பெங்களூரில் அமைகிறது புதிய வெளிவட்ட சாலை! 1.5 மணி நேர பயணம் நேரம் இனி 10 நிமிடமாகும்
பெங்களூர்: பெங்களூரில் புதிதாக அமையும் 10 வழிச்சாலையால் சல்லகட்டா முதல் கடபக்ரே கிராஸ் வரையிலான பயண நேரம் ஒன்றரை மணி நேரத்திலிருந்து 10 நிமிடங்களாக குறையும். இந்த சாலை ஓரிரு மாதங்களில் பயன்பாட்டுக்கு வருகிறது.
சென்னை, பெங்களூர் உள்ளிட்ட மாநகரங்களில் டிராபிக் இல்லாத போக்குவரத்து என்பது சாத்தியம் இல்லாத நிலையாக இருக்கிறது. வீட்டிற்கு 4 கார்கள் உள்ளதால், ஆளுக்கொரு காரில் செல்வதால் சாலைகளில் டிராபிக் ஏற்படுகிறது.

இந்த போக்குவரத்து நெரிசலை போக்க புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பெங்களூரில் புதிய 10 வழி வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த 10 வழிச்சாலையானது மைசூர் ரோட்டில் உள்ள சல்லகட்டா மெட்ரோ டிப்போ ஏரியாவிலிருந்து மாகடி ரோட்டில் உள்ள கடபக்ரே கிராஸ் வரை பயணிக்கிறது. ஏற்கெனவே மேற்கண்ட பகுதிகளுக்கு சுங்கக் கட்டணம் செலுத்தி பயன்படுத்தப்பட்டு வரும் நைஸ் (NICE) வெளிவட்டச் சாலை, இந்த 10 வழிச்சாலையிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
இந்த புதிய சாலை சுங்க கட்டணம் இல்லாத சாலையாகும். பொதுவாக சல்லகட்டா முதல் கடபக்ரே கிராஸ் வரை பயணிக்க தற்போது 1.5 மணி நேரமாகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவிக்கிறார்கள். ஆனால் தற்போது அமைக்கப்பட்டு வரும் 10 வழிச்சாலையால் இரு மார்க்கங்களையும் வெறும் 10 நிமிடங்களில் அடையலாம்.

இந்த சாலை கம்பிபூரா, கிருஷ்ண சாகர், பீமனகுப்பம், கோம்மகட்டா, கெஞ்சனாபுரம், சுலிகேரே ஆகிய கிராமங்கள் வழியாக செல்கிறது.
இதற்காக 321.1 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் சுலிகேரே பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது. அங்கு 2 ஏக்கர் வனப்பகுதியை கையகப்படுத்த வனத்துறையின் அனுமதிக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. இந்த அனுமதி கிடைத்தவுடன் புதிய சாலை ஓரிரு மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என சொல்லப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு ஆரம்பத்தில் ரூ. 465 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதை முடிக்க தற்போது வரை ரூ. 585 கோடி செலவாகியுள்ளது. இந்த வழியில் டோல்கேட்டுகள் ஏதும் இல்லை என்பதால் சுங்க வரி கட்டணம் இல்லாத சாலையாக இது கருதப்படுவதால் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என பொதுமக்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.
மேலும் தினந்தோறும் பல்வேறு அலுவல்களுக்காக மேற்கண்ட இரு மார்க்கங்களுக்கு செல்ல போக்குவரத்து சிக்கல், பயண நேர தூரம் உள்ளிட்டவையால் கடும் அவதிப்பட்டு வரும் மக்களுக்கு இந்த புதிய வெளிவட்ட சாலை மிகவும் பயனுள்ளதாக அமையும்.
புல்லட் ரயில் : சென்னை- மைசூர் இடையே இந்தியாவின் இரண்டாவது புல்லட் ரயில் திட்டமும் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் திட்டம் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டங்களும் நடத்தப்படவுள்ளன. இந்த புல்லட் ரயில் சென்னை, பெங்களூர், மைசூர் ஆகிய நகரங்களை இணைக்கும். இது தமிழகம், கர்நாடகா மாநிலங்களில் 9 ரயில் நிலையங்கள் வழியாக இணைக்கப்படும். இது மொத்தம் 435 கி.மீ. தூரம் கொண்டது. ராஜா முத்தையா ரோடு முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் இடையே புல்லட் ரயில் இயக்கப்படும்.












Click it and Unblock the Notifications