பெங்களூருவில் தாம்பத்தியத்திற்கு மறுத்த கணவன்.. புதுப்பெண் இருந்த கோலம்.. ஆடிப்போக வைத்த பின்னணி
பெங்களூர்: வரதட்சணை என்பது சமூகத்தில் பெரிய சிக்கலாக இருக்கிறது. பல குடும்பங்களில் சாதாரணமாக கேட்கப்படுகிறது. ஆனால் இன்னமும் அது பல குடும்பங்களை நேரடியாக பாதித்து வருகிறது. பெங்களூருவில் கூடுதல் வரதட்சணை கேட்டு தாம்பத்தியத்தில் ஈடுபட மறுத்ததால் புதுப்பெண் எடுத்த முடிவு உறவினர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. அவரது உடலுடன் கணவர் வீட்டு முன் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
பெங்களூரு வித்யாரண்யபுரா பகுதியில் சூரஜ் என்பவர் வசித்து வருகிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் சூரஜ் வேலை பார்த்து வருகிறார். இவர் பி.சன்னசந்திராவை சேர்ந்தவர் கானவி (24) என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் கடந்த அக்டோபர் மாதம் 29- ந் தேதி திருமணம் செய்தார், சூரஜ், கானவி திருமணம் அரண்மனை மைதானத்தில் பிரம்மாண்டமாக நடந்தது.

வரதட்சணை உள்பட திருமணத்துக்காக கானவி குடும்பத்தினர் ரூ.40 லட்சத்துக்கு மேல் செலவு செய்துள்ளார்களாம். பின்னர் புதுமண தம்பதி தேனிலவுக்காக இலங்கைக்கு சென்றிருந்தனர். 10 நாட்கள் அங்கு தங்கி இருக்க திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால் தேனிலவை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு 5 நாட்களிலேயே அவர்கள் இலங்கையில் இருந்து பெங்களூருவுக்கு திரும்பி வந்து விட்டார்களாம்.
இலங்கையில் இருந்து பெங்களூரு திரும்பிய உடன் கானவி குடும்பத்தினரிடம், தன்னிடம் கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறியுள்ளார். அதுபோல், சூரஜின் தாய் ஜெயந்தி, அண்ணன் சஞ்சய்யும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும் பெற்றோரிடம் கானவி கவலையுடன் தெரிவித்துள்ளாராம். இதுபற்றி சூரஜ், அவரது குடும்பத்தினரிடம் கானவியின் பெற்றோர் கேட்டிருக்கிறார்கள்.
இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் உண்டானது. மேலும் கானவியை உங்களது வீட்டுக்கு அழைத்து செல்லும்படி சூரஜ் குடும்பத்தினர் தெரிவித்தனர். அதன்படி, கானவியும் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டாராம். பின்னர் கடந்த 24-ந்தேதி இரவு தனது வீட்டில் கானவி தூக்கிட்டார். இதில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று கானவி இறந்து விட்டார்.
நேற்று மதியம் கானவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாலை அந்த உடலை குடும்பத்தினர் நேரடியாக சூரஜ் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார்கள். பின்னர் சூரஜ் வீட்டின் முன்பாக கானவி உடலை வைத்து பெற்றோர், குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் கானவி உடலை அங்கிருந்து எடுத்து சென்றனர். கானவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சூரஜ் கொடுமைப்படுத்தியதுடன், பெற்றோர் வீட்டில் இருந்து நகைகள், பணத்தை வாங்கி வரும் வரை தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுபோன்ற காரணங்களால் கானவி வாழ்க்கையை முடித்துக் கொள்ள முயன்றதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ராமமூர்த்திநகர் போலீசார் சூரஜ், ஜெயந்தி, சஞ்சய் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.












Click it and Unblock the Notifications