிவுபடுத்த வேண்டும். இந்த திட்டம் எங்கள் முன் இல்லை. வெற்ப்பு அரசியலை நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. பஜ்ரங் தள் அமைப்பை தடை செய்வது என்ற திட்டம் எங்களிடம் இல்லை. ஒரு தலைவராக இதை கூறுகிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications